காயல்பட்டினம் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் – வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு காயல்பட்டினம் – சுற்றுவட்டார ஏழைப் பெண்களுக்கு பெருநாள் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. 900 பேர் பயன்பெற்றுள்ளனர். விரிவான விபரம்:-
காயல்பட்டினம் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில், நகரின் ஏழைப் பெண்களுக்கு பெருநாள் உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (18.06.2017. ஞாயிற்றுக்கிழமை) 10.30 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில், எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ தலைமையில் நடைபெற்றது.
நகரப் பிரமுகர்களான எம்.கே.முஹ்யித்தீன் தம்பி (துரை), சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் (முத்து ஹாஜி), ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், மக்கீ நூஹுத்தம்பி, ‘துணி’ எம்.ஏ.முஹம்மத் உமர், ஏ.கே.கலீலுர் ரஹ்மான், எம்.எல்.ஷேக்னா லெப்பை, வி.டி.என்.அன்ஸாரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிராஅத்துடன் துவங்கிய நிகழ்ச்சியை எஸ்.கே.ஸாலிஹ் நெறிப்படுத்தினார். கே.எம்.டீ. மருத்துவமனை மேலாளர் அப்துல் லத்தீஃப் வரவேற்றுப் பேசியதுடன், திட்ட விளக்கவுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த 900 ஏழை மகளிருக்கு, நோன்புப் பெருநாளை முன்னிட்டு - புடவை, ஜாக்கெட் துணி, அரிசி ஆகிய பொருட்களை உள்ளடக்கிய பொதி வழங்கப்பட்டது. நிகழ்ச்சித் தலைவர் வினியோகத்தைத் துவக்கி வைக்க, அவையோர் அவற்றைப் பயனாளிகளுக்கு வழங்கினர்.
காயல்பட்டினம் மகளிர் உதவும் சங்க அமைப்பாளர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா நன்றி கூற, மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
படங்களில் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ
|