ஜூன் 05ஆம் நாளன்று உலக சுற்றுச்சூழல் நாளாகும். இதனை முன்னிட்டு, 05.06.2017. திங்கட்கிழமையன்று 17.00 மணிக்கு, காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், சுனாமி குடியிருப்பு பகுதியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நகராட்சி மேலாளர் அறிவுச் செல்வன் முன்னிலை வகித்தார்.நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் தலைமை தாங்கி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உரையாற்றினார்.
மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளைத் தனித்தனியே தேக்கி வைத்து, நகராட்சியின் துப்புரவுப் பணியாளர்கள் வருகையில் பொதுமக்கள் முறைப்படி ஒப்படைக்க வேண்டும் என்றும், ப்ளாஸ்டிக் கழிவுகளைத் தனியே பிரித்து வைத்து, வாரத்திற்கு ஒருநாள் துப்புரவுப் பணியாளர்கள் அதற்கென்றே வருகையில் அவற்றைக் கொடுத்து ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
குப்பைகளைத் தனித்தனியே பிரித்து வைப்பதன் முறைகள் குறித்து, நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லட்சுமி விளக்கிப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவ-மாணவியர் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் அனைவரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர், அனைவரும் பங்கேற்க - சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி அமைதிப் பேரணியும் நடைபெற்றது.
|