எழுத்து மேடை மையம், தமிழ் நாடு சார்பில் நமதூரில் ஆவணப்பட திரையிடல்களும் நூலாய்வுகளும், அவற்றையொட்டிய கலந்துரையாடல்களும் விவாதங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
நடுவணரசு அறிவித்துள்ள செல்லாக்காசு விவகாரம் நாடு முழுக்க பலவிதமான உணர்வலைகளையும் விவாதங்களையும் கிளப்பி வருகின்றது.
ஊடகங்களிலும் பொது வெளிகளிலும் அன்றாடம் நாம் கண்டும் கேட்டும் வரும் விவாத தலைப்புகளுக்கு அப்பால் நின்று புதியதொரு கோணத்தில் இந்த சமூக பொருளாதாரப் பிரச்னையை அணுகும் விதமாக எழுத்து மேடை மையம், தமிழ் நாடு இன் 14 ஆம் நிகழ்வாக “ பணமற்ற வாழ்க்கை “. திரையிடல் நிகழ்வு.ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து எழுத்து மேடை மையம் தமிழ்நாடு வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:
இந்த நிகழ்வானது 02 / 01 / 2017 திங்கள் கிழமை இரவு 08:00 மணியிலிருந்து இரவு 10:15 மணி வரை நமதூர் ஐக்கிய விளையாட்டுச் சங்க திடலில் ( UNITED SPORTS CLUB – USC ) நடைபெற்றது.
முதலில் அனைவரையும் வரவேற்று பேசிய எழுத்து மேடை தமிழ் நாடு இன் நிர்வாகிகளில் ஒருவரான ஃபழ்ல் இஸ்மாயீல் எ.மே.மை இன் செயல்பாடுகளை விளக்கினார்.
அடுத்ததாக ஆவனப்படத்தைப் பற்றிய முன் விளக்கத்தை எ.மே.மை. இன் நிர்வாகிகளுள் ஒருவரான அஹ்மத் ஸாஹிப் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து “ பணமற்ற வாழ்க்கை “ என்ற தலைப்பில் Living Without Money . ( பணமின்றி வாழுதல் ), The American who quit money to live in a cave . ( பணத்தை துறந்து குகையில் வாழும் அமெரிக்கர் ). என்ற இரு ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன..
ஆவணப்படங்களின் கதைச் சுருக்கம்
1. Living Without Money ( பணமின்றி வாழுதல் )
“ எனக்கு சொந்த வீடு இருந்தது. இரு பிள்ளைகளை பெற்று வளர்த்தேன். எனக்கு தேவையான அனைத்தையும் பெற்றிருந்தேன். அவையனைத்தையும் விட்டு விட்டேன்....”
68 வயதுள்ள ஜர்மானிய பெண்மணியின் வாழ்க்கையை இந்த ஆவணப்படம் பேசுகின்றது.
ஹைடமேரி (Heidemarie Schwermer ) என்ற பெயருடைய இந்த பெண்மணி 14 வருடங்களுக்கு முன்னர் பணத்தை புழங்குவதையே நிறுத்தி விட்டார்.
கைப்பெட்டியில் உள்ள துணிமணிகள்தான் மிச்சம். அடுக்ககம் உள்ளிட்ட தனது அனைத்து உடைமைகளையும் விட்டு விட்டார். இந்த முடிவானது வாழ்க்கை மீதான அவரின் பார்வையையே தலை கீழாக மாற்றி விட்டது.
14 வருடங்கள் கழிந்த பிறகும் பெரும்பாலும் பணமற்றதொரு வாழ்க்கையையே தொடர்கின்றார் ஹைடமேரி. முன்னெப்போதையும் விட தற்போதுதான் முற்றிலும் விட்டு விடுதலையாகி நிற்பதாக உணர்கின்றார். இந்த படமானது அவரின் அன்றாட வாழ்வை காட்சிபடுத்தியிருப்பதோடு மாற்று வாழ்க்கை முறையில் உள்ள அறைகூவல்களையும் காட்டுகின்றது.
புதியவர்களை சந்தித்தல், பழைய புதிய நண்பர்களுடன் சில இரவுகள் தங்குதல் என ஹைடமேரி தொடர்ந்து ஜர்மனி , ஆஸ்திரியா, , ஸ்விட்ஸர்லாந்து, இட்லி என பயணித்துக் கொண்டேயிருக்கின்றார்.
தனது பட்டறிவைப்பற்றிய உரைகளின் வழியாக எளிதான வாழ்க்கை என்பது சாத்தியமே என்கின்ற செய்தியை எடுத்துச் சொல்லிக்கொண்டே இருக்கின்றார்.
அடுத்த வேளை என்ன உண்போம், எங்கு உறங்குவோம் என்ற முன் திட்டங்கள் எதுவுமின்றியும் எதிர்காலத்தைப் பற்றிய எந்தவொரு கவலையுமற்றிருக்கின்றார். நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த நொடிப்பொழுதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் ஹைடமேரி.
எது நடந்தாலும் நடக்கட்டும் என நாம் இருக்கும் வரை நடக்க வேண்டிய விஷயங்கள் நடந்து கொண்டுதானிருக்கின்றது என்பதுதான் அவரின் வாழ்க்கை பட்டறிவு.
பணத்திற்கு மாற்றீடாக வேறு பயன்களை பரிமாறிக்கொள்வதில் தொடங்கிய பயணமானது இன்று ஒரு வாழ்க்கை முறையாகவே ஆகி விட்டது, எளிய நல்லிணக்கமான வாழ்க்கைக்கான பாதையை கண்டறிவதில் பிற மனிதர்களுக்கு உதவ முயற்சிக்கின்றார் ஹைடமேரி.
ஏன் இந்த வாழ்க்கை முறையை ஹைடமேரி தேர்ந்தெடுக்க வேண்டி வந்தது என்பததைப் பற்றியும் வாழ்க்கை தத்துவம் பற்றியும் இந்தப்படத்தில் காண முடியும்.
பணத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொன்றும் அளவிடப்படுவதோடு, பொருளாதார ரீதியாக ஒருவர் அடைந்திருக்கும் நிலையை வைத்து மட்டுமே ஒரு மனிதரைப்பற்றி இந்த சமூகத்தில் அளவிடப்படுகின்றது . இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் ஒரு மாற்று வாழ்க்கையை வாழ்வதென்பது ஹைடமேரிக்கு எளிதானதல்ல என்பதையும் நாம் காண முடிகின்றது. .
அடுத்த மனிதரின் உதவியில் தங்கி வாழும் ஒரு ஒட்டுண்ணி என சிலரும் நல்லதொரு தூண்டுதலுக்கான ஆளுமை என வேறு சிலரும் ஹைட மேரியின் வாழ்க்கையைப் பற்றி அழுத்தமாக கருத்துக்களைக் கூறுகின்றனர்.
இந்தப் படமானது உலகாதாயம், அதீத நுகர்வு போன்ற கருத்தாக்கங்களை ஆராய்கின்றது.
நம் வாழ்க்கை, சிந்திக்கும் முறை, செயல்படும் முறை, நம் சூழல், உடல் நலம் இவற்றின் மீதான பணத்தின் தாக்கத்தை இந்த ஆவணப்படக்கதையின் வழியாக நாம் பரீசீலிக்கலாம்.
www.livingwithoutmoney.org
----------------------------------------------------------------------------------------------------------------
2. The American who quit money to live in a cave . ( பணத்தை துறந்து குகையில் வாழும் அமெரிக்கர் ).
நான் ஒரு அமெரிக்கனாவேன். கொள்கையற்ற வாழ்க்கை ஓட்டத்தினால் சோர்வடைந்தேன். எனது எண்ணங்களை எளிமைப்படுத்துவதின் வழியாக இந்த மன அழுத்தத்திலிருந்து விடுபட இயலும் என்பதை அறிந்தேன்.
அத்துடன் எனது எண்ணங்கள்தான் எனது உடைமைகள் என்பதையும் அறிந்தேன். பயனற்ற சிந்தனைகளையும் உடைமைகளையும் களையக் களைய எனக்குத் தேவையானவை என்பவை மிகக் குறைவானவையே என்பதை நிறைய அறிந்துகொண்டேன்.
இதற்காக தனியாகவெல்லாம் முயற்சிக்கத் தேவையில்லை. ஒரு மரமானது தனது இலைகளையும், வித்துக்களையும் உதிர்ப்பது போல இது மிக இயல்பானது.
எண்ணங்கள், மக்கள் என்ற எனது உடைமையின் வழியாக எனக்குள் இருந்த மன அழுத்தத்தை பறக்கடிக்கச் செய்துவிட்டேன்.
உலகின் கடன்கள், வங்கி முறை, நிறுவனங்கள், போர், வறுமை போன்றவற்றை பற்றி நான் சிந்தித்தேன்.
“பிதாவே! எங்களுக்கு கடன்பட்டவர்களை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் கடன்களை நீர் மன்னியும் “ என்ற பைபிளின் வரிகள் எனது தாரக மந்திரமாக மாறியது. பணக்கடனுக்கும் ஆன்மீகக்கடனுக்கும் இடையே எந்த உண்மையில் எந்த வேறுபாடும் இல்லை என்பதையும் உணர்ந்தேன்.
குற்றவுணர்வு, வஞ்சம் போன்ற மனக்கடன்களுக்கும், பணக்கடன்களுக்கும் இடையே பிரிக்க இயலாத தொடர்புள்ளது. உடல் நோய்களுக்கும், மனக்கடன்களுக்கும் நீக்க இயலாத தொடர்புள்ளது.
உலகம் மட்டுமே தலையாயது என்ற எண்ணத்தை தலையில் சுமந்து கொண்டு பணத்தை வழிபட்டுத் திரியும் நயவஞ்சக நெறிக்கு அடியில் உண்மையான அறிவாழமிக்க ஆன்மீகக் கோட்பாடுகள் புதைந்து போயுள்ளன.
பல இடங்களிலிருந்தும் படிப்பினை பெற வேண்டும். ஆனால் நமது வாழ்க்கைக்குள்ளேயே, நமது ஊருக்குள்ளேயே, நமது மதத்திற்குள்ளேயேதான் நமக்கான தீர்வுகள் கண்டு அடையப்பட வேண்டும்.
www.zerocurrency.blogspot.in
-----------------------------------------------------------------------------------------------------
திரையிடலைத் தொடர்ந்து கருத்து பரிமாற்ற நிகழ்வுகளும் நடைபெற்றன. விளக்க & கருத்து பரிமாற்ற உரைகளின் சுருக்க தொகுப்பு:
“செல்லாக்காசு நடவடிக்கைக்கும் பணமற்ற எளிய வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு?” என்ற கேள்வி நமக்குள் எழுவது இயற்கை. நடுவணரசின் செல்லாக்காசு நடவடிக்கையினால் நாம் பாடுபட்டு சேர்த்த பணத்தையே பிச்சைகாசைப் போல பெற வேண்டிய அவல நிலை எற்பட்டுள்ளது.
பண்ட மாற்று பொருளாதாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மக்களை பணத்தாள்களுக்குப் பழக்கி, பின்னர் ஞெகிழி பணத்தாள்களை நோக்கி தள்ளுகிறது அரசு.
குடிமக்களை அதிக நுகர்விற்கும், பணச்செலவிற்கும் பழக்கப்படுத்திவிட்டு - பின்னர் மக்களின் அன்றாடப் பணப்புழக்கத்தின் மீது அரசு தனது இரும்புக் கரத்தைப் போட்டு இறுக்கியுள்ளது. நாம் பாடுபட்டுச் சேர்த்த பணத்தை எப்படிச் செலவழிப்பது என உத்தரவிட எந்த ஒரு அரசிற்கும் உரிமையில்லை.
அரசின் இந்த தடாலடி பொருளாதாரக் கெடுபிடிக்கு எதிர்வினையாக இயல்பான எளிய மாற்று வாழ்க்கை முறை மீதான ஒரு விவாதத் திறப்பை உண்டாக்குவதுதான் இந்த நிகழ்வின் நோக்கம்.
இந்த ஆவணப்படத்தில் முன் வைக்கப்படும் வாழ்க்கை முறைகளை அப்படியே நாம் பின்பற்ற வேண்டியதில்லை. அது சாத்தியமுமில்லை.. மொத்தத்தில் நமது வாழ்க்கை முறைத் தவறுகளின் இடைவெளிக்குள் நுழைந்து, நமது குடுமியைப் பிடித்து விருப்பம் போல ஆட்டிவைக்க ஆள்வோரையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் நாம் விடக்கூடாது என்பதுதான் இந்தப் படத்தின் வழியாக நாம் சொல்ல விரும்பும் செய்தி.
நமக்கு முன்னர் பெருமானார் {ஸல்} அவர்களின் வாழ்க்கை முன்மாதிரி உள்ளது. எளிய - ஆடம்பரமற்ற வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் அவர்களின் வாழ்விலிருந்தே நாம் பெற்றுக்கொள்ள இயலும்.
கருத்துப் பரிமாற்றம்:
பார்வையாளர்கள் முன்வைத்த கருத்துக்கள்:
---- இந்த நிகழ்ச்சி நல்லதொரு ஏற்பாடுதான். ஆனால் பணமற்றதொரு வாழ்க்கை உடனடியாக சாத்தியமில்லை
---- இந்த ஆவணப்படமே பணம் சம்பாதிக்கும் முயற்சிதான்
---- என்னிடம் மிகுதமாக இருக்கும் பொருட்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள ஆயத்தமாக இருக்கின்றேன்.
--- பணமற்ற வாழ்க்கை , பண்டமாற்று வாழ்க்கையெல்லாம் சாத்தியமா ? இல்லையா ? என்ற கேள்விகளுக்கு அப்பால் நின்று சொல்ல வேண்டியது ஒரே ஒரு சொல்தான்: “போதுமென்ற மனமே சிறந்த செல்வம் “
---- நரிக்குறவர்கள் , நாடோடிகளிடம் இருக்கும் நிம்மதி பணமிருப்பவர்களிடம் இருப்பதில்லை.
```````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
நிகழ்வின் மூன்றாம் கட்டமாக “ பணமற்ற வாழ்க்கை ---- உள்ளூர் பார்வையில்... “ என்ற தலைப்பில் தனது வாழ்வியல் பட்டறிவை எழுத்து மேடை மைய நிர்வாகிகளுள் ஒருவரான எஸ்.கே.ஸாலிஹ் சுவைபட எடுத்துரைத்தார். அவரது உரைச்சுருக்கம்:
“பல்வேறு காரணங்களுக்காக 9 நாடுகளைச் சுற்றும் வாய்ப்பை இறையருளால் பெற்றேன்... என்றாலும், என்னைப் பொருத்த வரை - எனக்குப் பிடித்தமான வாழ்க்கை என்பது நமது நாட்டிலும், நமது மாநிலத்திலும், குறிப்பாக நமதூரிலும்தான் இருக்கிறது.
“ஊரில்தான் இருப்பேன்!” என என் இளம் பருவத்திலேயே முடிவெடுத்துவிட்டேன். அதன் காரணமாக, எல்லோரையும் போல பணத்தாள்களை அதிகமாகச் சேர்க்கவில்லை என்ற ஒன்றைத் தவிர - நான் பெற்ற நன்மைகள் ஏராளம். எனது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் தொடர்புடைய எல்லா சுக துக்கங்களிலும் பங்கெடுக்கின்றேன். வாழ்க்கையை அதன் முழுப் பொருளில் என்னால் இயன்ற அளவுக்கு வாழ்கின்றேன். நான் என்னுடைய வாழ்க்கைத் தேவைகளுக்கு எனக்கு பிடித்த வகையில் உழைத்தே வாழ்கின்றேன். இதில் எப்போதும் தாழ்வுணர்ச்சி அடைந்ததேயில்லை.
ஊரில் நான் முழுமையாக சுவைத்து வாழும் வாழ்க்கைக்கு வசதியாக என்னுடைய தேவைகளை மாற்றியமைத்துக் கொண்டேன். வாழ்வை எளிமையாக்கிக் கொண்டேன். என்னை விட பொருளாதார நிலையில் பல படி உயர்வாக வாழ்பவர்கள் பலர் மிகவும் இறுக்கமாக வாழ்வதைப் பார்க்க நேருகையில், என் வாழ்வைக் கொண்டு நான் பெரிதும் திருப்தியடைந்து, இறைவனைப் புகழ்வேன்.
ஊரைத் தாண்டி வெளியே இருக்கும் பலரால், தன் தாய் - தந்தையினரின் உடல் நலக்குறைவு, இறப்பு போன்றவற்றுக்குக் கூட வர இயலுவதில்லை. விடுமுறை நாட்களிலும், திருமண நாட்களிலும் வந்து செல்லும் காயலர்களின் நிலைமை ஒரு விருந்தாளியின் வருகையைப் போல்தான் இருக்கின்றது. என்றோ ஒரு சில நாட்கள் வருகைக்காக பெரும் பொருளாதாரத்தைச் செலவழித்து, பெரும் பெரும் வீடுகளைக் கட்டிப்போடுகின்றனர். அவர்கள் ஒருபுறம் வெளிநாடுகளில் இருக்க, ஓய்வெடுக்க - உறங்க வீடின்றி பலர் இருக்க, இங்கே அவர்களின் வீடுகளோ பயன்பாடற்று உறங்கிக் கொண்டிருக்கிறது.
அத்துடன் எதிர்காலத் தேவையை பிற்கால தலைமுறையைப் பற்றிய அளவிற்கும் அதிகமான அச்சவுணர்வினால் பொருள் தேடலில் ஒரு கரையையும் இவர்களால் காண முடிவதில்லை.
அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்காக வாழ்க்கையை அஞ்சி அஞ்சி வாழ்வதை விட நமது விருப்பத்திற்கேற்ப தேவைக்கேற்ப வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை... அதை இறையருளால் என்னால் இயன்ற அளவுக்கு அனுபவித்து வாழ்கிறேன்...
நான் சொன்ன இத்தகவல்கள் யாவும் என் வாழ்வைப் பிம்பப்படுத்துவதற்காக மட்டுமேயன்றி, யாரையும் தவறாகக் கருதுவதற்காக அல்ல என்பதையும் இங்கே குறிப்பிட்டுக் கொள்கிறேன்...“
`````````````````````````````````````````````````````````````````````````````````````````````
நன்றி நவிலல், கஃப்ஃபாரா துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இத்திரையிடல் & கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சியில், ஐக்கிய விளையாட்டுச் சங்க செயலாளர் பீ.எஸ்.எம்.இல்யாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள், அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரி நிறுவனர் டீ.எம்.ரஹ்மத்துல்லாஹ், KEPA தலைவர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் தலைவர் எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமீ, கே.எம்.டீ.மருத்துவமனை நிர்வாகிகளுள் ஒருவரான டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், சமூக ஆர்வலர் எஸ்.ஐ.புகாரீ, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகளும் - ஆலோசகர்களுமான பீ.எம்.ஏ.ஸதக்கத்துல்லாஹ், எஸ்.அப்துல் வாஹித், ஏ.எஸ்.புகாரீ, எம்.ஏ.புகாரீ(48), ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல், எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், அபூதபீ வாழ் காயலர் முஹம்மத் உமர் குவைலித், மென்பொருள் வடிவமைப்பாளர் இப்றாஹீம் உள்ளிட்ட பல நகரப் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்ள் என சுமார் 150 பேர் கலந்துகொண்டனர்.
பெரும்பாலும் உள்ளரங்க நிகழ்ச்சியாகவே நடத்தப்பட்டு, சொற்பமான மக்கள் பங்கேற்பிலேயே நடைபெற்று வந்த இத்திரையிடல் நிகழ்ச்சி, ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து – வெளியரங்க நிகழ்ச்சியாக ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடத்தப்பட்டதில், பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஏற்பாடுகளை யாஸிர் கலாமீ, எம்.ஏ.கே.தாஹா, பி.எம்.ஏ.ஸதக்கத்துல்லாஹ், ஏ.எஸ்.புகாரீ உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி & படங்கள்:
எழுத்து மேடை மையம் தமிழ் நாடு
தொடர்புக்கு: +91 91713 24824
|