காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில், தனியார் நிலங்களிலுள்ள சீமைக் கருவேல மரங்களை விரைந்து அகற்றி, இரு மடங்கு கட்டண வசூலைத் தவிர்த்திடுமாறு, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வெ.அறிவுச் செல்வன் அறிவித்துள்ளார். இதுகுறித்த அவரது தகவலறிக்கை:-
மேன்மைமிகு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தூத்துக்குடி மாவட்டம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகள், அரசு நிலங்கள், நீர்நிலைகள், குளங்கள், ஓடைகள், சாலையோர பகுதிகள், அரசு அலுவலக வளாகங்கள் என - மாவட்டத்திலுள்ள அனைத்து இடங்களிலும் உள்ள அனைத்து சீமைக் கருவேல மரங்களையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், காயல்பட்டினத்திலும் கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி நகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் - தனியார் நிலங்களிலுள்ள சீமைக் கருவேல மரங்களை நில உரிமையாளர்கள் அவர்களாகவே அகற்றாவிடில், அரசே அகற்றி – அதற்காகச் செலவாகும் தொகை இரு மடங்காக நில உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, இத்தகவல் தனியார் நில உரிமையாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட ஆட்சியரது அறிவிப்பின் படி, தனியார் நிலங்களின் உரிமையாளர்கள் அனைவரும் தங்கள் இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை உடனே அகற்றி மேன்மைமிகு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை நடைமுறைப்படுத்திட மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஆதரவு தரவேண்டும்.
2017 பிப்ரவரி 10ஆம் நாளுக்குள், சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்காக மாவட்ட நிர்வாகம் எடுத்த மேல் நடவடிக்கை அறிக்கையை மேன்மைமிகு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால், காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பட்டா நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை நில உடைமையாளர்கள் தாமாகவே முன்வந்து அகற்றாவிட்டால் அரசாங்கமே செலவு செய்து அகற்றும். அதற்காக செலவழிக்கப்பட்ட தொகை இரண்டு மடங்காக நில உடைமையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
M.M.முஜாஹித் அலீ
|