காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் வெயிலின் தாக்கத்தால் வெப்ப வானிலை பல மாதங்களாக நிலவி வந்ததால், நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாகக் குறைந்தது.
எனவே, பொதுமக்களிடம் வடகிழக்குப் பருவமழை மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. ஆனால், அதுவும் பொய்த்துள்ளதையடுத்து, நகரில் நிலத்தடி நீர் மட்டம் கூடுதலாக இறங்கி வருகிறது. நகராட்சியின் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுவது வியப்பிற்குரிய ஒன்றாகவே மாறிவிட்டது. லாரிகள் மூலம் நகரின் பல வீதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இவை ஒருபுறமிருக்க, பொதுமக்கள் பலர், சிறிது உப்புத் தன்மை இருப்பதையும் பொருட்படுத்தாது - தம் வீட்டுக் கிணற்று நீரைக் குடிநீராகப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.
மழை பெய்யாததால் காயல்பட்டினம் உள்ளிட்ட பல ஊர்களில் பொதுமக்களுக்கு அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அதற்கான பிரார்த்தனை நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே துவங்கியுள்ளன.
காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியில், நேற்று (20.01.2017. வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஜும்ஆ தொழுகையை வழிநடத்திய அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ ஜும்ஆ தொழுகையில், மழை வேண்டி குனூத் சிறப்புப் பிரார்த்தனை செய்தார்.
மழைப் பிரார்த்தனையை உள்ளடக்கிய இத்தொழுகையில் சுமார் ஆயிரம் பேர் வரை கலந்துகொண்டனர். |