காயல்பட்டினம் கடற்கரையில் சட்டவிரோத குருசடிக்கான அணுகு சாலை, ஆக்கிரமிப்பு நிலங்களில் குடிசைகள், பொதுமக்கள் அமரும் பகுதியில் புதிய படகுகள் உட்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் நேரில் மனு அளித்துள்ளது. சட்டத்திற்குப் புறம்பாக பணிகள் தொடராது என அதிகாரிகள் வாக்குறுதியளித்துள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருசடிக்கான அணுகு சாலை, ஆக்கிரமிப்பு நிலங்களில் குடிசைகள், பொதுமக்கள் அமரும் பகுதியில் புதிய படகுகள் உட்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக நேற்று (29.05.2017. திங்கட்கிழமை) பல்வேறு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
குருசடிக்கான அணுகு சாலை
காயல்பட்டினம் கடற்கரைப் பூங்காவிற்கு வடக்கே, சட்டத்திற்குப் புறம்பாக அணுகு சாலை அமைக்கும் பணி - கடந்த சில நாட்களாக நடந்து வந்தன. இது தொடர்பாக “நடப்பது என்ன?” குழுமம் சார்பாக கடந்த வாரம் - அனைத்துத் துறைகளுக்கும் மனு வழங்கப்பட்டது. மேலும் - மீன்வளத்துறை அதிகாரிகளை “நடப்பது என்ன?” குழுமம் தொடர்புகொண்டு பேசியதையடுத்து - இப்பணிகளை நிறுத்தி வைப்பதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறிருக்க, நேற்று (29.05.2017. திங்கட்கிழமை) காலை - தூத்துக்குடியில் உள்ள மாவட்ட ஆட்சியர், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், மீன்வளத்துறையின் இணை இயக்குநர், செயற்பொறியாளர் ஆகியோரிடம் – “நடப்பது என்ன?” குழுமம் விரிவான மனுவினை சமர்ப்பித்தது.
INTER TIDAL ZONE பகுதியில் CONCRETE சாலைகள் அமைப்பது தடை செய்யப்பட்ட பணி என்றும், சர்ச்சைக்குரிய குருசடிக்கு அணுகு சாலை அமைக்க எந்த முகாந்தரமும் இல்லை என்றும், மீன்பிடி இறங்கு தளத்திற்கு முறையான அனுமதியை TNSCZMA விடம் இருந்து பெறாமல் பணிகளை மேற்கொண்டதே தவறு என்பதும் அம்மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
“நடப்பது என்ன?” குழுமம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட இந்த மனு - அதிகாரிகளால், மீன்வளத்துறையின் பார்வைக்கு அனுப்பப்பட்டது.
தொடர்ந்து, இது தொடர்பாக - மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை - மீளவிட்டானில் உள்ள அவரது அலுவலகத்தில், “நடப்பது என்ன?” குழுமம் நேரில் சந்தித்து, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருசடி, அதற்கான அணுகு சாலை ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்தது. மேலும் - கள ஆய்வு செய்ய சுற்றுச்சூழல் பொறியாளரை - தமிழக அரசின் சுற்றுச்சூழல் இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளதும் அவருக்கு நினைவூட்டப்பட்டது.
மீன்வளத் துறைக்கு தான் உடனடியாக விளக்கம் கோரி அறிக்கை அனுப்புவதாகவும், ஒரு சில நாட்களில் நேரடியாக கள ஆய்வு செய்ய காயல்பட்டினம் வருவதாகவும் உறுதியளித்த அவர், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் - தன்னை நேரில் வந்து விளக்கமளிக்கக் கோரியிருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, “நடப்பது என்ன?” குழுமம் - மீன்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து, காயல்பட்டினம் கடற்கரையில் நடந்து வரும் பணிகள் ஏன் சட்டத்திற்கு விரோதமானவை என்பது குறித்து விளக்கியது. சட்டத்திற்குப் புறம்பாக எந்தப் பணிகளும் இனி தொடராது என மீன்வளத்துறை தரப்பிலிருந்து அப்போது உறுதியளிக்கப்பட்டது.
ஆக்கிரமிப்பு நிலங்களில் குடிசைகள்
காயல்பட்டினம் கடற்கரைக்கு வடக்கே - அண்ணாநகர், சிங்கித்துறை மற்றும் கொம்புத்துறை பகுதியில் - புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து, பல்வேறு குடிசைகள் சட்டத்திற்குப் புறம்பாக அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை அப்புறப்படுத்த மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக, அண்ணாநகர் எனக் கூறப்படும் பகுதியில் உள்ள மக்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, சுனாமி காலனியில் இடம் கொடுக்கப்பட்டு, அங்கு இடம் மாறாமல் பலர் - பழைய இடத்தையே ஆக்கிரமித்து வசித்து வருகின்றனர். CRZ விதிமுறைகள் படி - கடலின் உச்ச அலையில் இருந்து 200 மீட்டர் வரை குடித்தனங்களுக்கு அனுமதி இல்லை.
எனவே - சட்டத்திற்குப் புறம்பாக அமைக்கபப்ட்டுள்ள இந்த குடித்தனங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு வழங்கப்பட்டது.
“நடப்பது என்ன?” குழுமம் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட இந்த மனு - திருச்செந்தூர் கோட்டாட்சியருக்கு, மாவட்ட ஆட்சியக அலுவலர்களால் அனுப்பப்பட்டது.
பெண்கள் அமரும் பகுதிக்கு வடக்கே புதிய படகுகள்
காயல்பட்டினம் கடற்கரையின் பெண்கள் அமரும் பகுதியின் வடக்கே - கடந்த சில நாட்களாக ஏராளமான புதிய படகுகள் நிறுத்தி வைக்கபப்ட்டுள்ளன. வெளியூரிலிருந்து வந்துள்ளதாக அறியப்படும் இப்படகுகளின் சொந்தக்காரர்கள், அப்பகுதியில் குடிசைகள் அமைத்தும் வருகிறார்கள்.
நாளடைவில் இது புதிய குடியிருப்பாக உருவாகிவிட வாய்ப்புள்ளததால், அது தொடர்பான புகாரும் – “நடப்பது என்ன?” குழுமம் சார்பாக, மாவட்ட ஆட்சியரிடமும், மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட மனு - திருச்செந்தூர் கோட்டாட்சியரின் நடவடிக்கைக்கான அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம்.
[பதிவு: மே 29, 2017; 8:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|