தனியார் நிலங்களிலுள்ள சீமைக் கருவேல மரங்களை நில உரிமையாளர்கள் அவர்களாகவே அகற்றாவிடில், அரசே அகற்றி – அதற்காகச் செலவாகும் தொகை இரு மடங்காக நில உரிமையாளர்களிடமிருந்து வசூ வசூலிக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கை:-
மேன்மைமிகு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தூத்துக்குடி மாவட்டம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டதனைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் உள்ள அனைத்து கருவேல மரங்களையும் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகள், அரசு நிலங்கள், நீர்நிலைகள், குளங்கள், ஓடைகள், சாலையோர பகுதிகள், அரசு அலுவலக வளாகங்களிலுள்ள சீமைக் கருவேல மரங்கள் என மாவட்டத்திலுள்ள அனைத்து இடங்களிலும் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதேபோல் தனியார் நிலங்களில் உள்ள கருவேல மரங்களையும் அகற்றும்படி சம்மந்தப்பட்ட தனியார் நிலங்களின் உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தனியார் நிலங்களின் உரிமையாளர்கள் அனைவரும் தங்கள் இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை உடனே அகற்றி மேன்மைமிகு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை நடைமுறைப்படுத்திட மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஆதரவு தரவேண்டும்.
2017 பிப்ரவரி 10ஆம் தேதிக்குள், சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்காக மாவட்ட நிர்வாகம் எடுத்த மேல் நடவடிக்கை அறிக்கையினை மேன்மைமிகு நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால், பட்டா நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை நில உடைமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றாவிட்டால் அரசாங்கமே செலவு செய்து அகற்றும். அதற்காக செலவழிக்கப்பட்ட தொகையை இரண்டு மடங்காக நில உடைமையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும்.
எனவே பொதுமக்கள் வரும் பிப்ரவரி 8ஆம் தேதிக்குள்ளாக தங்களின் பட்டா நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தனதறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
|