நிகழும் ஜூன் 05ஆம் நாளன்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாளை முன்னிட்டு, “தூய்மை இந்தியா” இயக்கத்தின் கீழ், காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், கடந்த மே மாதம் 31ஆம் நாள் துவங்கி, ஜூன் 03ஆம் நாள் வரை நகரெங்கும் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் தலைமையில், பொறியாளர் பாலமுருகன், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் ஆகியோர் முன்னிலையில், காயல்பட்டினத்தின் 18 வார்டுகளிலும் மக்கள் கூடும் பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 16.30 மணி முதல் 21.00 மணி வரை தூய்மையை வலியுறுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
பேருந்து நிலையம், முத்தாரம்மன் கோயில் தெரு, விசாலாட்சியம்மன் கோயில் தெரு, கற்புடையார் பள்ளி வட்டம், மங்களாவாடி, சுனாமி நகர், அருணாச்சலபுரம், கோமான்புதூர், கோமான் நடுத் தெரு, இரத்தினபுரி, லட்சுமிபுரம், பூந்தோட்டம், ஓடக்கரை, செல்வவிநாயகபுரம், எல்.ஆர்.நகர் ஆகிய பகுதிகள் முதற்கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் அறிவுரைகளோடு, நாடகமும் நடத்தப்பட்டு வருகிறது. அந்நாடகத்தில், தன் வீட்டுக் குப்பையை அண்டை வீட்டருகே ஒருவர் கொட்டுவதால் ஏற்படும் பிரச்சினைகள், அதன் காரணமாக இதுவரை நிலவிய நல்ல உறவில் விரிசல், பிரச்சினை பெரிதாகி, அரசின் கவனத்திற்கு வந்ததும், நகராட்சி மேற்கொள்ளும் நடவடிக்கை, இதனால் ஏற்படும் சிரமங்களைத் தாமதமாகப் பட்டுணர்ந்த பின் சண்டையிட்ட இரு வீட்டாரும் மீண்டும் தன்னிலை உணர்ந்து, திருந்தி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உறுதிமொழி எடுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நாடகம், பொதுமக்களிடையே அன்றாடம் நடைபெறும் பிரச்சினையை வெளிப்படுத்துவதால், அவர்களின் கவனத்தைக் கவரும் வகையில் அமைந்ததாகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தாங்களும் நகராட்சியுடன் ஒத்துழைப்பதாகவும், நாடகத்தைப் பார்த்த பொதுமக்கள் கூறினர்.
தற்போது 09, 10ஆம் வார்டுகள் துவக்கமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பகுதிகளிலுள்ள அனைத்து வீடுகளிலிருந்தும் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தனித்தனியே பிரித்து வாங்கப்பட்டு வருவதாகவும், மாதம் இரண்டு வார்டுகள் வீதம் அதிகரிக்கப்பட்டு, வரும் அக்டோபர் மாதம் முதல் நகர் முழுக்க அனைத்து வார்டுகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும், நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ப்ளாஸ்டிக் கழிவுகளை வாரம் ஒருமுறை நகராட்சி சேகரிக்கும் என்றும், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பளித்து, நகராட்சியின் துப்புரவுப் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பளிக்குமாறும் இந்நிகழ்ச்சிகளின்போது, நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சிகளின்போது, நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லட்சுமி, பணியாளர் பட்டாணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து, காயல்பட்டினம் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள் – அதிகாரிகளிடையே ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடுகள் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் உணவுபசரிப்பு நடைபெற்றது. துப்புரவுப் பணியாளர்களுக்கு அதிகாரிகள் தம் கைகளால் உணவு பரிமாறியதுடன், உறவை வலுப்படுத்தும் வகையில் பணியாளர்களின் கைகளில் ராக்கி கயிறும் கட்டினர்.
|