காயல்பட்டினம் புறவழிச் சாலையில், நகரில் குடிநீர் வினியோகம் செய்யும் லாரி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. விரிவான விபரம்:-
காயல்பட்டினத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை பிரச்சினையை சமாளிப்பதற்காக - நகராட்சி ஏற்பாட்டில் தனியார் ஒப்பந்தக்காரர்களைக் கொண்டு, லாரி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு குடிநீர் வினியோகம் செய்யும் லாரி ஒன்று, காயல்பட்டினம் புறவழிச் சாலை மேற்குப் பகுதியையடுத்து தூத்துக்குடி சாலையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்புமிடத்தில் எரிபொருள் நிரப்பிவிட்டு, புறவழிச்சாலை வழியாக வந்துள்ளதாகத் தெரிகிறது.
17.40 மணியளவில் திடீரென அதன் டயர் வெடித்ததில், நிலை தடுமாறி - சாலையோரத்திலிருந்த மின்கம்பத்தின் மீது மோதியதில், அம்மின்கம்பம் தரையில் சரிந்து விழுந்தது. வாகனத்திலிருந்த ஓட்டுநரும், பணியாளரும் உடனடியாக வெளியில் குதித்து உயிர் பிழைத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வைக் கண்ணுற்ற - அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் உடனடியாக காயல்பட்டினம் மின்வாரிய அலுவலகத்திற்குத் தகவல் கொடுத்ததன் பேரில், அங்கு வந்த மின்வாரிய அலுவலர்கள், அப்பகுதியின் மின் வினியோகத்தைத் துண்டித்துவிட்டு, விழுந்த மின் கம்பத்தை மீண்டும் நிறுவும் பணியில் ஈடுபட்டனர்.
தகவல் & படங்கள்:
M.M.முஜாஹித் அலீ
|