மாணவர்களுக்கு ஏற்படுத்தப்படும் மன நெருக்கடியை விளக்கும் வகையில், “மீண்டும் வருகிறேன்” எனும் தலைப்பிலான திரைப்படம், எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு அமைப்பின் சார்பில், காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில், 18.01.2017. அன்று திரையிடப்படவுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:-
ஏக இறைவனின் திருப்பெயரால்....
“மீண்டும் வருகின்றேன்“ மாணவர்களுக்குள் ஏற்படுத்தப்படும் மன நெருக்கடி பற்றிய திரைப்படம்
எழுத்து மேடை மையம் தமிழ் நாடு இன் 15 ஆம் நிகழ்வு
எழுத்து மேடை மையம், தமிழ் நாடு சார்பில் நமதூரில் ஆவணப்பட திரையிடல்களும் நூலாய்வுகளும், அவற்றையொட்டிய கலந்துரையாடல்களும் விவாதங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில், வருகின்ற 18 / 01 / 2017 புதன் கிழமை மதியம் 2:45 மணிக்கு நமதூரின் முஹ்யித்தீன் மெற்றிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் எழுத்து மேடை மையம் தமிழ்நாடு இன் சார்பாக 15 ஆம் நிகழ்வாக “ மீண்டும் வருகின்றேன் “ ( 93 நிமிடங்கள் ) என்ற மாணவர்களுக்கான திரைப்படத்தை இன்ஷா அல்லாஹ் திரையிடவுள்ளோம்.
“நாமதான் படிக்கல நம்ப பிள்ளயாவது நல்லா படிச்சு முன்னக்க வரட்டும்.
எதுத்த ஊட்டு அபுலஸன் ஓம் ஃபிரண்டுதானே அவன் எவ்ளோ மார்க்கு வாங்குறான் தெரியுமா ? “
இரும்பு ஊசியை விடக் கூர்மையேறிய இது போன்ற சொற்களால் அடிபட்ட ஊனப்பட்ட பிஞ்சு மனங்கள் எத்தனை ?
கல்வி தொடர்பான தங்களது அளவுக்கதிமான எதிர்பார்ப்புகளையும் ஒப்பீடுகளையும் அழுத்தங்களையும் மாணவர்களின் மீது பெற்றோர்கள் ஆசிரியர்கள் திணிக்கின்றனர்.
அத்தகைய திணிப்பின் போது ஏற்படும் இறகு மனங்களுடைய உடைவுகளின் பேரதிர்வை பெரியவர்களின் பெற்றவர்களின் மனதுகளாலும் காதுகளாலும் கேட்க முடிவதென்பது மிகவும் அரிது.
அப்படி முறிக்கப்பட்ட ஒரு மெல்லிய மனதின் கதையை “மீண்டும் வருகின்றேன் “ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளனர்.
இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் ஆதாய நோக்கமற்ற நிறுவனமான குழந்தைகள் திரைப்படக்கழகமானது ‘(.www.cfsindia.org) ஆங்கிலம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் சிறப்பான திரைப்படங்களை உருவாக்கி வினியோகித்து வருகின்றது.
குழந்தைகள் திரைப்படக்கழகத்தின் உருவாக்கத்தில் இயக்குனர் சந்தோஷ் சிவனின் இயக்கத்தில் மலையாளத்தில் “ அபயம் “ என்ற பெயரில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுகு, ஹிந்தி மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமிது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: +91 91713 24824
|