செளதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 103-வது செயற்குழு கூட்டம் கடந்த 19- 05- 2017 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப்பிறகு, ஜித்தா ஷரபிய்யாவில் உள்ள இம்பாலா கார்டன் உணவக உள்ளரங்கில் வைத்து நடந்தேறிய அந்நிகழ்வுதனை பற்றி அம்மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருட்பெருங்கிருபையால் செளதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 103-வது செயற்குழு கூட்டம் கடந்த 19- 05 - 2017 வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா ஷரபிய்யாவில் உள்ள இம்பாலா கார்டன் உணவக உள்ளரங்கில் வைத்து நடைபெற்ற அக்கூட்டத்திற்கு சகோ. குளம் எம்.ஏ. அஹ்மது மெய்தீன் தலைமை ஏற்று நடத்த சகோ. சட்னி எஸ்.எம். முஹம்மது லெப்பை இறைமறை ஓத சகோ. ஏ. எம். செய்யது அஹ்மது வருகை தந்த அனைவரையும் அகமகிழ வரவேற்க கூட்டம் இனிதே ஆரம்பமானது.
தலைமையுரை:
இந்த மன்றத்தின் செயற்குழுவிற்கு தலைமை ஏற்று நடத்தி தந்த சகோ.குளம் எம்.ஏ. அஹமது முஹியத்தீன் தனதுரையில், வந்திருக்கும் சிறப்பு விருந்தினரை வரவேற்று பின் “இன்றுடன் இந்த 103-வது செயற்குழு நடக்கிறது, இதுவரை நம்மால் இந்த கூட்டங்களை நடத்த முடிந்தது என்றால், எல்லாம் உங்களின் ஒத்துழைப்பும், நமது ஒற்றுமையும், எல்லாவற்றையும் விட இறைவனின் பெரும் கிருபையும் தான் என்பதில் சந்தேகமில்லை. எனவே வல்லவனுக்கு நன்றி கூறி, உங்களுக்கும் என் நன்றிதனை தெரிவிக்கின்றேன். ஆதலால் நமது இந்த சேவை தொடர வேண்டும் என்றால் சந்தாவில் கவனம் செலுத்த வேண்டும்”.. என்றதுடன், உலக காயல் நல மன்றங்களின் கூட்டமைப்பான இக்ராவிடம் இருந்து கல்விக்கென கடன் வழங்கும் திட்டம் பற்றி வந்த கடிதம் விபரம் கூறி அது சம்பந்தமாக உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை இந்த மன்றத்தில் பதிவு செய்ய வேண்டுமாய் வேண்டி தனதுரையை நிறைவு செய்தார்.
மன்ற செயல்பாடுகள்:
மன்ற செயலாளர் சகோ. சட்னி. எஸ்.ஏ.கே. செய்து மீரான், தாயாகத்தில் இருந்து புனித உம்ரா கடமைதனை நிறைவேற்ற வந்து, இங்கு இந்த மன்றத்தின் அன்பு அழைப்பினை அகமுவந்து ஏற்று, கலந்து சிறப்பித்து தரும், ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தின் (ஜக்வா) பரீசீலனைக்குழு உறுப்பினர் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் எம்.ஏ.அப்துல் வதூத் ஆலிம் பாஸி அவர்களையும், இந்த மன்றத்தின் முன்னால் மூத்த உறுப்பினர் சகோ. எஸ்.ஏ.கே. மீரா சாஹிப் அவர்களையும் வரவேற்று தனதுரையை துவக்கி கடந்த கூட்டத்தில் நடந்த கருத்துப் பரிமாற்றங்களையும், மேலும் நிறைவேற்றிய மன்றப்பணிகள் மற்றும் மன்றம் சார்ந்த நிகழ்வுகளையும், மிக தெளிவுடன் எடுத்துக்கூறி அமர்ந்தார்.
சென்ற கூட்டத்தில் நாம் என்ன கருத்துக்களை இங்கு பதிவு செய்தோம் என்பதை இந்த கூட்டத்தில் சுருக்கமாக, சென்ற கூட்டத்தில் வந்து கலந்து கொள்ளாதவர்களுக்கு நினைவூட்டுகிறேன். என்றும் இக்ராவின் வரும் கல்வி ஆண்டுக்கு கொடுக்கும் சந்தா பற்றியும், உதவித்தொகை, மற்றும் கடன் கொடுப்பது பற்றியும் சுருக்க உரை தந்து நிறைவு செய்தார். மன்றத்தின் மற்றுமொரு செயலாளர் சகோ. எம்.ஏ. செய்து இபுராஹிம்.
நிதி நிலை:
தற்போதைய இருப்பு, பெறப்பட்ட சந்தா மற்றும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவிகள் மேலும் இக்ராவிற்கு வழங்கும் கல்வி உதவித்தொகை போன்ற விபரங்களை பட்டியலிட்டு விளக்கினார் பொருளாளர் சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம்.
மருத்துவ உதவிகள்:
மருத்துவ உதவி வேண்டி ஷிபா மருத்துவ கூட்டமைப்பின் மூலமாக பெறப்பட்ட பயனாளிகளின் விண்ணப்பங்கள், மன்ற தலைவர் சகோ. குளம் எம்.ஏ. அஹ்மது மெய்தீன் முன்னிலையில் முறையே பரிசீலிக்கப்பட்டது. கால் மூட்டு அறுவைச் சிகிச்சை, விபத்தில் பாதிக்கப்பட்டவரின் மணிக்கட்டு அறுவைச்சிகிச்சை, மார்பக புற்றுநோய், முதுகில் புற்றுநோய், நுரையீரல் பாதிப்பால் மூச்சுத் திணறல், நிமோனியா பாதிப்பால் தொடர் சிகிச்சை, அப்பென்டிக்ஸ் அறுவைச் சிகிச்சை, மற்றும் கண் அறுவை சிகிச்சை என நோய் பாதிப்புக்குள்ளான நம் காயல் சொந்தங்கள் மொத்தம் 08 பயனாளிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு அவர்களின் பூரண நல பேற்றுக்காக வல்லோன் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர் உரை:
இந்த மன்றத்தின் செயற்குழுவில் முதன் முதலாக நான் கலந்து கொள்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன். நாம் சம்பாத்தியம் செய்து பணம் ஈட்ட வழி வகைசெய்த அல்லாஹ், அந்த பணத்தை எவ்வாறு நல்வழியில் செலவு செய்தாய் என்று நாளை மறுமையில் நம்மிடம் கேள்வி கேட்பான். அந்த நல்ல வழியை இறைவன் உங்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளான். பொருளாதாரத்தில் ஏற்ற தாழ்வு உண்டு, எல்லோருமே வசதி வாய்ப்போடு இருந்தோமேயானால், நாம் அந்த பொருளை வைத்து ஒன்றும் செய்ய இயலாது போய்விடும். அதனால் நாம் நன்மையும் பெற முடியாது. ஆகையால் தான் தேவையுடையோரை அல்லாஹ் இங்கு நம்மிடம் அனுப்பி வைக்கிறான் என்றால், அல்லாஹ் அவர்களை நாம் நன்மை செய்வதற்கு அனுப்பி வைக்கின்றான். எனவே நாம் தானதருமங்கள் செய்யும்போது உண்டது, உடுத்தது போக, நாம் செய்த அந்த நன்மைகள்தான் நம்மோடு சேர்ந்து கடைசி வரை வரும், பொருள் வராது. நாம் தர்மம் செய்வதோடு நிற்காமல் ஒருவரின் தேவை அறிந்து கடன் கொடுத்து உதவ வேண்டும். அவ்வாறு உதவும் போது அந்த கடன் திரும்ப வரும் வரை பதினேழு மடங்கு நன்மைகளை அல்லாஹ் நமக்கு அளிக்கின்றான். கடன் கொடுக்கும் போது அவன் வாழ்விற்கு துஆ செய்து கொடுக்க வேண்டும். அதற்க்கு மாறாக எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்க கூடாது, அப்படி பார்தோமேயானால் பலன் அடிபட்டுவிடும். என்ற அழகான உரையை ஹதிஸ் சில எடுத்துக்காட்டாக கூறி இங்கிருந்து அவதானிக்கும் போது உங்களின் சேவை மனப்பான்மை என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அல்லாஹ் உங்களுக்கு இப்படி ஒரு நல்ல வாய்ப்பினை தந்துள்ளான் என்று கூறி இதுபோல் தொடர்ந்து சேவை செய்திட துஆ செய்து அமர்ந்தார் ஆலிம் பெரும்தகை அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் எம்.ஏ.அப்துல் வதூத் ஆலிம் பாஸி அவர்கள்.
தீர்மானங்கள்:
1 – உலக காயல் நலமன்றங்களின் கூட்டமைப்பான இக்ராவிடம் இருந்து “கல்விக் கடன் உதவித்தொகை” வேண்டி வந்த கடிதம் சம்பந்தமாக உறுப்பினர்கள் இடையே கருத்துப் பரிமாற்றங்கள் செய்து, நம் மன்றம் அதற்க்கு கொள்கையளவில் ஒத்துக்கொண்டிருக்கிறது.
2 – நடந்து முடிந்த பிளஸ் 2, மற்றும் S.S..L.C. தேர்வுகளில் சிறப்பான நல்ல மதிப்பெண்களை பெற்று நம் காயல் மண்ணுக்கு பெருமை சேர்த்துத்தந்த மாணவக் கண்மணிகளுக்கு இம்மன்றம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் மனதார தெரிவிக்கின்றது.
3 - அடுத்த 104 – வது செயற்குழு மற்றும் 38 – வது பொதுக்குழு கூட்டம், இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் ரமலான் நோன்பு இப்தார் நிகழ்வுடன், ஜூன் திங்கள் 09 – ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 06:00 மணியளவில் ஷரபிய்யா ஆர்யாஸ் உணவகத்தில் வைத்து நடைபெறும், உறுப்பினர்கள் அனைவருக்கும் குறுஞ்ச்செய்தி மூலம் அறிய தந்ததும் அனைவர்களும் குறித்த நேரத்தில் வந்து கலந்து சிறப்பித்துத் தரும்படி அன்புடன் அழைக்கப்படுகிறது.
நன்றியுரை:
சகோ. எம்.டபிள்யூ. ஹாமீது ரிபாய் நன்றி நவில, அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் எம்.ஏ.அப்துல் வதூத் ஆலிம் பாஸி அவர்கள் பிரார்த்திக்க துஆ கஃப்பாராவுடன் உறுப்பினர்களின் நல்ல பல கருத்து பரிமாற்றத்திற்கு பின் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
சகோ. எம்.டபிள்யூ. ஹாமீது ரிபாய், மற்றும் சகோ. இஸ்மாயில் அனுசரணையுடன் இரவு உணவு பரிமாறப்பட்டது.
தகவல் மற்றும் படங்கள்:
எஸ்.ஐச்.அப்துல் காதர்.
எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
30.05.2017.
|