மீன் வளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு இம்மாதம் 15ஆம் தேதி முதல் மே மாதம் 29ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு, விசைப்படகு மற்றும் இழுவைப் படகுகள் மூலம் கடலில் மீன் பிடிக்க தடை விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை பின்வருமாறு:-
தமிழ்நாடு அரசின் கடல் மீன் பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983இன் படி, தமிழ்நாடு கடல் பகுதியில் மீன் வளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, திருவள்ளூர் வருவாய் மாவட்ட கடல் பகுதியிலிருந்து, கன்னியாகுமரி மாவட்ட நகர எல்லை வரையிலான கிழக்கு கடற்கரை பகுதி முழுவதும் 45 நாட்கள் - அதாவது, ஏப்ரல் 15ஆம் நாள் முதல் மே 29ஆம் நாள் வரை (இரு நாட்களும் உட்பட) உள்ள கால அளவில் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் கடலில் மீன்பிடிக்கத் தடை செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
அரசு ஆணையின்படி, இந்த ஆண்டு 2017 ஏப்ரல் 15 முதல் மே 29ஆம் நாள் வரை தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் கடலுக்குச் செல்ல தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|