பொதுமக்கள் மலிவு விலையில் மருந்துகளைப் பெற்றிட வகை செய்யும் “மக்கள் மருந்தகம் - Genering Medical Shop” துவக்குவதற்காக, இந்திய ரூபாய் 60 ஆயிரம் வழங்கப்படும் என, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், 06.01.2017. வெள்ளிக்கிழமையன்று 20.00 மணிக்கு, மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
தலைமையுரை:
உறுப்பினர் ஹாஃபிழ் பீ.எம்.ஸர்ஜூன் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். மன்றத் தலைவரும் – கூட்டத் தலைவருமான எம்.ஆர்.ரஷீத் ஜமான் - அனைவரையும் வரவேற்று தலைமையுரையாற்றினார்.
வழமைக்கு மாற்றமாக - நடப்பு கூட்டத்தில் அங்கத்தினரின் வருகை குறைவாக உள்ளதை அவர் வருத்தமுடன் சுட்டிக்காட்டிப் பேசினார். நடப்பு செயற்குழுவின் பொறுப்புக் காலம் 31.12.2016. அன்றுடன் முடிவடைந்துவிட்டதாகவும், அடுத்து வரும் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய செயற்குழு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பல்வேறு சவால்களைத் தாண்டி, திட்டமிடப்பட்ட நிதித் தொகை பெறப்பட்டு, நகர்நலப் பணிகள் திருப்திகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
மன்றத்தின் கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கையை, துணைத்தலைவர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் சுருக்கமாக நினைவூட்டிப் பேசினார். காயல்பட்டினம் ஷிஃபா / இக்ராஃ நிறுவனங்கள் மூலம் மருத்துவ / கல்வி உதவித்தொகை கோரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வரவு - செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் வரவு - செலவு கணக்கறிக்கையை உறுப்பினர் உமர் ரப்பானீ கூட்டத்தில் சமர்ப்பிக்க, அதற்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஒரு சிலர் தவிர்த்து பெரும்பாலும் அனைத்து உறுப்பினர்களும் நிலுவையின்றி தமது சந்தா தொகையைச் செலுத்திவிட்டதாகக் கூறிய அவர், இனி வருங்காலங்களிலும் இது தொடர வேண்டும் என்று கூறினார். ஒப்புதல் பெறப்பட்டுள்ள இந்த வரவு - செலவு கணக்கறிக்கை, அரசின் கணக்குத் தணிக்கைக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இக்ராஃ குறித்து...
கடந்த 22.12.2016. அன்று நடைபெற்ற இக்ராஃவின் செயற்குழுக் கூட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசிய துணைத்தலைவர், நடப்பு 2017ஆம் ஆண்டு முதல், தகுதியுள்ள மாணவர்களுக்கு முழு கல்வி உதவித்தொகையையும் கடனுதவி அடிப்படையில் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்திட சிங்கப்பூர் காயல் நல மன்றம் ஒப்புதலளிக்க, இக்கூட்டத்தில் ஒருமனதாக இசைவு தெரிவிக்கப்பட்டது.
நிகழாண்டில், அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள இக்ராஃவின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில், அதன் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கான நாள் நிச்சயிக்கப்படவுள்ளதாக அவர் தகவல் தெரிவித்தார்.
ஷிஃபா குறித்து...
உலக காயல் நல மன்றங்களின் மருத்துவத் துறை கூட்டமைப்பான ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் ட்ரஸ்ட் தொடர்பாக, அண்மையில் தான் காயல்பட்டினம் சென்று வந்தபோது அவதானித்ததன் அடிப்படையில், துணைத்தலைவர் தகவல்களைப் பரிமாறினார்.
பொதுமக்களுக்கு மலிவு விலையில் ஆங்கில மருந்துகளைக் கிடைக்கச் செய்யும் “மக்கள் மருந்தகம் - Generic Medical Shop” நிறுவனத்தை, ஷிஃபா மூலம் துவக்குவது குறித்து விவாதிப்பதற்காக, திட்டமிடப்படாத ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, கருத்துகள் பரிமாறப்பட்டதாகக் கூறிய அவர், இம்மருந்தகம் துவக்கப்பட்டால், மருத்துவ உதவி கோரி மன்றங்களால் பெறப்படும் விண்ணப்பங்களை - தகுதி அடிப்படையில் முன்னுரிமையளித்துப் பரிசீலிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினார்.
“மக்கள் மருந்தகம்” துவக்கும் திட்டத்தின் நடப்பு நிலை குறித்து, உறுப்பினர் சாளை நவாஸ் காயல்பட்டினத்திலிருந்து தொலைபேசி வழியே தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, “மக்கள் மருந்தகம்” துவக்கத்திற்காக, சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
துளிர் பள்ளிக்குத் தேவையான புதிய வகுப்பறைக்கான கட்டிடப் பணிகள் நிகழும் ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் துவக்கப்படவுள்ளதாக, ஊரிலிருக்கும் மன்ற அங்கத்தினர் அங்கு சென்று வந்த பின் தந்த தகவல் தெரிவித்ததாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
நிதிநிலை அறிக்கை:
நிகழும் 2017ஆம் ஆண்டுக்கான நிதிநிலையறிக்கையை, துணைத்தலைவர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வாசித்தார். 34 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் தொகையில், மன்றத்தின் நகர்நலத் திட்டங்கள், விண்ணப்பங்களுக்கான உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இன்ஷாஅல்லாஹ் - மன்ற அங்கத்தினரின் நிறைவான ஒத்துழைப்புகளை வழமைபோல் பெற்று, திட்டமிடப்பட்ட நிதிநிலையறிக்கைப் படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
உதவி கோரும் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல்:
மருத்துவம் / கல்வி உதவி கோரி மன்றத்தால் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு உதவுவதற்காக, 2017ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கு, 1400 சிங்கப்பூர் டாலர் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
BBQ:
மன்ற உறுப்பினர் ஹாஃபிழ் பீ.எம்.முஹம்மத் ஸர்ஜூன் ஏற்பாட்டில், 11.02.2017. சனிக்கிழமையன்று சூட்டுக்கறி (BBQ) நடத்தப்படவுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
வருடாந்திர பொதுக்குழு:
01.04.2017. அன்று மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், மன்றத்தின் புதிய செயற்குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக 19.03.2017. அன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்திற்கான முறையான அழைப்பை மார்ச் முதல் வாரத்தில் வெளியிடவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
Aloha Changi Chaletஐ நிகழ்விடமாகக் கொள்ளலாம் என்றும், மன்ற உறுப்பினர்களான கே.எஸ்.ஐ.அபூபக்கர், எம்.எச்.முஹம்மத் உமர் ரப்பானீ, எம்.ஏ.சி.இஸ்மாஈல், ஷேக் ஷீத் ஆகியோர் முன்னேற்பாட்டுப் பணிகளுக்கான குழுவினராகவும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டனர்.
வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை முன்னிட்டு - கால்பந்து, பாட்மிண்டன், பந்து வீச்சு, கைப்பந்து, வினாடி-வினா உள்ளிட்ட போட்டிகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டு, மன்ற ஆலோசகர் பாளையம் முஹம்மத் ஹஸன் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. இக்கூட்டத்தில் - மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்து லில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|