தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், காயல்பட்டினத்தில், 22.01.2017. ஞாயிற்றுக்கிழமையன்று, “முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” எனும் தலைப்பில் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலுமிருந்தும், அண்மை மாவட்டங்களிலிருந்தும் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். இதுகுறித்து பெறப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
இறைத்தூதர் முஹம்மத் நபியின் வாழ்க்கை நெறியை முஸ்லிம் மக்கள் முழுமையாகப் பின்பற்றி நடக்க வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டு, “அழகிய முன்மாதிரி முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” எனும் தலைப்பில் தூத்துக்குடி மாவட்ட மாநாடு 22.01.2017. ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. 16.00 மணிக்கு மாநாட்டு நிகழ்ச்சிகள் துவங்கின.
பள்ளி மாணவ-மாணவியர், தீனிய்யாத் மாணவ-மாணவியரின் பல்சுவை மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
காயல்பட்டினம் அந்நஸீஹா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் மாணவியர் 'நரகிற்கு அழைத்துச் செல்லும் நவீன வணக்கங்கள்' என்ற தலைப்பில் விளக்கவுரையாற்றினர்.
“பெரியார்களின் வழியா? பெருமானாரின் வழியா?” எனும் தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளர் அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸீ உரையாற்றினார்.
தொடர்ந்து, அந்நஸீஹா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியில் ஈராண்டு பாடத் திட்டத்தின் கீழ் படித்துத் தேர்ச்சி பெற்ற 4 மாணவியருக்கும், தீனிய்யாத் பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்ற 11 மாணவ-மாணவியருககும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
“தமிழகம் கண்ட தவ்ஹீத் புரட்சி” எனும் தலைப்பில் அமைப்பின் மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் ரஹ்மத்துல்லாஹ் உரையாற்றினார்.
“வஹீயால் வழிநடத்திய உத்தம தூதர்” எனும் தலைப்பில், ததஜ மாநில தலைவர் ஃபக்கீர் முஹம்மத் அல்தாஃபீ உரையாற்றினார்.
ததஜ காயல்பட்டினம் நகர கிளை தலைவர் ஷம்சுத்தீன் - மாநாட்டுத் தீர்மானங்களை வாசிக்க, நன்றியுரையைத் தொடர்ந்து கஃப்ஃபாராவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இம்மாநாட்டில், காயல்பட்டினம் உட்பட - தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், சுற்றுப்புற மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். மகளிருக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
தீர்மானங்கள்:
1) இறைவன் மன்னிக்காத இணைவைப்பை விட்டுப் முஸ்லிம்கள் முற்றிலுமாக புறக்கணித்து லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற திரு கலிமாவின் முழு விளக்கத்தையும் இங்கு கூடி இருக்கும் அனைவரும் தாமும் கடைப்பிடித்து அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என இம்மாநாடு மூலம் கேட்டுக் கொள்கிறோம்.
2) காயல்பட்டினம் நகராட்சியில் கடந்த ஐந்து வருடங்களாக நீடிக்கும் செயல்பாடற்ற தன்மையால் ஊரின் அனைத்து சாலைகளும் பழுதடைந்து பொதுமக்கள் நடப்பதற்கே சிரமப்படும் நிலையில் உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப் படுவதோடு ஊரின் அனைத்து பகுதிகளும் தூசுப்படலமாக மாறி பொதுமக்களும் நோயாளிகளும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றன. ஆகவே இவ்விஷயத்தில் நகராட்சி நிர்வாகம் உடனடியாக போர்கால அடிப்படையில் சாலைகளை சீரமைக்க வேண்டுமென இம்மாநாட்டின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
3) காயல்பட்டினத்தில் பல வருடங்களாக குடிநீர் பிரச்சினை தீராத ஒன்றாகவே இருந்து வருகிறது. தற்போது ஊரின் பல பகுதிகளுக்கு குடிநீர் வருவதே இல்லை. இதனால் பொதுமக்கள் அன்றாட குடிநீர் தேவைக்காக மிகவும் துன்பப்படுகிறார்கள்.
ஊரின் குடிதண்ணீர் பஞ்சத்தை போக்குவதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநாட்டின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.
4) காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரங்களின் பல பகுதிகளில் கஞ்சா மற்றும் அரசினால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களின் நடமாட்டம் அதிகமாகியுள்ளது.
இதனால் காயல்பட்டினத்தில் கண்ணியம் பாதிக்கப்படுவதோடு, இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி சீரழிகிறார்கள். இன்றைய சமூகத்தின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு காவல்துறையின் உயர்அதிகாரிகள் இவ்விசயத்தில் தீவிர கவனம் செலுத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இம்மாநாட்டின் வாயிலாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
5) பல்லாயிரக்கணக்காண மக்கள் வசிக்கின்ற காயல்பட்டினத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையின் தரத்தினை நல்ல முறையில் உயர்த்த வேண்டுமென இம்மாநாட்டின் வாயிலாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
6) பல்லாயிரக்கணக்காண மக்கள் வசிக்கின்ற காயல்பட்டினத்தில் போக்குவரத்து அதிகாரிகளின் உத்திரவுக்கு மாற்றமாக இரவு நேரங்களில் ஊருக்குள் வராமல் செல்லும் பேருந்துகளின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க இம்மாநாட்டின் வாயிலாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
7) மத்திய மற்றும் மாநில அரசின் வேலைவாய்புகளில் பின்தங்கி உள்ள இஸ்லாமிய மக்களுக்காக இந்திய ஆட்சி பணி, குரூப் 1, குரூப் 2, உள்பட அனைத்து தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை காயல்பட்டினத்தில் ஏற்படுத்த வேண்டுமென இம்மாநாட்டின் வாயிலாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
8) இந்திய ஒருமைப்பாடு மற்றும் மதசார்பின்மையை சீரழிக்கும் விதமாக பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சி செய்யும் மத்திய அரசின் கொள்கையை இந்த மாநாட்டின் வாயிலாக வன்மையாக கண்டிக்கிறோம்.
9) காயல்பட்டினம் இரயில்வே நிலையத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் மற்றம் இன்ன பிற அதிக பெட்டிகளை கொண்ட இரயில்களில் பயணிகள் ஏறி இறங்கும் விதமாக நடைமேடையை நீளப்படுத்திட வேண்டும் என இரயில்வே நிர்வாகத்தை இம்மாநாட்டின் மூலம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
10) ரெங்கநாத் மிஸ்ரா மற்றும் சச்சார் கமிஷன் அறிக்கையில் உள்ள பரிந்துரையின் அடிப்படையில் மத்திய மாநில அரசுகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகபடுத்தி தர வேண்டுமென இம்மாநாட்டின் வாயிலாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
11) தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா அவர்கள் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிக படுத்தி தருவேன் என வாக்களித்ததை நிறைவேற்ற தற்போதைய தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இம்மாநாட்டின் வாயிலாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
12) இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மக்களுக்கு கலாச்சாரம் மற்றும் மத வழிபாடுகளில் வழங்கியுள்ள உரிமைகளில் நீதிமன்றங்கள் தலையிடாமல் இருக்கவேண்டுமென இம்மாநாட்டின் வாயிலாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
13) இந்திய திருநாட்டின் பாரம்பரியமாய் இருக்கும் கலாச்சார மற்றும் மத வழிபாடுகளில் பண்டிகை மற்றும் இன்ன பிற காலங்களில் தலையிட்டு மக்கள் மத்தியில் அசாதாரண சூழ்நிலையையும் பதட்டத்தையும் ஏற்படுத்தும் பீட்டா, ப்ளூ கிராஸ் அமைப்புகளை உடனடியாக தடை செய்ய வேண்டுமென இம்மாநாட்டின் வாயிலாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
14) கருங்குளம் கொங்கராயகுறிச்சி இடையேயான தாமிரபரணி ஆற்றின் மேல் வரும் உயர் மட்ட பால பணிகள் தொடங்கப்பட்டு சுமார் 80மூ பணிகள் முடிக்கப்பட்டு மீதி 20 சதவிகிதம் பணிகள் முடிக்காமல் கடந்த 6 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான பாலம் பணிகளை உடனடியாக தொடங்கி விரைவாக பாலத்தினை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்பாடு செய்யுமாறு தமிழக அரசை மாநாட்டின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
M.M.முஜாஹித் அலீ
|