காயல்பட்டினத்தில் நடைபாதை குறு வணிகர்களிடம் நகராட்சி ஒப்பந்தக்காரர் கட்டாய வசூல் செய்து வருகிறார். இன்று காலையில் வரி செலுத்த குறு வணிகர்கள் மறுத்ததால் வாக்குவாதம் முற்றி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரிவான விபரம்:-
காயல்பட்டினத்தில் ஆடு – மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்பது அரிதாகி வரும் இக்காலகட்டத்தில், ஆங்காங்கே இன்றளவும் சிலர் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். மேய்ச்சலுக்கு இருந்த ஏராளமான இடங்களெல்லாம் கல் கட்டிடங்களாக உருவானதையடுத்து, அக்கால்நடைகளுக்குத் தீவனங்களை விலைக்கு வாங்கிக் கொடுக்கும் நிலையுள்ளது.
இவ்வாறானவர்களைக் கருத்திற்கொண்டு, குரும்பூர், அம்மன்புரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து புல் கட்டுகளைச் சுமந்தவர்களாக சில பெண்கள் காயல்பட்டினம் முதன்மைச் சாலையிலுள்ள கடைகளுக்கு முன்பு - அதிகாலை 05.30 மணிக்குத் துவங்கி, காலை 07.30 மணிக்குள் முகாமிட்டு, அனைத்து புல் கட்டுகளையும் விற்றுச் செல்வது வழமை.
இந்தக் குறு வணிகர்களிடம், காயல்பட்டினம் நகராட்சியின் சந்தையைக் குத்தகைக்கு எடுத்துள்ள எஸ்.மகேஷ் என்பவர் அன்றாடம் 20 ரூபாய் வரி வசூலித்து வருகிறார்.
சந்தையைக் குத்தகைக்கு எடுத்தவர் சந்தையிலுள்ள வணிகர்களிடம் மட்டுமே வரி வசூலிக்க வேண்டும் என்றிருக்க, சந்தைக்கு வெளியே வெகு தொலைவில் இருந்து வணிகம் செய்யும் இதுபோன்ற குறு வணிகப் பெண்களிடமும் வரி வசூலிப்பதைக் கண்ணுற்ற சில சமூக ஆர்வலர்கள், காயல்பட்டினம் நகராட்சிக்கு நேரடியாகச் சென்று முறையிட்டதாகவும், அவ்வாறு நடவாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்று பதில் பெறப்பட்ட பின்பும் இதுபோன்று வரி வசூலிப்பது தொடர்வதாகவும், இன்று காலையில் அவ்வாறு வரி வசூலிக்கையில் சிலர் எதிர்த்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதுகுறித்து “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திடம் முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
|