சஊதி அரபிய்யா – ரியாத் காயல் நல மன்றம் சார்பில், நிகழும் ரமழான் மாதத்தை முன்னிட்டு, காயல்பட்டினத்திலுள்ள 226 ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கப்பட்டுள்ளதோடு, நோன்புப் பெருநாளுக்கு நாட்டுக் கோழி இறைச்சி வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, அவ்வமைப்பின் பிரதிநிதி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
புனித ரமழானை முன்னிட்டு ரியாத் காயல் நல மன்றம் சார்பில் 226 ஏழைக் குடும்பத்திற்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி! வழமை போல் பெருநாளன்று நாட்டுக்கோழி வழங்கவும் ஏற்பாடு!
சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றம் சார்பில், கடந்த ஐந்து வருடங்களாக புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஏராளமான ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டமும், கடந்த மூன்றாண்டுகளாக ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள், மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் பல குடும்பங்களுக்கு மாதந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த திட்டத்தின் கீழ் நடப்பாண்டும் (2017) ரமழான் நோன்பை முன்னிட்டு ரியாத் காயல் நல மன்றத்தின் சார்பில் 226 ஏழைக் குடும்பத்திற்கு உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. அத்துடன் பெருநாளை முன்னிட்டு இவர்கள் அனைவருக்கும் நாட்டுக்கோழி ஒன்று வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்திற்கு ரூ.2,745 மதிப்பில், 226 குடும்பங்களுக்கு - ரூ. 6,20,370 செலவில் அரிசி உள்ளிட்ட (30 வகையான) நோன்பு கால அத்தியாவசிய உணவுப் பொருட்களும், கூடுதல் திட்டமாக ரூ.83,000/- செலவில், இந்த அனைத்து குடும்பத்தினரும் பெருநாளன்று இரவு ஒரு உரித்த நாட்டுக் கோழி பெற்றுக் கொள்ளும் வகையில் அதற்கான டோக்கனும் கடந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் பயனாளிகளின் இல்லம் சென்று வழங்கி முடிக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்! இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை ரியாத் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதிகள் ஏ.தர்வேஷ் முஹம்மது மற்றும் சோனா எம்.எம்.டி.ஷாஹுல் ஹமீது ஆகியோர் செய்திருந்தனர்.
இந்த ரமலான் உணவுப் பொருட்கள் வழங்கிட பொருளுதவி செய்த ரியாத் காயல் நல மன்றத்தின் அங்கத்தினர்கள், அபிமானிகள் மற்றும் இதற்கான முயற்சிகளில் பணிகளில் ஈடுபட்ட அனைவர்களுக்கும் ரியாத் காயல் நல மன்ற நிர்வாகம் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து மகிழ்கிறது. ஜஸாக்குமுல்லாஹு கைரா!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|