காயல்பட்டினத்தில் மூத்த சகோதரி இறந்த அதிர்ச்சியில், அவரது ஜனாஸாவில் கலந்துகொள்ள வந்திருந்த தங்கையும் திடீரென மரணமடைந்தார். இருவரும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். விரிவான விபரம்:-
காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவைச் சேர்ந்த மொகுதூம் முஹம்மத் என்பவரது மனைவி சித்தி ஹுஸைனா. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் என மொத்தம் 4 மக்கள் உள்ளனர். மகன்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. சித்தி ஹுஸைனா தனது மகள்களுடன் வசித்து வந்தார். மொகுதூம் முஹம்மத் ஏற்கனவே இறந்துவிட்டார்.
சித்தி ஹுஸைனாவின் உடன்பிறந்த தங்கை ஃபிர்தவ்ஸ் (வயது 55). இவ்விருவரும் அடுத்தடுத்த தெருக்களில் வசித்து வந்ததால், ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடனும், ஆறுதலாகவும் இருந்து வந்துள்ளனர்.
சித்தி ஹுஸைனா - உடல்நலக் குறைவு காரணமாக, ஜூன் 11 அன்று நள்ளிரவு 01.00 மணியளவில் மரணமடைந்துவிட்டார். இத்தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தங்கை ஃபிர்தவ்ஸ், தனது மூத்த சகோதரியின் உடலைப் பார்த்துக் கதறியழுததுடன், அவரது உடலருகிலேயே கண்ணீர் விட்டபடி சோகத்துடன் அமர்ந்திருந்தார். சித்தி ஹுஸைனாவின் உடல் நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்க, தங்கை ஃபிர்தவ்ஸ் - 17.00 மணியளவில் தனது வீட்டிற்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்றுள்ளார்.
வீட்டிற்கு வந்த ஃபிர்தவ்ஸ் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்ணுற்ற அக்கம்பக்கத்தினர் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்துள்ளனர். ஆனால் அவரிடம் எந்த அசைவுமில்லாததால், அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரது உடலைப் பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர். இதையடுத்து அவரது உடல் அவரது இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
இருவரின் உடல்களும், காயல்பட்டினம் புதுப்பள்ளி மையவாடியில் அடுத்தடுத்து நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அக்காளும், தங்கையும் அடுத்தடுத்து மரணித்து – அருகருகில் அடக்கம் செய்யப்பட்டது நகரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் & படங்கள்:
M.H.அப்துல் வாஹித்
|