காயல்பட்டினம் பப்பரப்பள்ளி பகுதியில் தொடர்ந்து குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பாக ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் “நடப்பது என்ன?” குழுமம் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் பப்பரப்பள்ளி பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக - அங்கு கொட்டப்படும் குப்பைகள் எரிக்கப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், அவ்வப்போது - குப்பைகளுக்கு தீமூட்டும் நிகழ்வுகள் தொடர்கின்றன.
இதுகுறித்து, கடந்த செப்டம்பர் மாதம் முதல் “நடப்பது என்ன?” குழுமம் - தொடர்புடைய அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் கொடுத்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் - இது குறித்து காயல்பட்டினம் நகராட்சி ஆணையருக்கு - ஆணை ஒன்றைப் பிறப்பித்த மாசு கட்டுப்பாட்டு வாரியம், குப்பைகளை எரிப்போர் மீது வழக்கு முதல் தகவலறிக்கை (FIR) பதிவு செய்ய அறிவுறுத்தியிருந்தது.
அதற்குப் பிறகு குப்பைகள் எரிக்கும் சம்பவங்கள் வெகுவாகக் குறைந்திருந்தது. பின்பு, கடந்த ஜனவரி மாதம் மீண்டும் ஒருமுறை குப்பை எரிக்கப்பட்டது. அதனையடுத்து கடந்த வாரம், ஏப்ரல் 03 முதல் அன்றாடம் தொடர்ந்து குப்பைகள் எரிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க - மாவட்ட ஆட்சியர், மாசு கட்டுப்பாட்டு வாரியம், நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு “நடப்பது என்ன?” குழுமம் தகவல் தெரிவித்தது. இருப்பினும், இதுவரை இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால், ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் – “நடப்பது என்ன?” குழுமம் சார்பாக நேற்று (10.04.2017. திங்கட்கிழமை) புகார் பதிவு (CSR 144/2017) செய்யப்பட்டுள்ளது..
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|