தனியார் நிலங்களிலுள்ள சீமைக் கருவேல மரங்களை, 30.01.2017.க்குள் அகற்றி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைக்குமாறும், தவறினால் நீதிமன்ற ஆணையை மீறிய செயலாகும் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கை:-
மேன்மைமிகு சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு எண் WP (MD) 16485/2015 இல் 20.12.2016. அன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்புரையின்படி, தூத்துக்குடி மாநகராட்சி எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை வேருடன் அகற்றும் பணி தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
மேலும், மேன்மைமிகு சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் 10.01.2017 அன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்புரையின்படி, கோவில்பட்டி, காயல்பட்டினம் நகராட்சிகள், மாவட்டத்திலுள்ள 19 பேரூராட்சிகள் மற்றும் 12 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள தெரிந்தெடுக்கப்பட்ட 36 கிராம ஊராட்சிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை வேருடன் அகற்றும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் இப்பணி விரைவில் மேற்கொள்ளப்படும்.
மேற்படி சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக அறிக்கையை 31.01.2017 அன்று மேன்மைமிகு உயர் நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தாக்கல் செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது.
எனவே, தனியார் இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு பொதுமக்களும், பட்டாதாரர்களும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு, தங்கள் நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை 30.01.2017.க்குள் தாங்களாகவே அகற்றி மேன்மைமிகு சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையின் தீர்ப்பினைச் செயல்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவ கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அதை அகற்றத் தவறும் பட்சத்தில், அது மேன்மைமிகு உயர் நீதிமன்ற ஆணையை மீறிய செயலாகும் என்பதால் தனியார் நில உhpமையாளர்கள் சீமைக்கருவேல மரங்களை தாங்களாகவே அகற்றி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |