இந்தியாவின் 68ஆவது குடியரசு நாள் இம்மாதம் 26ஆம் நாளன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில், வழமை போல இவ்வாண்டும் பட்டம் பறக்க விடும் போட்டி – அதே நாளில் 08.00 மணி முதல் 16.30 மணி வரை 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது.
அகநகர் - புறநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் இப்போட்டியில் கலந்துகொண்டு, பட்டங்களைப் பறக்க விட்டனர்.
பட்டத்தின் அழகு (Beauty), வடிவமைப்பு (Shape), பறக்கும் உயரம் (Height), இழுவை பலம் (Tension), நிலைத்தன்மை (Stability) ஆகிய அடிப்படைகளில் மதிப்பெண்கள் வகைப்படுத்தப்பட்டு, நடுவர் குழுவினரால் மதிப்பெண் வழங்கப்பட்டது.
போட்டிகளைத் தொடர்ந்து, அன்றிரவு 07.00 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. கிராஅத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில், போட்டிகளின் நடுவர்களுக்கும், 3 பிரிவு போட்டிகளிலும் முதல் மூன்றிடங்களைப் பெற்ற போட்டியாளர்களுக்கும் ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகிகளால் பரிசுகள் வழங்கப்பட்டன.
3 அடிக்குட்பட்ட பட்டங்களுள் முதல் மூன்றிடங்களைப் பெற்ற போட்டியாளர்களுக்கு முறையே 1000, 500, 250 ரூபாய் பணப் பரிசுகளும்,
6 அடிக்குட்பட்ட பட்டங்களுள் முதல் மூன்றிடங்களைப் பெற்ற போட்டியாளர்களுக்கு முறையே 2000, 1000, 500 ரூபாய் பணப் பரிசுகளும்,
6 அடிக்கு மேற்பட்ட பட்டங்களுள் முதல் மூன்றிடங்களைப் பெற்ற போட்டியாளர்களுக்கு முறையே 3000, 2000, 1000 ரூபாய் பணப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்வுகள் அனைத்திலும், இளைஞர்கள் - சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். போட்டி ஏற்பாடுகளை, ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
‘கலாமீ’ யாஸர் அரஃபாத்
V.M.புகாரீ ஆகியோருடன்...
A.S.புகாரீ
|