காயல்பட்டினம் கடற்கரையை சுத்தமாக வைத்தல், வாகன நிறுத்தத்தை சீர்படுத்தல் ஆகியன குத்தகைக் காரர்களின் பொறுப்பு என நிபந்தனை விதிக்க - நகராட்சியிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் கோரிக்கையளித்துள்ளது. அக்கோரிக்கைகளின் மீது ஆவன செய்வதாக நகராட்சி ஆணையர் உறுதியளித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
“நடப்பது என்ன?” சமூக ஊடக குழுமம் நிர்வாகிகள் - காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திரு. பொன்னம்பலம் அவர்களை 31.05.2017. அன்று சந்தித்து நகராட்சி தொடர்பான பல்வேறு கோரிக்கைகளைச் சமர்ப்பித்தனர்.
காயல்பட்டினம் கடற்கரை சேவைகளுக்கான குத்தகை
காயல்பட்டினம் கடற்கரை மணற்பரப்பில் கடைகள் வைத்துள்ளவர்களிடம் கட்டணம் வசூல் செய்யவும், கடற்கரையில் வாகனங்கள் நிறுத்துவோரிடம் கட்டணம் வசூல் செய்யவும் விடப்பட்டிருந்த குத்தகை முடிந்துவிட்டதாகத் தெரிகிறது. இந்த ஏலங்களைப் புதுப்பிப்பதற்கு முன்பு கீழ்க்காணும் நிபந்தனைகளையும் இணைத்திட பரிசீலனை செய்யும்படி ஆணையரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
(1) கடற்கரையோரம் கடைகள் வைப்பவர்களிடம் கட்டணம் வசூல் செய்யும் உரிமைதாரரே கடல் மணற்பரப்பை சுத்தமாக வைத்திட பொறுப்பாளி. அவ்வாறு கடற்கரை சுத்தமாக இல்லை என பொதுமக்களிடம் இருந்து புகார் வரும் பட்சத்தில், அவரின் உரிமம் ரத்து செய்யப்படவேண்டும்
(2) கடற்கரையோரம் வாகனங்கள் நிறுத்துவோரிடம் கட்டணம் வசூல் செய்யும் உரிமைதாரர், அந்த வாகனங்கள் முறைப்படி நிறுத்தப்பட பொறுப்பாளி. அவ்வாறு வாகனங்கள் முறையாக நிறுத்தப்பபடவில்லை என பொதுமக்களிடம் இருந்து புகார் வரும் பட்சத்தில், அவரின் உரிமம் ரத்து செய்யப்படவேண்டும்.
மேலும் - வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வசூல் தொகை, பொது மக்களின் பார்வைக்கு, அறிவிப்பு பலகையாக வைத்திடவும் ஆணையரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
நகராட்சியிடம் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலுவையில் உள்ள பணிகள்:
(1) பழுதடைந்துள்ள பெரிய நெசவு தெரு சாலையை புனரமைத்தல்
(2) பழுதடைந்துள்ள எல்.கே.லெப்பை தம்பி சாலையை புனரமைத்தல்
(3) பேருந்து நிலையத்தில் IN / OUT அறிவிப்புகள், இரு வாயில்களிலும் நிறுவுதல்
(4) பேருந்து நிலையம் வாயிலுக்கு அருகே திறந்த நிலையில் உள்ள குழியை மூடுதல்
(5) பேருந்து நிலையத்தில் CCTV கேமரா பொருத்துதல்
(6) பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கழிவறைகளை பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடுதல்
(7) கடற்கரையில் உள்ள கழிவறைகளை பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடுதல்
(8) நகரில் நிலவும் நாய்களின் தொல்லைகளை கருத்தில் கொண்டு DOG SHELTER அமைத்தல்
(9) குடிநீர் விநியோகிக்கப்படும் தேதியை அனைத்து பகுதிகளுக்கும் முற்கூட்டியே அறிவித்தல்
(10) பகுதி வாரியாக, குப்பைகளை அல்ல நியமனம் செய்யப்பட்டுள்ள பணியாளர்களின் விபரத்தை பொது மக்களுக்கு அறிவிப்பு செய்தல்
(11) நகரின் பல்வேறு பகுதிகளில் (ரெட் ஸ்டார் சங்கம் அருகில், ஆயிஷா ஸித்தீக்கா மதரஸா அருகில், எல்.எப்.சாலை பகுதியில், மொகுதூம் பள்ளி அருகில் உட்பட பல்வேறு பகுதிகளில் ) குடிநீர் திறந்துவிடப்படும் போது எல்லாம், குடிநீர் குழாய் உடைந்து - குடிநீர் வீணாவதை தடுக்க நிரந்தர தீர்வு
நகராட்சி இணையதளத்தில் தனி அலுவலர்களால் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை பதிவேற்றம் செய்தல்
நகராட்சியில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், அவை நிறைவேற்றப்பட்டு - ஒரு மாதத்திற்குள் இணையதளத்தில் வெளியிடப்படவேண்டும். ஆனால் - செப்டம்பர் 2016க்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவுமே இணையதளத்தில் இதுவரை வெளியிடப்படவில்லை. இது போல - நகராட்சியின் நிதி நிலை விபரங்கள், 3 - 6 மாதங்களுக்கு ஒரு முறை இணையதளத்தில் வெளிப்படவேண்டும். அவ்வாறு காயல்பட்டினம் நகராட்சியின் இணையதளத்தில் வெளிப்படுவதில்லை.
எனவே - நகராட்சி குறித்த அனைத்து அடிப்படை மற்றும் முக்கிய தகவல்களை - விதிமுறைகள் கூறுவதுபடி - இணையதளத்தில் வெளியிட ஆணையரை கேட்டுக்கொள்ளப்பட்டது.
நிலுவையில் உள்ள வழக்குகள்
காயல்பட்டினம் நகராட்சி சம்பந்தப்பட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கீழ்காணும் அவ்வாறான வழக்குகளை துரிதமாக முடிவுக்கு கொண்டு வர ஆணையரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
(1) 43 சாலைகள் குறித்த வழக்கு: சட்டத்திற்கு புறம்பாக, உறுப்பினர்கள் தயாரித்த மதிப்பீட்டினை அடிப்படையாக கொண்டு நடந்த கூட்டத்திற்கு - சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கிய தடை
(2) கொம்புத்துறை பகுதியில் குப்பைகள் கொட்டுவது சம்பந்தமான வழக்கு: மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்த எந்த நிபந்தனைகளையும் அமல்படுத்தாமல் குப்பைகளை கொட்டியதால், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல கிளை வழங்கிய தடை
(3) தற்காலிக ஊழியர் செந்தில் குமார் பணிநீக்கம் குறித்த வழக்கு: காயல்பட்டினம் நகராட்சியில் பணிபுரிந்து வந்த தற்காலிக ஊழியர் செந்தில் குமார், தவறான தகவல்களை நீதிமன்றத்தில் வழங்கி - தன் பதவி நீக்கத்திற்கு தடை வாங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழக்கு
(4) நகராட்சி நிலங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்த வழக்கு: காயல்பட்டினம் நகராட்சிக்கு சொந்தமான நிலங்களை (எல்.எப்.சாலை அருகே) தனியார் ஆக்கிரமித்ததை அப்புறப்படுத்த கோரிய வழக்கு (திருச்செந்தூர்/தூத்துக்குடி நீதிமன்றங்களில்) நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது
(5) சி-கஸ்டம்ஸ் சாலை ஆக்கிரமிப்பு: சி-கஸ்டம்ஸ் சாலையில் உள்ள சில தனியார்கள் மூலமான ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கிய வழங்கிய தடை குறித்த வழக்கு
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: மே 31, 2017; 3:45 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|