இஸ்லாமிய வரைமுறைகளை விட்டும் தடம் மாறாமல், தமிழ் இலக்கிய உலகில் கவிதை புனைவதில் தனக்கென தனி முத்திரை கொண்ட கவிக்கோ அப்துல் ரகுமான், உடல்நலக் குறைவு காரணமாக 02.06.2017. வெள்ளிக்கிழமையன்று 02.00 மணியளவில், தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 80.
அன்னாரின் ஜனாஸா, 03.06.2017. சனிக்கிழமையன்று 12.00 மணியளவில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் மையவாடியில், ஏற்கனவே காலமான அவரது மனைவியின் மண்ணறை அருகில், 03.06.2017. சனிக்கிழமையன்று 13.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. லண்டனிலிருந்த அவரது மகன் செய்யித் அஷ்ரஃப் நல்லடக்கத்தில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்திருந்தார்.
இதில் தமிழ் ஆர்வலர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் திரளாகப் பங்கேற்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். தமிழக முன்னாள் அமைச்சர் பழனிமாணிக்கம் (திமுக), தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், பத்திரிகை ஆசிரியர் ம.நடராசன், அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சாதிக், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த பாரதி கிருஷ்ணகுமார், கவிஞர் ஈரோடு தமிழன்பன், கவிஞர் எம்.ஜலாலுத்தீன், வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மைத் துணைத் தலைவர் எம்.அப்துர்ரஹ்மான், இந்திய தேசிய லீக் தலைவர் அகமது பஷீர், கவிஞர் சுரதா கல்லாடன், கவிஞர் நெல்லை ராமச்சந்திரன், தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் – சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்ஸாரீ, கவிஞர்கள் ஜெயபாஸ்கர், தன்ராஜ், அறிவுமதி, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர் லிங்குசாமி, உறவினர்கள் உள்ளிட்டோர் கவிக்கோவின் நல்லடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
1937ஆம் ஆண்டு நவம்பர் 09ஆம் நாளன்று மதுரையில் பிறந்த அப்துல் ரகுமான், சிறு வயது முதலே கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். இவரின் முதல் கவிதை தொகுப்பு ‘பால்வீதி’ 1974ஆம் ஆண்டு வெளிவந்தது. ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை தமிழில் பரப்பியதில் முக்கிய பங்கு வகித்தவர். வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் தமிழ்த் துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றினார்.
1999ஆம் ஆண்டு அப்துல் ரகுமான் எழுதிய ’ஆலாபனை’ கவிதைத் தொகுப்பு சாகித்ய அகாடமி விருது வென்றது குறிப்பிடத்தக்கது. பாரதிதாசன் விருது, கலைமாமணி, கம்பர் விருது, உமறுப்புலவர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.
அப்துல் ரகுமானின் மறைவிற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நன்றி:
சென்னை ஆன்லைன்
காயல்பட்டினத்திற்கு ஓரிரு முறை வருகை தந்துள்ள அவர், கடைசியாக 24.03.2013. அன்று சொந்த அலுவல் காரணமாக வந்தமை குறிப்பிடத்தக்கது.
|