சஊதி அரபிய்யா – தம்மாம் காயல் நல மன்றத்தின் சார்பில் பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள 174 குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கப்படவுள்ளதாகவும், ஜூன் 10 அன்று இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் அதன் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் ‘தம்மாம்’ இஸ்மாஈல் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
இறையருளால் எமது தம்மாம் காயல் நல மன்றத்தின் 80ஆவது செயற்குழு கூட்டம் 02.06.2017 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் நடந்த இந்நிகழ்வில், மன்றத்தின் நல திட்ட பணிகள் (குறிப்பாக நோன்பு கால சிறப்பு திட்டங்கள்) குறித்து அறிவிக்கப்பட்டு, அதற்கான செலவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
உணவுப் பொருட்கள் வழங்கல்
இறைவனின் பொருத்தத்தை பெற்றிடும் வகையில், நமது காயல்பட்டினம் நகர மக்களின் செம்மையான வாழ்வுக்காக காயல் நற்பணி மன்றம் – தம்மாம் பல்வேறு நலதிட்ட பணிகளை செவ்வனே செய்து வருவதை தாங்கள் நன்கறிவீர்கள். அவ்வகையில், சென்ற ஆண்டுகளைப் போன்று, இவ்வாண்டின் ரமழான் மாதத்திலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய 174 குடும்பங்களை கண்டறிந்து, அவர்களுக்கு நோன்பு கால உணவுப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
குடும்பம் ஒன்றுக்கு தலா 1,750 ரூபாய் வீதம், இத்திட்டத்தின் கீழ் 3,04,500 ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்கள் விநியோகிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ். அரிசி, பருப்பு வகைகள் & தேநீர் தூள் உட்பட மொத்தம் 30 பொருட்கள் இதில் அடங்கும்.
இஃப்தார் நிகழ்ச்சி & 80-வது பொதுக்குழு கூட்டம்
மன்றத்தின் 80-வது பொதுகுழுக் கூட்டம் வருகின்ற 10.06.2017 சனிக்கிழமையன்று (இன்ஷா அல்லாஹ்) நடத்திட திட்டமிடப்பட்டு, முறையே மன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
ரமழான் 15-ஆம் பிறையான அன்றைய தினத்தில், மன்றத்தின் -சார்பாக, சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கான பிரத்யேக அழைப்பிதழ் கீழே:
மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள்
நோன்பு கால சிறப்பு நல பணிகள் குறித்து விவாதித்த பின்னர், கடந்த (மே 2017) மாதம் மன்றத்தின் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்வுகள் / முகாம்கள் குறித்த மீளாய்வும் இந்த செயற்குழுக் கூட்டத்தில் நடைபெற்றது.
குறிப்பாக, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் இணைவில் சிறப்பாக நடந்தேறிய “கைவினைப் பொருட்கள் உருவாக்கல் & கதைசொல்லல் முகாம்” மற்றும் இக்ராஃ கல்வி சங்கத்தின் இணைவில் சிறப்புற முடிவுற்ற “ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புகள்” குறித்த விவாதங்களும் கருத்து பரிமாற்றமும் நடைபெற்றன.
கைவினைப் பொருட்கள் உருவாக்கல் & கதைசொல்லல் முகாம் குறித்த செய்தியை காண கீழுள்ள வலைபக்க முகவரியை சொடுக்கவும்:
http://www.kayalpatnam.com/shownews.asp?id=19218
ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புகள் குறித்த செய்தியை காண கீழுள்ள வலைபக்க முகவரியை சொடுக்கவும்:
http://www.kayalpatnam.com/shownews.asp?id=19262
அதன் பின்னர், இக்ராஃ கல்வி சங்கத்தின் இவ்வாண்டிற்கான கல்வி உதவிக்கான திட்டங்கள் குறித்தும் & ஷிஃபா அறக்கட்டளையின் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, அதற்கான நிதிகளும் ஒதுக்கப்பட்டது.
இறுதியாக, துஆ கஃப்பாராவுடன் செயற்குழுக் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம் & தகவல்:
அ.ர.ஹபீப் இப்றாஹீம்
(செயற்குழு உறுப்பினர் – KWADAM)
|