“காயல்பட்டினம் புறவழிச் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை அமைய விட மாட்டோம்” என மதுக்கடை அமைவிடத்தில் பொதுமக்களுடன் நின்றவாறு – திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
ஆறுமுகநேரியில் காயல்பட்டினம் புறவழிச்சாலையில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவலையடுத்து அதனை கண்டித்து திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் பொதுமக்கள அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்ய முற்றுகையிட்டனர்.
தமிழகத்தில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து, ஆறுமுகனேரி மெயின் பஜாரில் உள்ள டாஸ்மாக் கடை மூடப்பட்டது. ஒரு வாரத்திற்கு முன்பு இந்த டாஸ்மாக் கடையை ஆறுமுகனேரி அடைக்கலாபுரம் சாலையில் முத்துகிருஷ்ணாபுரம் விலக்கு பகுதியில் அமைக்க முடிவு செய்து, மதுபான சரக்குகளை கொண்டு சென்றனர். இதனையறிந்த அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மதுபான சரக்கு கொண்டு சென்ற வாகனத்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் அதிகாரிகள் தலையிட்டு அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட மாட்டாது என உறுதியளித்தனர். பின்னர் வருவாய்துறை அதிகாரிகள் வேறு இடத்தை பார்த்து மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். அதில் ஆறுமுகனேரி காயல்பட்டினம் புறவழிச்சாலையில் உள்ள ஒரு இடத்தை தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காயல்பட்டினத்தில் உள்ள பொது நல அமைப்புகள் கையெழுத்து இயக்கம் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது.
இதனால் ஆறுமுகநேரியில் காயல்பட்டினம் புறவழிச் சாலையில் டாஸ்மாக் கடை அமைப்பது கேள்விகுறியானது. மீண்டும் நேற்று (13.04.2017.), அந்த இடத்தில் புதியதாக மின் இணைப்புகள் மற்றும் ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிஷ்ணன் தலைமையில் காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவை நிர்வாகிகள் அமைவிடம் சென்றனர்.
பின்னர் திருச்செந்தூர் கோட்டாட்சியரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அந்த குறிப்பிட்ட இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்படாது என கோட்டாட்சியர் உறுதியளித்ததையடுத்து சட்டமன்ற உறுப்பினரால் அறிவிக்கப்பட்டிருந்த முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், “இந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க விடமாட்டோம்!” என கூறினார்.
திமுக திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், ஆறுமுகநேரி பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் கல்யாணசுந்தரம், காயல்பட்டினம் முத்து, ஜலீல், முஸ்லீம் ஐக்கிய பேரவை நிர்வாகிகள் நவாஸ், தாஜுதீன், வாவு இஸ்ஹாக், காயல் அமானுல்லா, வியாபாரிகள் சங்க தலைவர் அப்துல்காதர் மற்றும் பலர் இதன்போது உடனிருந்தனர்.
தகவல் & படங்கள்:
V.குமார்
|