காயல்பட்டினம் கடற்கரையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருசடிக்கு மின் இணைப்பு பெறப்பட்டுள்ளதற்கு, அடுத்த 15 நாட்களுக்குள் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் தடையில்லாச் சான்று (No Objection Certificate - NOC) பெற்று சமர்ப்பிக்கவும், தவறும் பட்சத்தில் நடைமுறையிலுள்ள விதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திடம் மின் வாரியம் பதிலளித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரையோரம் - மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி அனுமதியில்லாமல், அரசு புறம்போக்கு நிலத்தில் - குருசடி ஒன்று சட்ட விரோதமாகக் கட்டப்பட்டுவருகிறது.
CRZ விதிமுறைகளுக்கு எதிராகவும், புறம்போக்கு நிலங்களில் வழிப்பாட்டுத்தலங்கள் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் தமிழக அரசின் அரசாணைக்கு எதிராகவும் அமைந்துள்ள இந்தக் குருசடியை அப்புறப்படுத்த கோரி – “நடப்பது என்ன?” குழுமம் சார்பாக - இது தொடர்பான, மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து துறைகளுக்கும் மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான இக்கட்டுமானத்திற்கு, 07 364 002 0925 என்ற எண்ணிலான மின்னிணைப்பு, PARISH PRIEST, St. Antony Curuzadi, Singi Durai, Kayalpattinam என்ற பெயரில் முன்காப்பீடு பத்திரம் (INDEMNITY BOND) பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த மின்னிணைப்பு - மின்வாரியத்துறையின் விதிமுறைகளை மீறியே வழங்கப்பட்டுள்ளது என அறிந்து - இது சம்பந்தமாக - புகார் ஒன்று, நடப்பது என்ன? குழுமம் சார்பாக - நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.
அதற்கான பதிலை தற்போது - காயல்பட்டினம் மின்நிலையத்தின் துணைப்பொறியாளர் வழங்கியுள்ளார்.
அதில் - குருசடிக்கான மின்னிணைப்பை பெற்றுள்ளவரிடம், 15 தினங்களுக்குள் - மாவட்ட ஆட்சியரின் தடையில்லா சான்றிதழை (NOC) சமர்ப்பிக்க கூறியிருப்பதாகவும், அவ்வாறு சமர்ப்பிக்க தவறும் பட்சத்தில் அமலில் உள்ள விதிமுறைகள்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|