தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் ஓரம்சம் - வீரியமிக்க நாட்டுக் காளையை இளைஞர்கள் சேர்ந்து அடக்கும் ஜல்லிக்கட்டு ஆகும். தொன்றுதொட்டு நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு, நீதிமன்றம் தடை வழங்கியுள்ளது.
இத்தடையை நீக்கக் கோரியும், ஜல்லிக்கட்டு தடைக்குக் காரணமான PETA அமைப்பைத் தடை செய்யக் கோரியும், தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் பொதுமக்களால் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் காயல்பட்டினத்திலும் கடந்த இரு நாட்களாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
நேற்று (19.01.2017. வியாழக்கிழமையன்று 17.00 மணி துவங்கி, காயல்பட்டினம் இரத்தினபுரியில் மாணவர்கள் - இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரண்டமர்ந்து, தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில், காயல்பட்டினம் பேருந்து நிலையத்திலும் - நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும், இளைஞர்களும் இணைந்து தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், முன்னாள் உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாபுத்தீன் உள்ளிட்ட பிரமுகர்களும், நகர பொதுமக்களும் அதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நேற்று மாலையில் துவங்கி, இரவு முழுக்க பந்தலிலேயே அமர்ந்து, இன்று காலையில் உண்ணாவிரதப் போராட்டமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உண்ணாவிரதப் பந்தலில் இருப்போருக்கு பொதுமக்கள் பலர் குடிநீர், சிற்றுண்டிகள் வழங்கி தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரியும், PETA அமைப்பைத் தடை செய்யக் கோரியும், தமிழகமெங்கும் முழு கடையடைப்பு நடத்தப்பட்டு வருகிறது. காயல்பட்டினத்தில் தமுமுக, SDPI, மஜக உள்ளிட்ட சில சமுதாய அமைப்புகள் சார்பில் நேற்று கடைடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலையிலிருந்து நகரில் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. பள்ளிக்கூடங்கள் இயங்கவில்லை. ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாடகை வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை.
இவற்றின் காரணமாக, எப்போதும் பரபரப்புடன் காணப்படும் காயல்பட்டினம் முதன்மைச் சாலை, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை ஆகியன வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
இவை ஒருபுறமிருக்க - சஊதி அரபிய்யா தலைநகர் ரியாத், ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபூதபீ, ஜப்பான், சென்னை உட்பட காயல்பட்டினத்திற்கு வெளியில் வசிக்கும் காயலர்கள் பலர், தத்தம் பகுதிகளிலிருந்தவாறு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
தகவல் & படங்களுள் உதவி:
சுப்பையா (இரத்தினபுரி)
A.M.நூர் முஹம்மத் ஜக்கரிய்யா (ரியாத்)
செய்யித் இப்றாஹீம் (அபூதபீ)
ஹாஃபிழ் மன்னர் செய்யித் அப்துர்ரஹ்மான் (ஜப்பான்)
M.M.முஜாஹித் அலீ (காயல்பட்டினம் பேருந்து நிலையம்)
[செய்தி வெளியிடப்பட்ட நேரம்: 16:50 / 20.01.2017.]
[கூடுதல் தகவல் & படங்கள் இணைக்கப்பட்டுள்ளன @ 18:40 / 20.01.2017.] |