காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், குடிநீர் வினியோகக் குழாய்களிலிருந்து கசிந்து தேங்கும் குடிநீரால் டெங்கு கொசு உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதன்மீது நடவடிக்கை கோரியும் காயல்பட்டினம் நகராட்சியிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் மனு அளித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் பகுதியில் டெங்கு காய்ச்சல் - கடந்த சில மாதங்களாக - அதிகமாக காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெங்கு காய்ச்சலுக்கு காரணியான கொசுக்கள், தேங்கும் நீர்களால் வளர்கிறது என்றும் கூறப்படுகிறது.
இல்லங்களில் தேங்கும் நீர், குப்பைகள் போன்றவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் ஒரு புறம் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், நகரின் பல்வேறு பகுதிகளில் - குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகளால் நீர் தேக்கங்கள் பல மாதங்களாக காணப்படுகிறது. இவைகளும் டெங்கு கொசுக்கள் உருவாக வழிவகுக்கும்.
மேலும் - சமீப காலமாக, நகராட்சி மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் துர்வாடை வருவதாக புகார்களும் எழுந்துள்ளன. இது போன்ற கசிவுகளும் இதற்கு காரணியாக இருக்க வாய்ப்புள்ளது.
எனவே - குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகளுக்கு நிரந்தர தீர்வுகாண கோரி -நடப்பது என்ன? குழுமம் சார்பாக காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திரு பொன்னம்பலம் அவர்களிடம் மனு வழங்கப்பட்டது.
இம்மனுவின் நகல் - மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஜூன் 19, 2017; 9:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|