எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் – பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் இன்று சிறப்பு துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் உத்தரவின் பேரில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் ஒருங்கிணைப்பில், துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லட்சுமி மேற்பார்வையில் 30 பெண் துப்புரவுப் பணியாளர்கள் - கடற்கரையில் சிதறிக் கிடந்த குப்பை கூளங்களை அகற்றியதோடு, ஆங்காங்கே வளர்ந்திருந்த முட்புதர்களையும் வெட்டியகற்றினர்.
அதுபோல, பரிமார் தெரு மீன் சந்தை உள்ளிட்ட – பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் அவர்கள் சிறப்புத் துப்புரவுப் பணி செய்தனர்.
நோன்புப் பெருநாளன்றும், அதற்கடுத்த நாட்களிலும் இதுபோன்று துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், கடற்கரை மணற்பரப்பிற்குள் தின்பண்ட வணிகர்கள் செல்வதற்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், நகர சுகாதாரத்தை மையப்படுத்தி நகராட்சி தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பளிக்குமாறும் நகராட்சி ஆணையாளர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
|