இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய முன்னாள் அமைச்சருமான இ.அஹ்மத், 01.02.2017. புதன்கிழமையன்று - புதுடில்லியில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 78.
அன்னாரின் ஜனாஸா, அன்று 17.00 மணியளவில் விமானம் மூலம் கேரளாவிற்குக் கொண்டு வரப்பட்டு, 18.00 மணி முதல் 22.00 மணி வரை கோழிக்கோடு விமான நிலையத்திலிருந்து - அதன் அருகில் அமைந்திருக்கும் ஹஜ் ஹவுஸ் வளாகத்திலும், பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகம் அமைந்துள்ள லீக் ஹவுஸ் வளாகத்திலும் பொதுமக்கள் பார்வைக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. இவ்விரு இடங்களிலும், மலபார் காயல் நல மன்ற அங்கத்தினர் உள்ளிட்ட காயலர்கள் சென்று, ஜனாஸாவைப் பார்த்து வந்தனர்.
மறுநாள் - 02.02.2017. வியாழக்கிழமையன்று, 12.00 மணிக்கு, கண்ணனூர் சிட்டி ஜாமிஆ பள்ளியில் - கேரள மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஹைதர் அலீ ஷிஹாப் தங்ஙள் வழிநடத்தலில் தொழுகை நடத்தப்பட்டு, அங்குள்ள மையவாடியில் - இராணுவத்தினர் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில துணைச்செயலாளர் எஸ்.ஏ. எஸ்.ஏ.இப்ராஹிம் மக்கீ, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரரசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரீ,
ஹாங்காங் காயிதே மில்லத் பேரவை செயலாளர் ஹாஃபிழ் வி.எம்.டீ.முஹம்மத் ஹஸன், தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், காயல்பட்டினம் அங்கத்தினரான என்.டீ.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ, எஸ்.கே.ஸாலிஹ் உட்பட சமுதாயப் பிரமுகர்கள், உலமாக்கள் உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
நீண்ட நேரம் காத்திருந்தும், மக்கள் கூட்டங்கூட்டமாக வந்தவண்ணம் இருந்ததால், நல்லடக்கத்திற்குப் பிறகும் பலமுறை ஜனாஸா தொழுகை நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், கேரளாவின் இ.யூ.முஸ்லிம் லீக், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் பிரமுகர்கள் இரங்கல் உரையாற்றினர்.
படங்களுள் உதவி:
ஹாஃபிழ் V.M.T.முஹம்மத் ஹஸன் |