வடகிழக்குப் பருவமழை பொய்த்துள்ளதையடுத்து, தமிழகத்தின் அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. பாபநாசம் அணையிலும் தண்ணீர் குறைந்துவிட்டதால், அங்கிருந்து வினியோகிக்கப்படும் தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, காயல்பட்டினம் உட்பட பெரும்பாலும் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலை பெறுகிறது.
பொதுமக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக – காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், லாரி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்றவை காரணமாக நகரில் மழை மீதான எதிர்பார்ப்பு பெரிதும் அதிகரித்துள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு, அவ்வப்போது சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் ஏற்பாட்டில், ஐக்கிய விளையாட்டு சங்க (USC) மைதானத்தில் - மழை வேண்டி சிறப்புத் தொழுகை - 05.02.2017. ஞாயிற்றுக்கிழமையன்று 09.00 மணிக்கு நடைபெற்றது.
மகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீபும் - ஜாவியா அரபிக் கல்லூரி, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரி ஆகியவற்றின் துணை முதல்வருமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ - மழை வேண்டும் சிறப்புத் தொழுகையை வழிநடத்த, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மார்க்க அறிஞர்கள், ஜமாஅத்துகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஆண்கள் அதில் திரளாகக் கலந்துகொண்டனர்.
படங்கள்:
M.M.முஜாஹித் அலீ
|