சென்னை காயலர்களை ஒருங்கிணைத்து இயங்கி வரும் - காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் சார்பில், இம்மாதம் 04, 05 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்களில் இன்பச் சிற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் காயலர்கள் தம் குடும்பத்தினருடன் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர். இதுகுறித்து பெறப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
கே.சி.ஜி.சி.யின் இரண்டு நாள் இன்பச்சிற்றுலா
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளவிலாக் கருணையும் ஈடிணையில்லா கிருபையும் நம் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக, ஆமீன்.
அன்பிற்கினிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!
நமது கே.சி.ஜி.சி.யிலிருந்து ஆண்டுக்கு ஓரிருமுறை மேற்கொள்ளப்பட்டு வரும் இன்பச் சிற்றுலாக்கள் நீண்ட நாட்களாக நடத்தப்படாமல் இருந்துவந்த நிலையில், கடந்த 04, 05 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்களில் இறையருயால் சிற்றுலா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சென்னையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் - கூடுவாஞ்சேரியை அடுத்து அமைந்துள்ள பாண்டூர் என்ற பகுதியில், நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில், பசும்போர்வை போர்த்தப்பட்டது போல் காட்சியளிக்கும் இயற்கை எழில் கொஞ்சும் தோப்பில் நடைபெற்றது.
புறப்பாடு:
சிற்றுலாவுக்கு வருவோரை அழைத்துச் செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புப் பேருந்தில், 04.02.2017. சனிக்கிழமையன்று 14.30 மணியளவில் - சென்னை மண்ணடி, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காயலர்கள் அழைத்துச் செல்லப்பட்டு, மாலை வேளையில் நிகழ்விடம் சென்றடைந்தோம்.
அரட்டை & விளையாட்டு:
இந்த இரண்டு நாள் இன்பச் சிற்றுலா நிகழ்முறைகள் குறித்து ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்முறைகள் துவக்கமாக அனைவருக்கும் விளக்கப்பட்டது. அதன்போதே தேனீர் & சிற்றுண்டி பரிமாறப்பட்டது. பின்னர், பேரன் கண்டவர்கள், தந்தை - தாய்மார், இளைஞர்கள், மாணவர்கள், இளஞ்சிறார், மழலையர் என - பங்கேற்பாளர்கள் அவர்களாகவே வயது வாரியாகப் பிரிந்து சென்று - விளையாட்டிலும், அரட்டையிலும் மூழ்கினர்.
120 வினாடி தொடர் பேச்சு:
சிறிது நேரத்தில் மஃக்ரிப் தொழுகையும், அதனைத் தொடர்ந்து இஷா தொழுகையும் ஜமாஅத்தாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் 120 வினாடிகள் (2 நிமிடங்கள்) கால அளவைக் கொண்ட தொடர் பேச்சுப் போட்டி நடைபெற்றது. சிற்றுலாவில் கலந்துகொண்ட ஆண்கள் அனைவரும் இப்போட்டியில் பங்கேற்றனர்.
துவக்கமாக போட்டியாளர்கள் தங்களைப் பற்றி சுருக்கமாக அறிமுகப்படுத்திக்கொள்வர். பின்னர், அவர்கள் சார்ந்த தொழில் அல்லது துறையையொட்டி, “அரசியல், இயற்கை, ஒழுக்கம், கணினி, திருக்குர்ஆன் என மேடையிலேயே திடீர் தலைப்புகள் வழங்கப்பட்டன.
120 வினாடி கால அளவைக் கொண்ட இப்போட்டியில்,
>>> பங்கேற்பாளர் ஒரு சொல்லை இரண்டு முறை பயன்படுத்திக்கொள்ளலாம்... 3ஆவது முறை பயன்படுத்தினால் போட்டியிலிருந்து நீக்கப்படுவார்...
>>> பேச்சு தலைப்பையொட்டியே இருக்க வேண்டும். தலைப்பைத் தாண்டியோ அல்லது சுற்றி வளைத்தோ இருக்கக் கூடாது...
>>> தொடர்ந்து 5 வினாடிகள் பேசாமல் இடைவெளி இருக்கக் கூடாது...
>>> தமிழைத் தவிர வேறெந்த பிறமொழிச் சொல்லும் பயன்படுத்தப்படக் கூடாது...
என விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன.
போட்டியில் பங்கேற்ற பெரும்பாலோர் 100 வினாடிகளைத் தொட்டுவிட்ட நிலையில், விதிமுறையை மறந்தவர்களாகப் பேசி போட்டியிலிருந்து விலக்கப்பட்டது... முடிவை ஏற்காமல் - வயதில் மூத்த போட்டியாளர்கள் மல்லுக்கட்டியது போன்ற நிகழ்வுகள் அனைவரையும் ரசிக்கச் செய்தன.
தொடர்ந்து, “இயற்கை வாழ்வியல்” எனும் தலைப்பில், இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையை வலியுறுத்தி சிறிய கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.
இரவுணவு:
இரவுணவாக அனைவருக்கும் இடியாப்பம், இறைஞ்சி, ஜவ்வரிசி பாயசம் ஆகியன பரிமாறப்பட்டன. பின்னர் அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்தனர்.
மறுநாள் அதிகாலையில் ஃபஜ்ர் தொழுகைக்கான அதான் ஒலிக்கப்பட, அடுத்த 30 நிமிடங்களில் அனைவரும் ஜமாஅத்தாக தொழுகையை நிறைவேற்றினர். பின்னர் அனைவருக்கும் தேனீர் & சிற்றுண்டி பரிமாறப்பட்டது.
இயற்கை உலா:
07.00 மணியளவில், அனைவரும் - பசுமை எழில் கொஞ்சும் இப்பசுமைத் தோப்பில் இயற்கை உலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஓங்கி உயர்ந்து வளர்ந்த மரங்கள், அவற்றைச் சுற்றி வளர்ந்திருந்த பல்வகை மூலிகைச் செடிகளையும், ஆடு - மாடு - கோழி - காடை - முயல் - வெள்ளெலி உள்ளிட்ட உயிரினங்கள் வளர்க்கப்படுவதையும் - பறவைகளின் கிறீச் குரல்களைக் கேட்டு மகிழ்ந்தவர்களாக பங்கேற்பாளர்கள் பார்த்து ரசித்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதாரணமான நிகழ்வாக இருந்த இந்தப் பசுமை சார்ந்த பயணம், ஏதோ இப்போதுதான் புதிதாக அனுபவிப்பதைப் போல இருந்தது.
காலை உணவு:
சுமார் 1 மணி நேரத்தில் இயற்கை உலா நிறைவுற, பசியுடன் வசிப்பிடம் திரும்பிய அனைவருக்கும் “மல்லிகைப் பூ” போல மெதுவான இட்லியும், அதற்குத் துணையாக மசாலா பருப்பு வடையும், மணக்கும் சட்னி - சாம்பாரும் காலை உணவாகப் பரிமாறப்பட்டது.
சிறிது நேர ஓய்வைத் தொடர்ந்து, அங்கிருந்த அழகிய நீச்சல் குளத்தில் இன்பக் குளியலை அனுபவித்தனர்.
மழலையர் பல்சுவை நிகழ்ச்சிகள்:
சிற்றுலாவில் பங்கேற்ற மழலையர், சிறாருக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் - திருமறை குர்ஆன் ஓதல், பேச்சு, உரையாடல், பாட்டுப் பாடல் என - பல்சுவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இளம்பிஞ்சுகள் ஆர்வமுடன் பங்கேற்ற இந்நிகழ்ச்சியை, அவர்களது தாய் - தந்தையர் உள்ளிட்ட அனைவரும் வெகுவாக ரசித்தனர். எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் இந்நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
மதிய உணவு:
மதிய உணவு வேளையின்போது, அனைவருக்கும் காயல்பட்டினம் பாரம்பரிய முறையில் நெய்ச்சோறு, நாட்டுக் கோழி இறைஞ்சி, கத்திரிக்காய் - மாங்காய் - பருப்பு ஆகியன பரிமாறப்பட்டன.
“உண்ட மயக்கம் தொண்டனுக்கும்” என்பதற்கொப்ப, அனைவரும் சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டனர்.
‘ஆம், இல்லை’ போட்டி:
தொடர்ந்து ‘ஆம், இல்லை’ போட்டி நடைபெற்றது.
>>> போட்டியாளரை நோக்கி நடுவர் உரையாடும் வகையில் ஏதாவது கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருப்பார்... அதற்கு போட்டியாளர் விடையளிக்கும்போது, எந்த இடத்திலும் ‘ஆம்’, ‘ஆமாம்’ என்றோ ‘இல்லை’ என்றோ கூறவே கூடாது...
>>> ஒரேயொரு சொல்லில் பேச்சை நிறுத்தக் கூடாது...
>>> தமிழைத் தவிர வேறெந்த மொழிக்கலப்பும் இருக்கக் கூடாது...
இவையே விதிமுறைகள். முந்தைய நாளில் நடைபெற்ற 120 வினாடி தொடர் பேச்சு போலவே இதிலும் அனைத்து ஆண்களும் ஆர்வமுடன் பங்கேற்க, அவர்கள் எங்காவது எக்குத்தப்பாக மாட்டிக்கொண்டபோது அனைவரும் மெய்மறந்து சிரித்து, ரசித்தனர்.
120 வினாடி தொடர் பேச்சு, ‘ஆம், இல்லை’ ஆகிய இரு போட்டிகளையும் - எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம், எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் நடுவர்களாக இருந்து வழிநடத்தினர்.
நிறைவில் அனைவருக்கும் தேனீர் & சுண்டல் பரிமாறப்பட்டது. அந்தந்த வேளைகளில் ளுஹ்ர், அஸ்ர் தொழுகைகள் ஜமாஅத்தாக நிறைவேற்றப்பட்டன.
‘பவ்’ போட்டி:
பின்னர், ஆண்கள் பங்கேற்ற ‘பவ்’ போட்டி நடைபெற்றது. அணிக்கு 7 பேர் வீதம் இரண்டு எதிரணிகளில் 14 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு 1 முதல் 7 வரை எண்கள் கொடுக்கப்பட்டது.
இரண்டு அணிகளுக்கும் நடுவில் குச்சி நட்டப்பட்டு, அதன் மீது சிரட்டை வைக்கப்பட்டது. நடத்துநர் ஏதாவது ஓர் எண்ணைக் கூறியழைத்ததும், ஈரணியிலும் அந்த எண்ணைக் கொண்டவர்கள் ஓடி வந்து சிரட்டையை - அடி படாமல் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே போட்டியின் விதிமுறை.
பங்கேற்பாளர்கள் எதிரணி வீரரின் அடியைப் பெறாமல் சிரட்டையை எடுத்துச் செல்ல முனைந்ததும், அவரது கை சிரட்டையில் பட்டதுமே எதிரணி வீரர் அடித்ததும் கண்கொள்ளாக் காட்சிகள்! போட்டியின் துவக்கத்தில், உடல் பருத்த இரண்டு வீரர்கள் பங்கேற்று... ஓட முடியாமல் ஓடி வந்து, ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து... கால்களில் சிராய்ப்புக் காயங்களுடன் retired hurt ஆக போட்டியிலிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.
சிற்றுலா நிகழ்ச்சிகள் இன்னும் தொடராதா என அனைவரும் ஆர்வமுடன் இருந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட நேரம் முடிவடையவே, நிகழ்விடம் வந்த பேருந்திலும், தனி வாகனங்களிலும் - 16.30 மணியளவில் அனைவரும் மறவா நினைவுகளுடன் வசிப்பிடம் திரும்பிச் சென்றனர்.
இப்போட்டியை, KCGC மூத்த உறுப்பினர் எம்.எம்.அஹ்மத் - தனது நகைச்சுவை நிறைந்த - கலகலப்பான பேச்சைக் கொண்டு அழகுற வழிநடத்தினார்.
போட்டி ஏற்பாடுகளை, KCGC சிற்றுலா ஒருங்கிணைப்புக் குழுவினர் சிறப்புற செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KCGC சார்பாக - சென்னையிலிருந்து...
தகவல்:
சொளுக்கு M.A.C.முஹம்மத் நூஹ்
செய்தியாக்கம்:
எஸ்.கே.ஸாலிஹ்
|