ஐக்கிய அரபு அமீரகம் – துபை காயல் நல மன்றத்தின் 2017 ஜூன் மாத செயற்குழுக் கூட்டம் இஃப்தார் நிகழ்ச்சியுடன் நடைபெற்றது. இதுகுறித்து, அவ்வமைப்பின் நிர்வாகக் குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
துபை காயல் நல மன்றத்தின் ஜூன் மாத செயற்குழுக் கூட்டம் நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 09.06.2017 வெள்ளியன்று மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ அவர்கள் இல்லத்தில் மாலை 5 மணியளவில் நடைபெற்ற இக்கூட்டத்தை எம்.எஸ். அப்துல் ஹமீத் இறைமறை வசனங்களை ஓதி துவக்கி வைத்தார். மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ அவர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கி, கூட்டத்தை வழிநடத்தினார்.
கூட்டத்தில் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நமதூர் மஸ்ஜித்களில் புனிதப் பணியாற்றும் இமாம்கள், முஅத்தின்களுக்கு ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் செய்வது போன்று இவ்வருடமும் நிதியுதவிகள் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
வழமை போன்று ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைகளை இக்ரா மூலம் வழங்குவது என்றும், மருத்துவ உதவிகளை ஷிஃபா மூலம் வழங்குவது என்றும், நமதூரில் பைத்துல் மால்களுக்கும், இதர நிறுவனங்களுக்கும் வழமை போன்று இவ்வருடமும் நிதியுதவிகளை வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
பரிமார் தெருவாசிகளின் தொழில் உதவிக்காக துபை காயல் நல மன்றம் செய்யும் பொருளுதவிக்காக ஊரில் பரிமார் தெருவில் நடந்த நிகழ்ச்சியில் மன்றத் தலைவர் ஜேஎஸ்ஏ புகாரீ அவர்கள் கலந்து கொண்டார். அதன் விவரங்களை தலைவர் அவர்கள் மன்ற செயற்குழு உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
அதேபோன்று பல்வேறு காயல் நல மன்றங்களுடன் துபை காயல் நல மன்றமும் பொருளுதவி செய்து துவக்கப்பட்டுள்ள மக்கள் மருந்தகத்திற்கு தான் சென்று அங்குள்ள நிலைமையை அறிந்து வந்த விவரத்தையும் மன்றத் தலைவர் அவர்கள் பகிர்ந்து கொண்டார்.
சிறுதொழில் உதவிக் குழு மூலமாக சிறுதொழிலுக்கான பொருளாதார உதவிகளுக்காக வந்திருந்த சில விண்ணப்பங்களுக்கு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு, உரிய உதவித் தொகைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இறுதியில் கஃப்பாராவுடன் கூட்டம் நிறைவுற்றது.
செயற்குழுக் கூட்டம் முடிந்தவுடன் நோன்பு துறப்பு நிகழ்ச்சி ஆரம்பமானது. சுவையான நமதூர் கறிக்கஞ்சியுடன், வடை போன்ற பலகாரங்களும், காயல் பிரியாணியும் பரிமாறப்பட்டன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம் & நிழற்படங்கள்:
எம்.எஸ்.அப்துல் ஹமீத் |