தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் – திருச்செந்தூர் வட்டாரத்தின் சார்பில், காயல்பட்டினத்திலுள்ள அங்கன்வாடிகளில் முன்பருவக் கல்வி பயின்ற 17 மழலையருக்கு கல்வி நிறைவுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்ச்சி, காயல்பட்டினம் 08ஆவது வார்டு தேங்காய் பண்டக சாலை அங்கன்வாடி வளாகத்தில், 14.06.2017. புதன்கிழமையன்று 15..45 மணியளவில் நடைபெற்றது.
தேங்காய் பண்டக சாலை வட்டாரத் தலைவர் என்.பீ.முத்து தலைமை தாங்கினார். தேங்காய் பண்டக சாலை, சித்தன் தெரு, ஓடக்கரை, மங்களவாடி, அருணாச்சலபுரம் ஆகிய 5 அங்கன்வாடி பயிற்றுநர்கள் - முறையே பாப்பா, ஹாஜர் முபீனா, முத்து லட்சுமி, முத்தார், ரஷ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்செந்தூர் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் எம்.தங்க முனியம்மாள் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மேற்படி 5 அங்கன்வாடிகளில் முன்பருவக் கல்வி முடித்த மழலையருக்கு சான்றிதழ்களை வழங்கினார். அவரைத் தொடர்ந்து அவையோரும் சான்றிதழ்களை வழங்கினர்.
மொத்தம் 17 மழலையர் இச்சான்றிதழ்களைப் பெற்றனர். நிறைவில், அனைத்து மழலையருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இனி வருங்காலங்களில், அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கை பெற்றிட, அங்கன்வாடியில் பயின்று முடித்து – இதுபோன்று முன்பருவக் கல்வி நிறைவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
|