தமிழக உள்ளாட்சி தேர்தலை டிசம்பருக்குள் நடத்த உத்தரவிட்டும் ஏன் தொடர்ந்து காலதாமதம் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் இருகட்டங்களாக தேர்தல் நடைபெறவிருந்தது. ஆனால் இந்தத் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் மற்றும் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக்கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்.
தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் நூட்டி ராம்மோகன்ராவ், எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் முன்பு நடந்தது.
அப்போது மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், ‘‘தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், குற்றப் பிண்ணனி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளார். இந்த நிபந்தனைகளை மாநில தேர்தல் ஆணையம் நேரடியாக அமல்படுத்த முடியாது. இதுதொடர்பாக தமிழக அரசு சட்டம் இயற்றிய பின்னரே, தேர்தல் ஆணையம் அதை அமல்படுத்த முடியும். தமிழக அரசிடமிருந்து போதிய ஒத்துழைப்பில்லை’’ என்றார்.
அதற்கு திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே ஒரு வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி அமைப்பு. இந்த அமைப்பு சுதந்திரமாக செயல்படவேண்டும். ஒருவேளை மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை அணுகலாம்’’ எனக்கூறியுள்ளது. தனி நீதிபதி பிறப்பித்த புதிய விதிமுறைகளை, மாநில தேர்தல் ஆணையமே அமல்படுத்த முடியும். ஆனால், தேவையில்லாமல், அரசும், தேர்தல் ஆணையமும் இந்த விவகாரத்தில் வேண்டுமென்றே காலதாமதம் செய்கின்றன’’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘உள்ளாட்சித் தேர்தலை டிசம்பருக்குள் நடத்த வேண்டுமென ஏற்கெனவே தனிநீதிபதி உத்தரவிட்டும், இதுவரை தேர்தலை நடத்த ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? தொடர்ந்து காலதாமதம் செய்வது ஏன்? இன்னும் எத்தனை காலத்துக்கு உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடப் போகிறீர்கள்? தேர்தலை நடத்த என்னதான் முடிவு செய்துள்ளீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
அதற்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘உள்ளாட்சி தேர்தலை நடத்த தேவையான வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதனால்தான் பணிகளை உடனடியாக தொடங்க முடியவில்லை’’ என்றார்.
அதற்கு நீதிபதிகள், ‘‘ஒவ்வொரு பணிக்கும் அரசை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் மாநில தேர்தல் ஆணையம் என்ற அமைப்பே தேவையில்லையே?’’ என்றனர்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் பிளீடர் ஆர்.பிரதாப்குமார் ஆஜராகி, ‘‘இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக உள்ளார். தற்போது அவர் வேறு பணியில் உள்ளதால், விசாரணையை தள்ளி வைக்கவேண்டும்’’ என்றார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் பிப்.14-க்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அன்றைய தினமே அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்து அனைத்து தரப்பு வாதங்களையும் நிறைவு செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர்.
தகவல்:
தி இந்து |