காயல்பட்டினத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் – காயல்பட்டணம்.காம் எழுத்து மேடை ஆசிரியர்களுள் ஒருவரும், ஐக்கிய அரபு அமீரகம் துபையில் பணிபுரிபவருமான எம்.எஸ்.அப்துல் ஹமீத் தமிழாக்கம் செய்த “துரோகி” எனும் தலைப்பிலான நூல் வெளியீட்டு நிகழ்ச்சி துபையில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
குவாண்டனாமோ சிறையில் இராணுவ வீரராக பணியாற்றிய டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் எழுதிய THE TRAITOR என்ற புத்தகத்தை தமிழில் காயல் எழுத்தாளர் M.S. அப்துல் ஹமீது அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்.
‘இலக்கியச்சோலை’ பதிப்பகம் அதன் தமிழாக்கமாக வெளியிட்டுள்ள "துரோகி" என்ற புத்தகம் EMIRATES INDIA FRATERNITY FORUM சார்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 07/04/2017 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியின் துவக்கமாக வலசை ஃபைஸல் வரவேற்புரை ஆற்றினார். பின்னர் EMIRATES INDIA FRATERNITY FORUM ஒருங்கிணைப்பாளர் அப்துல் கஃபூர் EIFF பற்றிய அறிமுகவுரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக துபை காயல் நல மன்றத் தலைவரும், ARISTO STAR GEN. TRADING நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டருமான ஜே.எஸ்.ஏ. புகாரீ அவர்களும், WINSTAR நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் அபுல் கலாம் ஆசாத் அவர்களும் கலந்து கொண்டு புத்தகத்தின் முதல் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.
மேலும் எழுத்தாளர்களும், சமூக ஆர்வலர்களுமான ஜெஸீலா பானு, ஹுஸைனம்மா என்ற யூஸுஃபா ஆகியோர் புத்தக விமர்சன உரை நிகழ்த்தினார்கள்.
விமர்சன உரை நிகழ்த்திய ஜெஸீலா பானு அவர்கள் இஸ்லாத்தின் புனிதம் பற்றியும், சிறைவாசிகளாக இருந்த போதும் இஸ்லாத்தை துல்லியமாக பின்பற்றுவதை பார்த்து ஓர் இராணுவ வீரர் மனம் மாறியிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று எனவும் தெரிவித்தார்.
அடுத்ததாக பேசிய ஹுஸைனம்மா என்ற யூஸுஃபா அவர்கள் குவாண்டனாமோ சிறைவாசிகளின் நிலையோடு இந்திய,தமிழக சிறைவாசிகளின் நிலைமையையும், ஃபாசிசம் இந்தியாவில் செய்துகொண்டிருக்கும் அட்டூழியத்தையும் அழகாக எடுத்துரைத்தார்.
இறுதியில் நூலாசிரியர் M.S. அப்துல் ஹமீது அவர்கள் ஏற்புரை வழங்கினார். தனது ஏற்புரையில் தான் ஏன் இந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்தேன் என்று கூறும்பொழுது, அழகிய இலக்கியம் படைப்பதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்றும், இது போன்ற தஃவா தொடர்பான புத்தகங்களையும், சமூகப் பிரச்சினைகளை பேசக்கூடிய புத்தகங்களையும் எழுதுவதற்குத்தான் ஆட்கள் மிகக் குறைவாக இருக்கிறார்கள் என்றும், அதனால்தான் தான் இம்மாதிரியான புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து மொழிபெயர்த்து வருவதாகவும் கூறினார்.
மேலும் இந்தியாவில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்தும், தமிழக சிறைவாசிகளின் பரிதாபமான நிலை குறித்தும் விவரித்த அவர், இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மக்கள் அனைவரும் தங்களால் ஆன முயற்சியை மேற்கொண்டு சமூகத்தை சக்திப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்தியாவில் ஃபாசிசத்தின் கோரப்பிடிகளில் மக்கள் சிக்கியிருக்கின்ற போதும் யாரும் நிராசையடைந்து விட வேண்டாம் என்றும், இம்மாதிரியான பிரச்சினைகள்தான் நமது ஈமானை பலப்படுத்தி ஃபாசிஸ்டுகளை வெற்றி பெறச் செய்யும் என்றும் அவர் கூறினார்.
நூலை வெளியிடும் முன் "துரோகி" நூல் குறித்து நெல்லை ஆதில் உருவாக்கிய 5 நிமிட காணொளிக் காட்சி ஒளிபரப்பப்பட்டது. இது நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அமைந்தது.
நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கிய வலசை ஃபைஸல் நன்றியுரையும் நவின்றார்.
இந்நிகழ்ச்சியில் காயலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு, "துரோகி" நூலையும், இதர இலக்கியச்சோலை நூல்களையும் ஆர்வமாக வாங்கினர். இரவு உணவுடன் இனிதே நிறைவுற்றது நிகழ்ச்சி.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|