ஐக்கிய அரபு அமீரக அஸ்ஹர் ஜமாஅத் செயற்குழுக் கூட்டத்தில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் பெண்கள் பகுதியில் நிறுவுவதற்காக, வீடியோ ப்ரொஜெக்டர் கருவி அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
ஐக்கிய அரபு அமீரக அஸ்ஹர் ஜமாஅத் செயற்குழுக் கூட்டம், 27.01.2017. வெள்ளிக்கிழமையன்று, துபையிலுள்ள - ஜமாஅத்தின் தலைவர் விளக்கு தாவூத் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. அவரது அனுசரணையில் துவக்கமாக அனைவருக்கும் மதிய உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
பின்னர் துவங்கிய செயற்குழுக் கூட்டத்திற்கு, மக்பூல் அஹ்மத் தலைமை தாங்க, பீ.எம்.ஹுஸைன் நூருத்தீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
அண்மையில் தாயகம் சென்று திரும்பிய டீ.ஏ.எஸ்.மீரா ஸாஹிப், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் & ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி கட்டிடப் பணிகளின் நடப்பு நிலை குறித்தும், அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவின் முன்னேற்றம் குறித்தும் விரிவான தகவல்களைப் பகிர்ந்தார்.
ஜமாஅத் மேம்பாட்டுப் பணிகள் குறித்த - பங்கேற்றோரின் விரிவான கலந்தாலோசனை - கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, அமைப்பின் விரிவான பொதுக்குழுக் கூட்டத்தை வரும் மார்ச் மாதத்தில் – துபை அல்தவார் பூங்காவில் நடத்திட தீர்மானிக்கப்பட்டது. நிகழ்வு நாள் குறித்து இறுதி முடிவு செய்த பின் அறிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இப்பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான பல்வேறு பணிகளை ஒருங்கிணைக்க டீ.ஏ.எஸ்.மீரா ஸாஹிப் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. அபூதபீயிலுள்ள ஜமாஅத்தினரை ஒருங்கிணைக்க மஹ்மூத், துணி உமர் அன்ஸாரீ, ஹுஸைன் நூருத்தீன், இஸ்மாஈல் ஆகியோரும், துபை ஜமாஅத்தினரை ஒருங்கிணைக்க கே.எஸ்.யூனுஸ், ஃபிர்தவ்ஸ், இர்ஃபான், இப்றாஹீம் ஆகியோரும் ஒருங்கிணைப்புக் குழுவினராக நியமிக்கப்பட்டனர்.
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று, பள்ளியின் பெண்கள் பகுதியில் நிறுவிட வீடியோ ப்ரொஜெக்டர் ஒன்று - கூட்டத்தில் பங்கேற்ற தன்னார்வலர்கள் சிலரது அனுசரணையில் அன்பளிப்புச் செய்யப்பட்டது. விரைவில் அக்கருவி பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
அஸ்ர் தொழுகைக்குப் பின் தேனீர் சிற்றுண்டி வழங்கப்பட்டு, கஃப்பாரா துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபையிலிருந்து...
தகவல் & படங்கள்:
K.S.முஹம்மத் யூனுஸ்
|