காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் முறையீட்டைத் தொடர்ந்து, கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருசடிக்கு அருகே நடைபெற்று வந்த சாலை அமைக்கும் பணியை, மீன் வளத்துறை நிறுத்திக்கொண்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரையோரம் - பூங்காவிற்கு வடக்கே, சட்டத்திற்குப் புறம்பாக உருவாக்கப்பட்டுள்ள குருசடிக்கு அணுகு சாலை அமைக்கும் பணி - மீன்வளத்துறையால் கடந்த வாரம் துவக்கப்பட்டது.
மீன் படகு இறங்குதள திட்டத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமல் - தென் வடலாக உருவாக்கப்பட்ட சாலைப் பணிகளை நிறுத்தக் கோரி, பல்வேறு துறைகளுக்கு – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக மனுக்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து - பணிகளை உடனடியாக நிறுத்தக் கூறுவதாக, மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, 29.05.2017. திங்கட்கிழமையன்று - தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர், மீன்வளத்துறை அதிகாரிகள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆகியோரிடம் – இது தொடர்பாக “நடப்பது என்ன?” குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டிருந்தது.
மேலும்,
புதுடில்லியில் உள்ள மத்திய சுற்றுச்சூழல் துறை செயலர், சென்னையில் உள்ள மாநில சுற்றுச்சூழல் துறை செயலர், சென்னையில் உள்ள மீன்வளத்துறை ஆணையர், சென்னையில் உள்ள தமிழ்நாடு கடலோர மேலாண்மைக் குழுவின் செயலர், சென்னையில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஆகியோருக்கும் இது தொடர்பாக புகார் மனு அளிக்கப்பட்டது.
இவற்றின் தொடர்ச்சியாக, 30.05.2017. செவ்வாய்க்கிழமையன்று மாலை - சர்ச்சைக்குரிய இடத்தில் பணிகள் - பாதியில் நிறுத்தப்பட்டு, பணிகளுக்கு என நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள் – திரும்பக் கொண்டு செல்லப்பட்டதைக் காண முடிந்தது. இச்சாலைகள் - குருசடிக்கு, சுமார் 200 மீட்டர் இடைவெளிக்கு முன்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை அமைக்கப்பட்டுள்ள சாலையே - சட்டத்திற்கு புறம்பானது என்பது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் அலை எல்லை (HIGH TIDE LINE) - மற்றும் - குறைந்த அலை எல்லை (LOW TIDE LINE) ஆகிய பகுதிகளுக்கு இடையில் (INTER TIDAL ZONE) சாலைகள் அமைப்பதற்கு, CRZ NOTIFICATION 2011 விதிமுறைகள் அனுமதிக்கவில்லை. தற்போது அமைக்கப்பட்டுள்ள சாலை - இடைப்பட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.
சாலைப் பணி நிறுத்தப்பட்டிருந்தாலும், ஏற்கனவே விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள சாலையை அப்புறப்படுத்த, “நடப்பது என்ன?” குழுமம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[பதிவு: மே 30, 2017; 7:15 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|