காயல்பட்டினம் புறவழிச் சாலையில் மதுக்கடை அமைக்கும் முயற்சி, பூந்தோட்டத்தில் மது விற்பனை, பப்பரப்பள்ளியில் குப்பை எரிப்பு ஆகியவற்றை எதிர்த்தும், உரிய நடவடிக்கை கோரியும், நேற்று (10.04.2017. திங்கட்கிழமை) காலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் வாராந்திர கூட்டத்தின்போது, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக, மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக புகார் மனு அளித்து முறையிடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
ஏப்ரல் 10 திங்கட்கிழமையன்று (நேற்று), தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமாரிடம் மூன்று முக்கிய கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் - காயல்பட்டினத்தைச் சார்ந்த ஆண்கள், பெண்கள் என பெருந்திரளானவர்கள் பங்கேற்றனர்.
முதல் கோரிக்கை: காயல்பட்டினம் பை பாஸ் சாலையில் TASMAC மதுக்கடையை துவங்கிட வேலைகள் நடப்பது குறித்தது.
இதுகுறித்த தகவல்கள் முதலில் வெளியானதையொட்டி - எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு WHATSAPP மற்றும் SMS தகவல்கள் அனுப்ப – “நடப்பது என்ன?” குழுமம் பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தது. அதனைத் தொடர்ந்து, உலகெங்கும் வாழும் காயலர்களுள் நூற்றுக்கணக்கானோர் மாவட்ட ஆட்சியரின் அலைபேசி எண்ணுக்கு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இது தவிர, இம்மதுக்கடையை எதிர்த்து நகரின் பல்வேறு பகுதிகளில் – “நடப்பது என்ன?” குழுமம் சார்பாக - ஆயிரத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் பெறப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட கையெழுத்துகள் அடங்கிய கோரிக்கை மனு, - நகரை சார்ந்த திரளான ஆண்கள் / பெண்களால் நேற்று மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சமர்ப்பிக்கப்பட்டது.
இச்சந்திப்பின்போது, பை பாஸ் சாலையின் முக்கியத்துவத்தை குழுவினர் எடுத்துரைத்தனர். குறிப்பாக மனு சமர்ப்பிக்க வந்திருந்த பெண்கள் - நடைப்பயிற்சி உட்பட பல்வேறு காரணங்களுக்காக தாங்கள் அடிக்கடி பயன்படுத்தும் பகுதியே அச்சாலை எனவும், மதுக்கடையை இப்பகுதியில் அனுமதித்தால் அமைதி சீர்குலையும் எனவும் ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர்.
அப்பகுதியில் தாம் மதுக்கடை திறக்க இதுவரை உரிமம் கொடுக்கவில்லை என்றும், இனியும் கொடுக்கப்படாது என்றும் அப்போது மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
இரண்டாவது கோரிக்கை: காயல்பட்டினம் பூந்தோட்டம் பகுதியில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது குறித்தும், அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் - மீண்டும் மீண்டும் அங்கு மது விற்பனை துவங்குகிறது என்ற தகவலும் மாவட்ட ஆட்சியரிடம் மனு வாயிலாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாகக தான் விசாரிப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
மூன்றாவது கோரிக்கை: காயல்பட்டினம் பப்பரப்பள்ளி பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை, அவ்வப்போது சமூக விரோதிகள் தீ மூட்டுவது குறித்தும், இது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்ய - மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்த பிறகும், இதுவரை காயல்பட்டினம் நகராட்சி சார்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்த புகாரை - தொடர்புடைய துறைக்கு, தாம் அனுப்புவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
தொடர்ந்து - பப்பரப்பள்ளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பான புகார் - மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிஸ் இடமும் நேரடியாக வழங்கப்பட்டது. இதுகுறித்து தாம் மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் தெரிவிப்பதாக அவர் அப்போது உறுதியளித்தார். நிறைவில், இப்பிரச்சினைகள் குறித்து செய்தியாளர்களிடமும் “நடப்பது என்ன?” குழும நிர்வாகிகள் விவரித்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|