காயல்பட்டினம் நகராட்சிக்கான 2ஆம் பைப்லைன் திட்டம் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, நேரடி கள ஆய்வுக்குப் பின் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். விரிவான விபரம்:-
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சிக்கான 2ஆவது பைப் லைன் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.ரவிக்குமார் ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-
காயல்பட்டினம் நகராட்சிப் பகுதிக்கான ரூபாய் 29.67 கோடி மதிப்பில் 2ஆம் கட்ட பைப் லைன் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்காக பொன்னன்குறிச்சி தலைமை நீரேற்று நிலையத்தில் 6 உறிஞ்சி கிணற்றுப் பணிகள் முடிக்கப்பட்டு 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி (சம்ப்) அமைக்கப்பட்டுள்ளது.
35.67 கிலோ மீட்டர் நீளமுள்ள முதன்மைக் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஆதிநாதபுரம் மற்றும் தென்திருப்பேரை அருகிலுள்ள – பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான நீர்வரத்து தென்கால் கால்வாயில் பைப் லைன் போடுவதற்காக தள ஆய்வு செய்யப்பட்டது.
பொதுப்பணித்துறை WRO அவர்களிடம் உரிய அனுமதி பெற்று, பணிகளை விரைந்து முடித்து, வரும் 25ஆம் நாளுக்குள் காயல்பட்டினம் நகராட்சிப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் நீர் ஏற்றி, பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய - தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எஞ்சிய பணிகளை ஏப்ரல் மாதத்திற்குள் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பின்னர், காயல்பட்டினம் லெட்சுமிபுரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 4 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர் கோட்டாட்சியர் தியாகராஜன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்களான எம்.ஜெயசீலன் (தூத்துக்குடி), எட்வர்ட் அமல்ராஜ் (கோவில்பட்டி), உதவி செயற்பொறியாளர் (நீர்ப் பாசனம்) வினோத்குமார், கால்பட்டினம் ஆணையாளர் (பொறுப்பு) வெ.அறிவுச்செல்வன், பொறியாளர் பாலமுருகன், திருச்செந்தூர் வட்டாட்சியர் செந்தூர்ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன் உட்பட - தொடர்புடைய துறைகள் சார்ந்த அலுவலர்கள் இதன்போது உடனிருந்தனர்.
|