தமிழக அரசு உத்தரவின் படி, துவக்கப் பள்ளிகளில் இலவச கல்விக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தோருக்கு, நிகழும் ஜூன் மாதம் 05ஆம் நாளன்று சேர்க்கை வழங்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 சட்டப்பிரிவு 12(1)(C) இன் படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவுகளில் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்புகளில் குறைந்தபட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்க வேண்டி விண்ணப்பங்கள் 26.05.2017. வரை இணையத்தளத்தின் வழியே பதிவேற்றம் செய்யப்பட்டன. அவ்விண்ணப்பங்கள் சரிபார்ப்பதற்கான நடைமுறைகள் பின்பற்றி சரிபார்க்கப்பட்டது.
நீட்டிக்கப்பட்ட கால அட்டவணையின்படி, தகுதியான விண்ணப்பங்கள் அதற்கான காரணங்களுடன் 30.05.2017. அன்று பள்ளி தகவல் பலகையில் வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட 8 மழலையர் தொடக்கப் பள்ளிகளிலும், 34 மெட்ரிக் பள்ளிகளிலும் 31.05.2017. அன்று குலுக்கல் முறையில் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன் பொருட்டு கல்வித்துறை சார்ந்த பிரதிநிதி ஒருவரும், மாவட்ட ஆட்சித்தலைவரால் நியமனம் செய்யப்படும் பிரதிநிதி ஒருவரும், ஒவ்வொரு பள்ளிக்கும் அனுப்பி வைக்கப்படுவர். சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ள குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பள்ளி முதல்வர் முன் குலுக்கல் நடைபெறும்.
முதலாவதாக வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினர்களான ஆதரவற்றவர்கள் / எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் / மூன்றாம் பாலினத்தவர் / துப்புரவுத் தொழிலாளியின் குழந்தைகள் / மாற்றுத் திறனாளிகளாக உள்ள குழந்தைகள் போன்றோரிடமிருந்து பெறப்பட்ட தகுதியான விண்ணப்பங்கள் குலுக்கல் இன்றி சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்படும்.
அதன் பின்னர் மீதமுள்ள இடங்களுக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருப்பிடத்தில் வசிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களைக் கொண்டு குலுக்கல் நடத்தப்படும். அவ்வாறு குலுக்கல் நடத்தப்பட்ட பின்னரும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் காலியிருப்பின், ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கும் அதிகமாக இருப்பிடத்தில் வசிக்கும் குழந்தைகளிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களைக் கொண்டு குலுக்கல் நடத்தப்படும்.
ஒவ்வொரு பள்ளிக்கும் நுழைவுநிலை வகுப்பின் ஒவ்வொரு பிரிவிற்கும் (Section) 5 இடங்கள் வீதம் காத்திருப்புப் பட்டியல் குலுக்கல் முறையில் தயார் செய்யப்படும். குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட குழந்தைகள் பள்ளியில் சேரவில்லையெனில் காத்திருப்புப் பட்டியலிலிருந்து சேர்க்கை வழங்கப்படும்.
சேர்க்கைக்கு தொpவு செய்யப்பட்ட குழந்தைகள் பட்டியல் 31.05.2017 அன்று பள்ளித் தகவல் பலகையில் வெளியிடப்படும். மேலும் தெரிவு செய்யப்பட்ட குழந்தைகள் 05.06.2017க்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேர்க்கை வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|