சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நல மன்றத்தின் 80-வது பொதுக்குழுக் கூட்டம், இஃப்தார் நிகழ்ச்சியுடன் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் நிர்வாகக் குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல் நற்பணி மன்றம் – தம்மாம் அமைப்பின் 80-வது பொதுக்குழு கூட்டம், கடந்த 10.06.2017 சனிக்கிழமையன்று இஃப்தார் நிகழ்ச்சியோடு (இறையருளால்) குடும்ப சங்கம நிகழ்வாக சிறப்புற நடைபெற்றது. ப்த்ர் அல்-ராபிஃ மருத்துவ மைய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நூற்றுக்கும் அதிகமான காயலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்த இச்சந்திப்பில், அன்பர்கள் பலரும் தத்தம் குடும்பத்தோடு பங்கேற்றமை மனமகிழ்வை அளித்தது.
நிகழ்ச்சி அறிவிப்பு
முன்னதாக, மன்ற உறுப்பினர்கள் உட்பட சஊதி அரபிய்யாவின் கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் அனைத்து காயலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, நிகழ்விற்கான ஆயத்த பணிகள் துரிதமாக நடைபெற்றது.
இஃப்தார் நிகழ்ச்சி
ரமழான் 15-ஆம் பிறையான அன்றைய தினத்தில், மன்றத்தின் சார்பாக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுருந்த இஃப்தார் நிகழ்ச்சியில் பழங்கள், குளிர்ந்த பால் & வடை ஆகியவற்றுடன் ஜனாப் அப்துல் கரீம் (அவுலியா) சமைத்த சுவைமிகு காயல் கறி கஞ்சி பரிமாறப்பட்டது.
80-வது பொதுக்குழு கூட்டம்
இப்ஃதார் நிகழ்ச்சிக்கு பின்னர் நடைபெற்ற மஃரிப் தொழுகையை இளவல் ஜெய்னுல் ஆப்தீன் (தகப்பனார் ஜனாப் நஃபல்) இமாமாக முன்னின்று நடத்தினார்.
தொழுகையை தொடர்ந்து, மன்றத்தின் 80-வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக, இளவல் இஸ்மாயீல் (தகப்பனார் ஜனாப் ஹரீஸ்) கிராஅத் ஓதிட, மன்றத்தின் துனை தலைவர் ஜனாப் ஜியாவுதீன் வரவேற்புரையாற்றினார்.
அதன் பின்னர், சென்ற ஏப்ரல் மாதம் குடும்ப சங்கம நிகழ்வாக நடைபெடற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு பின்பு - மன்றத்தால் நடத்தப்பட்ட மாணவ மாணவியர்களுக்கான சிறப்பு முகாம்கள் குறித்து மன்றத்தின் தலைவர் ஜனாப் ரஃபீக் எடுத்துக்கூறினார்.
அடுத்து உரையாற்றிய செயலாளர் ஜனாப் இஸ்மாயீல் - மன்ற செயல்பாடுகள் குறித்து சுருக்கமாக கூறினார். இமாம்கள் & முஅத்தின்களுக்கான ரமழான் அன்பளிப்பு, அரசு பெண்கள் பள்ளியின் கட்டிட சீரமைப்பு உதவி, இக்ராஃ கல்வி சங்கத்தின் உதவிதொகை & கல்வி கடன் ஆகிய திட்டங்கள் குறித்து விளக்கினார்.
நிதி திரட்டல்
நிகழ்வில் பங்கேற்ற அன்பர்களிடம் ரமழான் மாத ஈகையான ஜகாத் தொகை, இமாம்கள் & முஅத்தின்களுக்கான ரமழான் அன்பளிப்பு & இக்ராஃ சங்கத்தின் கல்வி கடன் திட்டம் ஆகியவற்றுக்கான நிதி திரட்டப்பட்டது. அதன் பின், இக்ராஃ கல்வி சங்கத்திற்கு நம் மன்றத்தின் சார்பாக புதிய உறுப்பினர்கள் சேர்கையும் நடத்தப்பட்டு அதற்கான படிவமும் பூர்த்தி செய்யப்பட்டது.
இறுதியாக, நிர்வாகக் குழு உறுப்பினர் ஜனாப் இம்தியாஸ் நன்றியுரையாற்றிட, துஆ கஃப்பாராவுடன் குடும்ப சங்கம நிகழ்வாக நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டம் இனிதே நிறைவுற்றது.
நிழற்பட செருகேடு
நிகழ்வு தினத்தன்று எடுக்கப்பட்ட அனைத்து நிழற்படங்களையும், தனி உயர்தெளிவான படங்களாக பதிவிறக்கம் செய்திட https://www.irista.com/gallery/gh5j1luiyzhv என்ற இணையதள பக்கத்தைச் சொடுக்குக!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம் & நிழற்படங்கள்:
அ.ர.ஹபீப் இப்றாஹீம்
செயற்குழு உறுப்பினர்
காயல் நற்பணி மன்றம் - தம்மாம் |