காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையர்களின் விதி மீறிய செயலினை மேலதிகாரிகள் ஊக்குவித்ததால் காயல்பட்டினம் நகராட்சி முடங்கியது என காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் (TAMILNADU LOCAL BODIES OMBUDSMAN) தீர்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்த விபரம் வருமாறு:
மாநகராட்சிகள், நகராட்சிகள், டவுன் பஞ்சாயத்துகள், கிராம பஞ்சாயத்துகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் ஊழல், முறைகேடுகள் குறித்து பெறப்படும் புகார்களை விசாரிக்க 2014ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம்.
டிசம்பர் 2015 இல் - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகராட்சியில் நடைபெறும் பல்வேறு ஊழல்கள், முறைக்கேடுகள் குறித்து வழக்கு பதிவு செய்திருந்தார். ஏறத்தாழ ஓர் ஆண்டாக இது குறித்து விரிவான விசாரணைகள் மேற்கொண்ட முறைமன்ற நடுவம், தனது ஆணையை கடந்த மாதம் பிறப்பித்துள்ளது. இது குறித்த விபரங்கள் தற்போது பெறப்பட்டுள்ளன.
16 பக்கங்களில் 22 பத்திகளாக வெளியாகியுள்ள இந்த ஆணை - பெறப்பட்ட புகார், அதன் மீது நடத்தப்பட்ட விசாரணை, சமர்ப்பிக்கபப்ட்ட ஆவணங்கள் ஆகியவற்றின் விபரங்களை முதல் 21 பத்திகளில் தெரிவிக்கிறது. இறுதி பத்தியில், தெளிவான தனது ஆணையை கீழ்க்காணுமாறு - முறைமன்ற நடுவம் - பிறப்பித்துள்ளது.
"மனுதாரர் (நகராட்சி தலைவர்) மற்றும் நகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஆகியோரது அறிக்கைகள், வாக்குமூலங்கள், அனைத்தையும் கவனமுடன் பரிசீலிக்கையில் காயல்பட்டினம் நகராட்சி நிர்வாகம் முற்றிலும் முடங்கி, நகர் பாலிகா சட்டத்தின் நோக்கம் முற்றிலும் இந்நகராட்சியை பொறுத்த அளவில் சிதைக்கப்பட்டுள்ளது" என முறைமன்ற நடுவம், தனது ஆணையின் இறுதி பத்தியின் துவக்கத்தில் பதிவு செய்கிறது.
தொடர்ந்து, இதன் விளைவு குறித்து ---
"நகராட்சி தலைவர், ஆணையர் ஆகியோருக்கிடையே ஏற்பட்ட பிரச்சனைகளால் மக்கள் நலப்பணிகள் பாதிக்கப்பட்டு, அப்பாவி பொது மக்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டியவை தாமதப்படுத்தப்பட்டுள்ளது. இதை மேல் அதிகாரிகள் வேடிக்கை பார்த்துள்ளனர். இதை பயன்படுத்தி சில அலுவலர்கள் முறைக்கேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெளிவாகின்றது" என அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இதுபோன்ற சூழல்கள் தொடர்வதை தடுத்திருக்கலாம். அரசியல் அமைப்பு சட்டத்தின் 73 வது மற்றும் 74 வது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்ட அமைப்புகள், சட்டபூர்வமாக செயல்படுவதை மேல் அலுவலர்கள் கண்காணிக்க தவறியுள்ளதாகவே இந்நேர்வில் கருத வேண்டியுள்ளது" என மேலும் அவ்வாணை தெரிவிக்கிறது.
ஆணையர்கள் நடவடிக்கைகள் குறித்து விளக்கிய ஆணை,
"இந்த நகராட்சியின் ஆணையர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றத்தினை தவிர்த்து மேல் அலுவலர்களோடு மட்டும் தொடர்புக்கொண்டு, நகர்மன்றம் கூட்டம் குறித்தோ, அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்ட நிதி செலவிடல் குறித்து மன்ற அங்கீகாரம் பெற்று, அரசு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்திடவோ எவ்வித அக்கறையுமின்றி மெத்தனமாக செயல்பட்டுள்ளனர். இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான செயலாகவே கருதபபடவேண்டும்" என பதிவு செய்கிறது.
ஏன் நகராட்சி முடங்கியது என தொடர்ந்து விளக்கும்போது,
"ஒரு நகர்மன்றம், சட்டபப்டி செயல்படவில்லை என்றால் 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், பிரிவு 41 ன் கீழ் வழிவகை செய்யபப்ட்டுள்ளவாறு சட்டப்படி உரிய நடவடிக்கைகள் எடுத்து, மன்றத்தினை கலைத்திட அரசுக்கு முன் மொழிவு அனுப்பி, மேல் அலுவலர்கள் முயன்று, சட்டத் தீர்வு கொண்டிருக்கவேண்டும். அதை விடுத்தது, நகராட்சி ஆணையர்களின் விதி மீறிய செயலினை ஊக்குவித்து, நகராட்சி நடவடிக்கைகள் முடங்கிட காரணமாய் அமைந்துள்ளனர்" என தெளிவாக கூறுகிறது.
மேலும்,
"ஜனநாயகப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், முறையாக செயல்படுதல் வேண்டும். குழப்பமான சூழலை பயன்படுத்தி, ஜனநாயகத்துக்கு மற்றும் அரசியல் சட்டத்திற்கு, விதிகளுக்கு, நடைமுறைகளுக்கு, எதிராக காயல்பட்டினம் நகராட்சியில் பணிபுரிந்த ஆணையர்கள் செயல்பட்டிருக்கிறார்கள். இது குறித்து விரிவான விசாரணை நடத்திட வேண்டுமென இம்முறை மன்ற நடுவம் விரும்புகின்றது. எனவே, மன்ற அனுமதி பெறாமல், செயல்படுத்திய பணிகள் குறித்து நேர்மையான அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து முறைகேடுகள் குறித்து தெளிவாக கண்டறிந்து உரிய முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், நகராட்சி நிர்வாக ஆணையரை, இம்முறைமன்றம் கேட்டுக்கொண்டு அவ்வாறே இவ்வழக்கில் ஆணையிடப்படுகிறது" என தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம், முன்னாள் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் காந்திராஜன் மீது தொடரப்பப்ட்ட வழக்கில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தின் ஆணை (முழு விபரம்)
|