கத்தர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதில், உறுப்பினர் ஒருநாள் ஊதிய நன்கொடையாக 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எம்.என்.முஹம்மத் ஸுலைமான் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
கத்தர் காயல் நல மன்றத்தின் 30ஆவது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இஃப்தார் - நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஆகியன, 02.06.2017 வெள்ளிக்கிழமையன்று 16.30 மணியளவில், கத்தர் - தோஹாவில் உள்ள அல் லிஷான் ரெஸ்டாரெண்ட்டில் வைத்து நனி சிறப்புடன் நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்...!!!
பெயர் பதிவு:
மன்ற உறுப்பினர்கள் குடும்பத்துடன் தத்தம் வாகனங்களில் நிகழ்விடத்திற்கு வந்தனர். வாகன வசதி இல்லாதோருக்கு வாகனங்கள் வைத்திருப்போர்கள் பொறுப்பேற்று சிரமமின்றி அழைத்து வந்தனர். நிகழ்வின் துவக்கமாக, உறுப்பினர் பதிவு மற்றும் சந்தா சேகரிப்பு ஆகிய பணிகளை, மன்றப் பொருளாளர் ஹுஸைன் ஹல்லாஜ், துணைப் பொருளாளர் ஹாஃபிழ் ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன் ஆகியோர் நெறிபடுத்தினர்.
மன்ற செயலாளர் M .N . முஹம்மது சுலைமான் அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தோரை வரவேற்று நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். மன்றத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களான சோனா முஹியத்தீன் அப்துல் காதர், பாஜுல் கரீம், மார்க்க அறிஞர்கள் அல் ஹாபிழ் முஹம்மது லெப்பை ஆலிம் மற்றும் அல் ஹாபிழ் ஸாலிஹ் ஆலிம் ஆகியோர் முன்னிலை வகிக்க, மன்ற தலைவர் முஹம்மத் யூனுஸ் அவர்கள் இக்கூட்டத்திற்கு தலைமை ஏற்றார்.
கூட்ட நிகழ்வுகள்:
மன்ற உறுப்பினர் ஹாபிழ் தாஹா ஹுசைன் இறைமறையின் சில வசனங்களை இனிதே ஓதி துவக்கி வைத்தார். வழமைபோல், "கவிக்குயில்" ஃபாயிஸ் அவர்களின் இனிய இன்னிசை பாடலுடன் கூட்டம் ஆரம்பமானது. சொளுக்கு முஹம்மத் இப்றாஹீம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
தலைமையுரை:-
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் முஹம்மது யூனுஸ் தலைமையுரையாற்றினார்.
இந்த இனிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த அனைவரையும் துவக்கமாக வரவேற்றுப் பேசிய தலைவர் யூனுஸ் அவர்கள்,
இங்கே குழுமியிருக்கும் தாங்கள் யாவரும் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் எண்ணத்தால் உயந்தவர்கள் என்பதனை எண்ணி மனநிறைவு கொள்கிறேன்.
ஓர் சமூகம் மேம்பட ஒற்றுமை என்றும் இன்றியமையாதது. நம்மிடையே ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதனை தகர்த்தெறிந்து ஊர் நலனுக்காக, பொதுநலன் கருதி நாம் ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டிய தருணம் இது என்று ஒற்றுமையை வலியுறுத்தி இறைமறையின் வசனத்தை முன்னிறுத்தி அழகுற எடுத்துரைத்தார். இன்னும் நாம் பயணிக்க வேண்டிய தூரம் மிகத்தொலைவு....ஆயினும் நல்லுள்ளங்கள் கொண்ட நம் உறுப்பினர்களின் பேராதரவுடன் இம்மன்றம் கடந்த 9 ஆண்டுகளாக நம்நகருக்கு பொதுநல சேவைகள் பல ஆற்றி வருகிறது. மேலும், நமது முயற்சிக்கு இறைவன் என்றும் உறுதுணையாக இருப்பானாக...!
இதுநாள் வரை மன்றம் செய்த சேவைகளை பல உறுப்பினர்கள் அறிந்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை எடுத்துரைப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
மேலும், மன்றத்தால் சேகரிக்க படும் சந்தா மற்றும் ஒரு நாள் ஊதிய நன்கொடைகளை நாம் யாரென்றே தெரியாத நபர்களுக்கு வழங்கி இறைவனின் திருப்பொருத்தத்தை பெற்று கொண்டு இருக்கிறோம்.
புதிய உறுப்பினர்கள் :-
கத்தர் நகருக்கு புதிதாக வந்துள்ளவர்கள் தங்களை அறிமுகப்படுத்தி மன்றத்தில் உறுப்பினராக சேர்த்துக்கொண்டனர்.
மன்ற உறுப்பினர்களின் திருமண அழைப்பு :-
திருமணமாக உள்ள மன்ற உறுப்பினர்கள் தங்களது திருமண அழைப்பிதழை மன்றத்திற்கு அளித்தனர். அவர்களின் விபரம் வருமாறு...
1) முஹம்மது அனசுதீன்
2) சொளுக்கு முஹம்மது ஜெமீல்
3) சொளுக்கு முஹம்மது இப்ராஹிம்
4) ஹாபிழ் முஹம்மது ரபி
5) முஹம்மது பத்தாஹ்
மன்றத்தின் சார்பில் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
பொருளாளர் உரை:
மன்றப் பொருளாளர் ஹுஸைன் ஹல்லாஜ் , மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையைத் தாக்கல் செய்து, கூட்டத்தின் ஒப்புதலைப் பெற்றார்.
மேலும், நடப்பாண்டில் மன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கும் அதே தருணத்தில், உறுப்பினர்களின் சந்தா மற்றும் ஒரு நாள் ஊதிய நன்கொடை நிதிகள் சென்ற வருடத்தைவிட குறைந்திருப்பது வருந்ததக்கது என்றார் .
மார்க்க சொற்பொழிவு:
மவ்லவீ ஹாஃபிழ் ‘முத்துச்சுடர்‘ எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை பாக்கவீ - ‘"சதக்காவின் சிறப்புகள்" என்ற தலைப்பில் ஒற்றுமை மற்றும் தான தருமங்களின் பலன்கள் நம்மை எவ்வாறு இறைவனின் திருப்பொருத்தத்தை அடைய செய்கிறது என்று அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் அறிவுரைகளை மேற்கோள் காட்டி சிறப்புரையாற்றினார்.
நன்றியுரை:-
செயற்குழு உறுப்பினர் KMT ஷேக்னா அவர்கள் நன்றி நவிழ, மவ்லவீ ஹாஃபிழ் ‘முத்துச்சுடர்‘ எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை பாக்கவீ அவர்கள் துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் இறையருளால் இனிதே நிறைவுற்றன. அல்ஹம்து லில்லாஹ்...!
ஒருநாள் ஊதிய நன்கொடை:
நடப்பு நிகழ்ச்சியில், ‘ஒருநாள் ஊதிய நன்கொடை’ வழங்கும் திட்டத்தின் கீழ் - மூடி உறையிடப்பட்ட பெட்டியில் நிதி சேகரிக்கப்பட்டது. இவ்வகைக்காக ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் தொகை சேகரமானது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்! இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி...!
இஃப்தார் - தொழுகை இடைவேளை:
மஃரிப் தொழுகைக்கான அதான் ஒலிக்கப்பட, இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி துவங்கியது. அனைவருக்கும் பேரீத்தம்பழம், வடை வகைகள், குளிர்பான வகைகள், பழ வகைகள் பரிமாறப்பட்டன.
தொடர்ந்து பஃபே முறையில் இரவுணவு விருந்துபசரிப்பு நடைபெற்றது. அனைத்து நிகழ்ச்சிகளிலும் மன்ற உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடு:
அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும், முஹம்மத் முஹ்யித்தீன், ஹாஃபிழ் எம்.எம்.எல்.முஹம்மத் லெப்பை ஆகியோர் செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி – கத்தர் கா.ந.மன்றம்)
|