யாருக்கிடையிலும் எந்த சண்டை சச்சரவுமில்லை என்பதால் சமாதான நடவடிக்கைகளுக்கு அவசியமில்லை என்றும், கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருசடி விஷயத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறும், திருச்செந்தூர் வட்டாட்சியர் நடத்திய கூட்டத்தில் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரையோரம் - சட்டத்திற்கு புறம்பாக, குருசடி உட்பட பல்வேறு ஆக்கிரமிப்புகள் கடந்த சில ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வருகின்றன. இவற்றை அகற்றக் கோரி – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக, கடந்த சில மாதங்களாக தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்புகார்கள் அடிப்படையில் இன்று (ஜூன் 14) மாலை - திருச்செந்தூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது.
இவ்விசாரணையில் அரசு தரப்பில் - வட்டாச்சியர் திரு அழகர், துணை வட்டாச்சியர், வருவாய் ஆய்வாளர், காயல்பட்டினம் தென்பாக கிராம நிர்வாக அதிகாரி ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
“நடப்பது என்ன?” குழுமம் சார்பாக அதன் நிர்வாகிகளான பீ.எம்.ஏ.ஸதக்கத்துல்லாஹ், ஏ.எஸ்.புகாரீ, சாளை நவாஸ், எஸ்.கே.ஸாலிஹ், எம்.எம்.முஜாஹித் அலீ, எம்.என்.அஹ்மத் ஸாஹிப் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குருசடியைப் பொருத்த வரை மதம் தொடர்பான கட்டுமானமாக இருப்பதால், அதனை அகற்றாமல் – அதே நேரத்தில் அக்கட்டிடத்தில் இனியும் எந்தப் பணியும் செய்யாதிருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம் என்றும் வட்டாட்சியரால் தெரிவிக்கப்பட்டது.
இதே போன்ற வாக்குறுதிதான் சில ஆண்டுகளுக்கு முன்பு – அப்போதைய வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காயல்பட்டினம் மக்களுக்கு வழங்கப்பட்டது என்றும், இருந்தபோதிலும் அவ்வாக்குறுதிகள் மீறப்பட்டு, சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட குருசடி கொஞ்சங்கொஞ்சமாக விரிவாக்கவும், புனரமைக்கவும் பட்டது என்றும் கூறிய “நடப்பது என்ன?” குழுமத்தினர்,
இனியும் இது போன்ற வாக்குறுதிகளையும், சமாதானப் பேச்சுகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து சட்டம் என்ன கூறுகிறதோ, அதை எவ்வித தயக்கமோ – தயவுதாட்சண்யமோ இன்றி அரசு அதிகாரிகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அழுத்தமாக வலியுறுத்திக் கூறினர்.
இக்குருசடியின் உருவாக்கம் பற்றிய பின்புலங்கள், அதில் இடம் பெற்ற சட்டவிரோத அத்துமீறல்கள், இதனால் மக்களுக்கு ஏற்பட்டுவரும் பாதிப்புகள் பற்றியும் வட்டாட்சியருக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
நிறைவில், இரு தரப்பினருக்குமான சமாதானக் கூட்டமாக இக்கூட்டத்தைக் குறிப்பிட்டு – வருகைப் பதிவேட்டில் கைச்சான்று கேட்கப்பட்டது. அதைக் கண்ணுற்ற “நடப்பது என்ன?” குழுமத்தினர், இது மதப் பிரச்சினையுமில்லை... எங்களுக்குள் எந்தச் சண்டையுமில்லை என்பதால், சமாதானத்திற்கும் அவசியமில்லை... சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி அரசிடம் நாங்கள் புகார் கொடுத்துள்ளோம்... அதன் மீது நேர்மையான – விரைவான நடவடிக்கையை மட்டுமே எதிர்பார்க்கிறோம்... நாங்கள் கொடுத்துள்ள புகார்கள் குறித்து விசாரிக்க வட்டாட்சியராகிய தாங்கள் அழைத்ததாகக் கூறியதன் அடிப்படையிலேயே இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளோம்... எனவே, இக்கூட்டத்தை சமாதானக் கூட்டமாகக் கருதும் வாசகத்தைக் கொண்ட இப்பதிவேட்டில் கைச்சான்றிடப் போவதில்லை; மறு தரப்பினருடன் பேசவும் எங்களுக்கு எந்த அவசியமுமில்லை என மறுக்க, அத்துடன் கூட்டம் முடிவுற்றது.
காயல்பட்டினம் மக்கள், அனைத்து சமய மக்களுடனும் இணக்கமாக வாழக்கூடியவர்கள் என்றும், இந்நகரில் பள்ளிவாசல்களும், கோவில்களும், தேவாலயங்களும் பல்லாண்டுகளாக எவ்வித பிரச்சனையுமின்றி இயங்கி வருகின்றன என்றும் “நடப்பது என்ன?” குழுமம் சார்பாக இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஜூன் 14, 2017; 9:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|