கேரள மாநிலம் மலபார் காயல் நல மன்றம் (மக்வா) அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சியில் காயலர்கள் திரளாகப் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் செய்தி தொடர்பாளர் எஸ்.என்.மீரான் வெளியிட்டுள்ள அறிக்கை:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் எமது மலபார் காயல் நல மன்றத்தின் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி, 11.06.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை, கேரள மாநிலம் - கோழிக்கோடு கல்லாய் ரோட்டில் அமைந்துள்ள சினேகாஞ்சலி கம்யூனிட்டி ஹாலில், எமது அமைப்பின் தலைவர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
துவக்க நிகழ்வுகள்:
அரங்க நிகழ்ச்சிக்கு, மன்றத் தலைவர் ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். மன்றத்தின் செயலாளர் முகைதீன் அப்துல் காதர் & துணைச் செயலாளர் சிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மன்றத்தின் செய்தி தொடர்பாளர் S.N. மீரான் அவர்கள் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சேட் மஹ்மூத் அவர்களுடைய மகனார் முஹம்மத் இஃப்ராஹிம் இறைமறையை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
வரவேற்புரை:
நிகழ்வுகளில் பங்கேற்க வந்திருந்த மன்ற உறுப்பினர்களையும், அவர்கள்தம் குடும்பத்தினர் & விருந்தினர்களையும், மன்ற தலைவர் அவர்கள் மன்றத்தின் சார்பில் வரவேற்றுப் பேசினார்.
மழலையரின் மனமகிழ் நிகழ்ச்சி:
மழலைகள் மொழியில் மலபார் மழை சற்று ஓய்வு எடுத்தது. நோன்பு துறக்க நேரம் நெருங்குவது தெரியாமல் மன்றம் - குழந்தைகளின் பேச்சால் மூழ்கியது...
சிறுவர்-சிறுமியருக்கான இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அனைத்து குழந்தைகளும் தமது திறமைகளை அழகுற வெளிக்காட்டி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தனர். மாஷா அல்லாஹ்...
மன்ற உறுப்பினர்கள் & ஆதரவாளர்களின் பிள்ளைகள் (3 முதல் 12 வயது வரையான 25 குழந்தைகள்) மழலைக் குரலில் திறமையை வெளிப்படுத்தியது, செவிகளுக்கு இதமாகவும் அனைவரது மனதையும் கொள்ளைக் கொள்ளும் விதமாகவும் இருந்தது, அல்ஹம்துலில்லாஹ்.
K.S. காதர், சிறப்பு விருந்தினர் ஷாநவாஸ் & முன்னாள் தலைவர் மஸ்வூத் ஆகியோர் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
வாழ்த்து கவிதை:
காயல் தமிழ் கவிஞர் S.A. பாதுல் அஸ்ஹாப் அவர்கள் மலபார் மன்றம் குறித்து இயற்றிய அழகிய கவிதை ஒன்றை வாசித்தார்:
மலபார் நாட்டிலே ஒரு மகிழ் கூடம்
எங்கள் மலபார் காயல் நல மன்றம்
காயல் மண்ணில் புன்னகை மலரவே
ஆங்காங்கே பூத்து குலுங்குகிறது காயல் மன்றங்கள்…
மனிதாபிமானத்தில் மலையளவு உயர்ந்து
உதவீக்கரம் நீட்டுவதில் முழு நிலவாய் ஜொலித்து
ஒற்றுமை பிடியில் ஓயாத கடல் அலையாய் அடித்து
ஓங்கி வளர்ந்த அழகிய பசும் சோலை
எங்கள் காயல் மன்றங்கள் யாவும்…
மன்றங்களில் தனிமனித அதிகாரம் இல்லை
தான்தோன்றி தலைகணம் கொண்ட அகங்காரம் இல்லை
ஒற்றுமை எனும் வேலி போட்டு
உருவாக்கப்பட்ட அன்பு கலந்த அழகிய பூந்தோட்டம் எங்கள் மன்றங்கள்...
பனிச்சுமை கொண்டிரிந்தாலும்
மன்றம் மீது பாசச்சுமை கொண்டு
உழைக்கும் மன்றத்தின் பொறுப்பாளர்களே
அன்பு கொள்வதில் அழகானவர்களாய்
வேலை செய்வதில் வெள்ளந்திகளாய் இருக்கிறார்கள்
எங்கள் மன்ற உறுப்பினர் சொந்தங்கள்
புன்னகை தவழும் புனித ரமழான் மாத நோன்பு திறப்பு நிகழ்ச்சி
குடும்பங்களின் ஒன்றுகூடலோடும்
மழலை செல்வங்களின் மயங்க வைக்கும் திறமைகளோடும்
சிறப்பாக நடைபெறுகிறது...
பூக்கள் மீது விழும் பனித்துளியால்
பூவுக்கு சேதம் இல்லை…
மண்ணின் மீது விழும் மழை துளியால்
மண்ணுக்கும் சேதம் இல்லை…
ஆனால், கண்ணீர் துளி சிந்தியே
பலரின் வாழ்வு - சத்தம் இல்லாமல் போன கடல் அலையாய்
நோயுற்ற - பின்னடைந்த மானிடர்களை
தேற்றிவிட்டு அத்துயர் துடைப்போம்
நம்மால் இயன்ற வரை…
மறுஉலக நன்மையே அடித்தளம்.
அது இன்றி இங்கு இல்லை புகழ்ச்சி புகழாரம்…
மன்றங்களின் வளர்ச்சிக்கு மன்றாடி உழைக்கும் கரங்களுக்கு
இறைவன் அருள் பொழியட்டும்…
இறைவன் நாடினால் நம் காயல் மன்றங்கள் யாவும்
ஒரே கோட்டு பாதையில் ஒற்றுமையாய்
ஒன்றி பயணிக்க நாம் அனைவரும் இறைவனிடம் பிராத்திப்போம்...
என்ற வாழ்த்து வரியோடு நிறைவு செய்தார்.
சாதனை மாணவ மாணவியருக்கு பரிசு:
+2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மன்ற உறுப்பினர் நோனார் காதர் மூஸா அவர்களின் மகள் முத்து ஆயிஷா ரிஃப்கா, செய்யது தமீம் அவர்களின் மகனார் ஷாக்கிர் ரஹ்மான் & செயற்குழு உறுப்பினர் சாளை முஹம்மது உதுமான் அவர்களின் மகள் நிதா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
CBSC 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றமைக்காக, உறுப்பினர் புஹாரி சுலைமான் அவர்களின் மகனார் முஹம்மது அஃஹ்தாப், உறுப்பினர் சீனா மொஹ்தூம் முஹம்மத் அவர்களின் மகளார் நிஹானா & உறுப்பினர் சவுகத் அலி அவர்களின் மகனார் முஹம்மத் சலீம் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் 10ம் வகுப்பு மாநில தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற, உறுப்பினர் அமீன் சாதிக் அவர்களின் மகள் ஆயிஷா ஹுசைனா, மன்ற பொருளாளர் ஷேக் சலாஹுதீன் அவர்களின் மகளார் ஜலீலா ரித்துவனா, சேட் மொஹ்தூம் முஹம்மத் அவர்களின் மகளார் பாத்திமா முஃப்ரிகா & செயற்குழு உறுப்பினர் தாவூத் அவர்களுடைய மகனார் முஹம்மத் உஸாமா ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசுகளை சலீம் பையனூர், ஹுசைன் கோழி கோடு, M.A.K. அப்துல் காதர், தலசேரி ஹைத்ரூஸ் & பிஸ்மில்லாஹ் முஹம்மத் இஸ்மாயில் ஆகியோர் வழங்கினர்.
இஃப்தார் - நோன்பு துறப்பு:
கூட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து, அரங்கில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிக்கு அனைவரும் அழைக்கப்பட்டனர். பேரீச்சம் பழம், காயல் கஞ்சி & பருப்புவடை போன்ற உணவுப் பதார்த்தங்கள் உணவு ஏற்பாட்டுக் குழுவினரால் சிறப்பாகவும், சுவைபடவும் ஆயத்தம் செய்யப்பட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
மஃரிப் தொழுகை:
இஃப்தார் நிகழ்ச்சிக்குப் பின், மஃரிப் தொழுகை ஜமாஅத்துடன் (கூட்டாக) தொழப்பட்டது. செயற்குழு உறுப்பினர் சேட் மஹ்மூத் அவர்களின் மகனார் முஹம்மத் இஃப்ராஹிம் தொழுகையை வழிநடத்தினார்.
அதனைத் தொடர்ந்து கூட்டத்தின் இரண்டாம் அமர்வு நடைபெற்றது. துவக்கமாக அனைவருக்கும் சுவையான தேநீர் வழங்கப்பட்டது.
செயலாளர் சுருக்கவுரை:
அடுத்து, மன்றச் செயலாளர் N.M. அப்துல் காதர் உரையாற்றினார். நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ள அவசியம் குறித்தும், பொதுக்குழு & மன்றம் தொடர்பான அரசு விதிகள் குறித்தும், அவர் தனது உரையில் தெளிவாக எடுத்துரைத்தார்.
சிறப்புரை:
ஷிஃபா அமைப்பு & மக்கள் மருந்தகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மன்ற முன்னாள் தலைவரும் ஷிஃபா அமைப்பின் அரங்காவலருமான மஸ்ஊத் அவர்கள் உறுப்பினர்கள் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் எளிய முறையில் விளக்கமளித்தார்.
மேலும், செயற்குழு உறுப்பினர் உஸ்மான் லிம்ரா அவர்கள் மக்வாவின் செயல்பாடு, மன்றத்தின் பொருளாதார நிலை & நாம் இன்னும் அதிகப்படியாக செய்ய வேண்டிய உதவிகள் குறித்து சிறப்புரை வழங்கினார்கள்.
விருந்தோம்பல்:
பின்னர், இரவு உணவுக்காக அனைவரும் அழைக்கப்பட்டனர். இடியாப்ப பிரியாணி & தக்காளி ஜாம் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
நன்றியுரை:
நிறைவாக, மன்றத்தின் துணை செயலாளர் A.S.I. முஹம்மது சிராஜ் அவர்கள் நன்றியுரையாற்றினார். இரு தினங்களாக நடைபெற்ற கோழிக்கோடு மாவட்ட வேலை நிறுத்தத்தை பொருட்படுத்தாது, நம் உறுப்பினர்கள் அயராது பங்களித்ததை அவர் நினைவு கூர்ந்தார். இறுதியாக, கஃப்ஃபாரா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
கூட்டம், இஃப்தார் - நோன்பு துறப்பு & இரவுணவு உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும், மன்ற அங்கத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர், அல்ஹம்துலில்லாஹ். இரவு 08.30 மணியளவில், அனைவரும் தத்தம் வசிப்பிடம் திரும்பினர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்வா சார்பாக...
தகவல்:
கோழிக்கோட்டிலிருந்து...
S.N.மீரான்
(செய்தி தொடர்பாளர் – மக்வா)
|