காயல்பட்டினம் குத்துக்கல் தெருவில் இயங்கி வரும் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம் சார்பில் நடத்தப்பட்ட மீலாத் விழாவில், போட்டிகள் பல நடத்தப்பட்டு, வென்றோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் குத்துக்கல் தெருவில், முஹ்யித்தீன் பள்ளியருகில் கடந்த 32 ஆண்டுகளாக இயங்கி வருகிறது ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம். இதன் சார்பில் ஆண்டுதோறும் மீலாத் விழாக்கள் நடத்தப்பட்டு, சன்மார்க்கப் போட்டிகள் நடத்தி - பரிசுகளும் வழங்கப்படுவது வழமை.
நடப்பாண்டு மீலாத் விழா மற்றும் அமைப்பின் 33ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சிகள், ஹிஜ்ரீ 1438 - ரபீஉல் ஆகிர் 15, 16 ஆகிய நாட்களில், (2017 ஜனவரி மாதம் 14, 15 சனி, ஞாயிறு நாட்களில்) நடைபெற்றன.
14.01.2017. சனிக்கிழமையன்று நடைபெற்ற முதல் நாள் நிகழ்ச்சியில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சில சிறுவர்களை பைத் பாடி நகர்வலமாக அழைத்துச் சென்று, சுன்னத் செய்யும் வைபவம் நடத்தப்பட்டது.
காலை அமர்வு:
09.00 மணிக்கு, நபிகள் நாயகம் புகழ்பாடும் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது. ஹாஃபிழ் ஊண்டி எஸ்.எம்.எஸ்.கிதுரு முஹம்மத் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.
மாலை அமர்வு:
16.30 மணிக்கு, மாதிஹுர் ரஸூல் குழுவினராலும், ‘ஹாங்காங்’ கம்பல்பக்ஷ் பி.எஸ்.அஹ்மத் ஸாலிஹ் பங்கேற்பிலும் - நபிகள் நாயகம் புகழ்பாடும் நஅத் மஜ்லிஸ், எம்.ஏ.செய்யித் முஹம்மத் புகாரீ முன்னிலையில் நடத்தப்பட்டது.
இரவு அமர்வு:
18.40 மணியளவில், புல்லாலி ஏ.ஆர்.முஹம்மத் தம்பி, கே.எல்.டீ.அஹ்மத் முஹ்யித்தீன் ஆகியோர் முன்னிலையில் துவங்கிய அமர்வை, ஹாஃபிழ் பீ.ஒய்.எஸ்.ஹாரிஸ் ஹல்லாஜ் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய முஹ்யித்தீன் பள்ளியின் இமாம் நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா வரவேற்புரையாற்றினார்.
இவ்வமர்விற்குத் தலைமை தாங்கிய – மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஏ.கே.முஹம்மத் அஸ்ஃபர் அஷ்ரஃபீ தலைமையுரையாற்றினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும் - கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் வாழ்த்துரையாற்றினார்.
“வெல்ல முடியா சாதனைகளின் சொந்தக்காரர்” எனும் தலைப்பில், கோயமுத்தூர் கரும்புக் கடை சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் ஏ.அப்துல் அஜீஸ் பாக்கவீ சிறப்புரையாற்றினார்.
துஆ - ஸலவாத்துடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இரண்டாம் நாள் காலை அமர்வு:
15.01.2017. ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்ச்சியின் துவக்கமாக, அன்று 09.15 மணியளவில், அருள்மறை குர்ஆனை அகத்திலேந்திய ஹாஃபிழ்களுக்கான - திருக்குர்ஆன் மனனப் போட்டி, எம்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் முன்னிலையில் நடைபெற்றது. ஹாஃபிழ் எம்.எச்.முத்துவாப்பா கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.
மாலை அமர்வு:
16.30 மணிக்கு, “நற்குணத்தின் தாயகம் தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்” எனும் தலைப்பில், 15 வயதுக்குட்பட்டோருக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. ஏராளமான மாணவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.
இரவு அமர்வு:
ம.கு.முஹ்யித்தீன் தம்பி (துரை), ஏ.கே.கலீலுர்ரஹ்மான், எஸ்.ஏ.ஜவாஹிர் ஆகியோர் முன்னிலையில் துவங்கிய இரவு அமர்வை, ஹாஃபிழ் எஸ்.எல்.முஹம்மத் ஹஸன் இர்ஃபான் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இவ்வமர்விற்குத் தலைமை தாங்கிய – ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் & முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி ஆகியவற்றின் ஆசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ தலைமையுரையாற்றினார்.
ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.முஹம்மத் ஜாஸிர் மஹ்ழரீ துவக்கவுரையாற்றினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.அப்துல் ஹமீத் பாக்கவீ, “அணுகுமுறையில் அற்புதம் நிகழ்த்திய அண்ணலார்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இக்ராஃ மூலம் ரூ. 30 ஆயிரம் கல்வி உதவித்தொகை:
இக்ராஃ கல்விச் சங்கத்தின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், நடப்பாண்டு கல்வி உதவித்தொகைக்காக 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி - தொகையை வழங்க, இக்ராஃவின் பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான், செயற்குழு உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் அதைப் பெற்றுக்கொண்டனர்.
பரிசளிப்பு:
தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஹிஃப்ழுப் போட்டியில் சிறப்பிடங்களைப் பெற்ற முதல் மூவருக்கு முறையே ரூபாய் 3500, 2500, 1500 பணப்பரிசுகளும், பேச்சுப்போட்டியில் சிறப்பிடங்களைப் பெற்ற முதல் மூவருக்கு முறையே ருபாய் 1500, 1000, 750 பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன. போட்டிகளில் கலந்துகொண்ட அனைவருக்கும் 500 ரூபாய் ஆறுதல் பரிசாக வழங்கப்பட்டன. பரிசுகளை, சோல்ஜர் அப்துல்லாஹ் ஸாஹிப் துவக்கமாகவும், மேடையில் அங்கம் வகித்தோர் அவரைத் தொடர்ந்தும் மாணவர்களுக்கு வழங்கினர்.
சட்னி எஸ்.ஏ.கே.செய்யித் மீரான் நன்றி கூற, துஆ - ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. அனைத்து நிகழ்ச்சிகளிலும், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
சட்னி S.A.K.செய்யித் மீரான் |