தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் வாழையடி எனும் பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான – 120 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பள்ளிவாசல் – சுமார் 60 ஆண்டுகளாகப் பயன்பாடற்று, தூர்ந்து போயிருந்தது. இதன் காரணமாக, பள்ளிவாசலுக்குச் சொந்தமான நிலப்பரப்பில் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்பகுதியிலும், சுற்றுவட்டாரத்திலும் வசிக்கும் மக்களுக்கு பள்ளிவாசலின் தேவை அதிகரித்ததையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் வணிக நிறுவனம் வைத்திருந்த – காயல்பட்டினம் சித்தன் தெருவைச் சேர்ந்த ஸாதிக் என்பவர், சில சமூக ஆர்வலர்களின் துணையுடன் - தூர்ந்துபோயிருந்த இப்பள்ளிக்கு மஸ்ஜிதுர் ரஹ்மான் என்று பெயரிட்டு - புனர்நிர்மாணம் செய்து, மீண்டும் வழிபாட்டிற்கு ஏற்றதாக்கினார்.
அதன் தொடர்ச்சியாக, நன்கொடையாளர்கள் பலரின் பொருளுதவியைக் கொண்டு, பள்ளிவாசலுக்குத் தேவையான ஏற்பாடுகள் அவ்வப்போது கொஞ்சங்கொஞ்சமாக நிறைவேற்றப்பட்டு, பள்ளிக் கட்டிடம் தற்போது ஓரளவுக்குத் தன்னிறைவுடன் காணப்படுகிறது.
இருந்தபோதிலும், பள்ளிவாசலைச் சுற்றி நாய், பன்றிகள் அதிகளவில் வசித்து வருவதால், அவை பள்ளிக் கட்டிடத்திற்குள் வந்துவிடுமோ என்ற அச்சம் உள்ளதையடுத்து, தற்போது சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. அப்பணியை முழுமையாகப் பூர்த்தி செய்திட இன்னும் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதாகவும், இவ்விடத்தில் இப்பள்ளியின் அவசியத்தைக் கருத்திற்கொண்டு பொதுமக்கள் தாராளமாக நன்கொடை வழங்கியுதவிடுமாறும் பள்ளி நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நன்கொடையளிக்க விரும்புவோர்,
Masjid Rahman Jumma Palli
A/C 0541 000 50 30 55 33
IFSC TMBL 0000054
TAMILNADU MERCANDILE BANK
NAZARETH
என்ற வங்கிக் கணக்கிற்கு, நன்கொடைகளை அனுப்பி வைக்குமாறும் அவர்கள் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தகவல் & படங்கள்:
சாளை நவாஸ் & M.N.அஹ்மத் ஸாஹிப்
|