காயல்பட்டினம் கடற்கரையோரம், அரசு நிலங்களை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுமானங்களையும் அப்புறப்படுத்திட, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் கோரிக்கை மனு அளித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரைப் பூங்கா பகுதியின் வடக்கே (சிங்கித்துறை, அண்ணாநகர்) - அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பல்வேறு கட்டுமானங்கள் - நகராட்சி மற்றும் வருவாய்துறையின் ஒப்புதல் இல்லாமல் - அண்மைக் காலமாக உருவாக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பல்வேறு தருணங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் - வருவாய்த்துறை அதிகாரிகளாலும், நகராட்சி அதிகாரிகளாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக - சட்டத்திற்குப் புறம்பாக, அரசு அதிகாரிகளாலேயே அக்குடித்தனங்களுக்கு சகல வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. அரசு நிலங்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர்களின் இந்த அலட்சிய செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
மேலும் இப்பகுதியில் குடிசை அமைத்தவர்களுக்கு ஏற்கனவே - காயல்பட்டினம் கடற்கரையின் தென்பகுதியில் - சில ஆண்டுகளுக்கு முன்பு - சுனாமி குடியிருப்பு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும், இந்த கட்டுமானங்கள் தொடர்ந்து - காயல்பட்டினம் கடற்கரை பகுதியில் இருப்பது, சட்டவிரோத செயலாகும்.
எனவே - காயல்பட்டினம் கடற்கரைப் பகுதியில், அரசு புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள அனைத்து கட்டுமானங்களையும் உடனடியாக அப்புறப்படுத்த - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், திருச்செந்தூர் கோட்டாட்சியர், திருச்செந்தூர் வட்டாச்சியர், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு மனு வழங்கப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: மே 24, 2017; 4:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|