சஊதி அரபிய்யா – தம்மாம் காயல் நல மன்றம், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் இணைந்து, ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பு (Spoken English Class) நடத்தின. இதில், 45 மாணவ-மாணவியர் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
தற்போதைய கால கட்டத்தில் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஆங்கிலம் பேசக்கற்றுக் கொள்வதென்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆங்கிலம் சரளமாக பேசத் தெரியாததால் கடந்த தலைமுறையினர் படும் பாட்டையும், இன்றைய தலைமுறையினர் படும் பாட்டையும் நாமறிவோம். அது மட்டுமல்ல ஏராளமான மாணவர்கள் தமக்குள் திறமையிருந்தும் ஆங்கிலம் பேசத்தெரியாததால் கல்லூரிகளில் பின்னடைவை சந்திப்பதையும்,பட்டப்படிப்பை முடித்து விட்டு பணிக்குச் செல்கையில் நேர்காணலில் (Interview) தோல்வியடைந்து மனம் வருந்துவதையும், பணிசெய்யும் நிறுவனங்களில் பதவி உயர்வு (promotion) கிடைப்பதற்கு ஆங்கிலம் பேசத் தெரியாதது ஒரு தடையாக இருந்து வருவதையும் காணமுடிகிறது. இந்த அவல நிலை வருங்கால சமுதாயத்திற்கு ஏற்படக் கூடாது என்பதை மனதிற்கொண்டு தம்மாம் காயல் நற்பணி மன்றமும், இக்ராஃ கல்விச் சங்கமும் இணைந்து 2017 SUMMER SPOKEN ENGLISH COACHING PROGRAM (மாணவ- மாணவியர்களுக்கு தனித்தனியாக பயிற்சி வகுப்புகள்) பள்ளிகளின் கோடை விடுமுறையில் நடத்தியது.இதில் மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இந்த கோடை கால ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்பு கடந்த 24-04-2017அன்று மாணவிகளுக்கும், 01-05-2017 அன்று மாணவர்களுக்கும் துவங்கியது. நிகழ்ச்சியின் துவக்கமாக தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவரும், இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூத்த செயற்குழு உறுப்பினருமான ஹாஜி எம்.ஐ.மெஹர் அலி அவர்கள், தம்மாம் காயல் நல மன்றமும், இக்ராஃ கல்விச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சியின் நோக்கம், இதன் முக்கியத்துவம், ஆங்கிலம் சரளமாக பேசத் தெரிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும், எதிர்காலத்தில் கல்லூரிகளுக்கு பயிலச் செல்லும் போதும், நிறுவனங்களுக்கு பணியாற்ற செல்லும் போதும் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் கலந்து கொண்ட மாணவர்களுக்கு விரிவாக விளக்கி, தங்கள் காலத்தில் கிடைக்காத, தற்போதைய மாணவ சமுதாயத்திற்கு கிடைத்துள்ள இந்த நல்ல வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்திக் கொண்டு பலனடையுமாரும், பல சிரமங்களுக்கு மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த வகுப்புகளுக்கு குறித்த நேரத்தில் வருகை தர வேண்டியதன் அவசியம் குறித்தும் அறிவுரை வழங்கினார்.
இந்த துவக்க நிகழ்ச்சிக்கு தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் தலைவரும், இக்ராஃ கல்விச் சங்கத்தின் துணைத்தலைவருமான ஹாஜி எஸ்.ஏ.அஹமது ரஃபீக் மற்றும் இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயலர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனைத்தொடர்ந்து கல்லூரி துணைப் பேராசிரியர் திரு R.உதயவேல் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தினார்.
இந்த ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்பு மாணவிகளுக்கு கடந்த 24-04-2017 முதல் 24-05-2017 வரை (காலை 8 மணி முதல் 10:30 வரை) தைக்கா தெருவிலுள்ள ஆயிஷா நலைன் அவர்களது இல்லத்தின் ஆங்கிலப் பயிற்சி வகுப்பறையிலும், மாணவர்களுக்கு 01-05-2017 அன்று முதல் 25-05-2017 வரை (காலை 9:15 முதல் 11:45 வரை) கீழ நெயினா தெருவில், இக்ராஃ அலுவலகத்திக்கு எதிரே உள்ள கலீஃபா அப்பா தைக்கா வளாகத்திலும், நடை பெற்றது.இதில் 30 மாணவர்களும், 15 மாணவியர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
நிகழ்ச்சி குறித்தும், நிறை- குறைகள் குறித்தும் கருத்துக் கேட்டு மாணவ-மாணவியரிடம் கருத்துக் கேட்புப் படிவம் (Feedback Form) அளிக்கப்பட்டு கருத்துக்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகள் நன்முறையில் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த spoken English course தங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைந்திருந்ததாகவும், பயிற்சியாளர் திரு R.உதயவேல் மற்றும் ஆயிஷா நலைன் ஆகியோர் மிகவும் அழகான முறையில், தெளிவாக புரியும் படி பாடம் நடத்தியதாகவும், துவக்கத்தில் மிகவும் தயங்கிய தங்களுக்கு தற்போது தயக்கமின்றி ஆங்கிலம் பேச ஊக்கம் கிடைத்துள்ளதாகவும் , ஆங்கில நூற்கள் வாசிக்க ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த கோடை விடுமுறையில் தாங்கள் பயனுள்ள வகையில் நேரத்தை செலவிட்டதில் மகிழ்ச்சியடைவதாகவும், வழங்கப்பட்ட Spoken English Materials மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், இந்த பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்த தம்மாம் காயல் நற்பணி மன்றத்திற்கும், இக்ராஃ கல்விச் சங்கத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த பயிற்சி வகுப்பின் இறுதி நாளன்று இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.முஹம்மது இத்ரீஸ், தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவரும், இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூத்த செயற்குழு உறுப்பினருமான ஹாஜி எம்.ஐ.மெஹர் அலி, இக்ராஃ கல்விச் சங்கத்தின் இணைச் செயலர் ஹாஜி ஏ.எம்.எம்.இஸ்மாயில் நஜீப் மற்றும் பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.கடந்த பல வாரங்களாக நடைபெற்ற இந்த ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களை ஆங்கிலத்தில் பேசச் செய்து கேட்டுக் கொண்டிருந்ததோடு அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அனைவரும் கரவொலி எழுப்பி பாராட்டினர்.
அதனைத் தொடர்ந்து பேசிய டாக்டர் முஹம்மது இத்ரீஸ் அவர்கள், ''இங்கு பேசிய மாணவர்கள் சிலர் தயக்கத்துடனும், சிலர் தயக்கமின்றியும் பேசினர். அருமையாகப் பேசினர். மாணவர்கள் தயக்கம் காட்ட தேவையில்லை. இங்கு அமர்ந்திருப்பவர்கள் எவரும் வெளிநாட்டினரோ, ஆங்கிலேயர்களோ இல்லை.எல்லோரும் நம்மில் உள்ளவர்கள்தான். எனவே தயங்காமல் பேசுங்கள்.உங்கள் நண்பர்களுக்குள், குடும்பத்தினருக்குள் ஆங்கிலம் பேசி பழகுங்கள்.தப்பாக பேசினாலும் பரவாயில்லை.தயங்காமல் பேசுங்கள். காலப் போக்கில் பிழையின்றி பேசிவிடலாம்'' என்று கூறி ஊக்குவித்ததோடு, தற்போதைய கால கட்டத்தில் ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக அதே சமயம் நகைச்சுவையுடன் மாணவர்களுக்கு புரியும் படி விளக்கினார். அதனைத் தொடர்ந்து இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைவர்களுக்கும் மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்துக் கொள்வதாக கூறி, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்பை நடத்திய கல்லூரி துணை பேராசிரியர் திரு R.உதயவேல் அவர்களுக்கும் தம்மாம் காயல் நற்பணி மன்றம் மற்றும் இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இறுதியாக திரு R.உதயவேல் அவர்களுக்கு இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது, மூத்த செயற்குழு உறுப்பினர்கள் ஹாஜி.எம்.ஐ.மெஹர் அலி, டாக்டர் முஹம்மது இத்ரீஸ் ஆகியோரால் நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்த பயிற்சி வகுப்புக்கு தினமும் மிகவும் சரியான நேரத்தில் (Punctuality) வருகை தந்த 7 மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.
இறுதியாக பயிற்சி பெற்ற மாணவர்களில் சிலர் ஆசிரியருடன் குழுவாக இணைந்து படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த பயிற்சி வகுப்புக்கு மாணவர்களிடமிருந்து ரூபாய் 400 மட்டும் கட்டணமாக பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.மீதமுள்ள கட்டணங்கள் மற்றும் செலவுகளை தம்மாம காயல் நற்பணி மன்றம் பொறுப்பேற்றுக் கொண்டது.ஏழ்மையான சில மாணவர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் file, Pen, Notes, course kit, Refreshments வழங்கப்பட்டது. இந்த 2017 SUMMER SPOKEN ENGLISH COACHING PROGRAM ஏற்பாடுகளை இக்ராஃ நிர்வாகி A.தர்வேஷ் முஹம்மது, அலுவலகப் பொறுப்பாளர் மஹ்மூது புஹாரி ஆகியோர் செய்திருந்தனர்.
இதே போன்ற SUMMER SPOKEN ENGLISH COACHING PROGRAM துவக்கமாக 2014 ஆம் வருடம், தம்மாம் காயல் நற்பணி மன்றம் மற்றும் இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில் 28-04-2014 முதல் 28-05-2014 வரை ஒரு மாத காலம் நடை பெற்றது என்பதும்,இதில் மாணவர்களுக்கு காலை 9:15 முதல் 11:15 வரை மற்றும்11:30 முதல் மதியம் 01:30 வரை இரண்டு கட்டங்களாக பைபாஸ் சாலையில் உள்ள நுஸ்கியார் முதியோர் இல்ல அரங்கிலும், மாணவியருக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரை சொளுக்கார் தெருவிலுள்ள காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரியிலும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை தைக்கா தெருவிலுள்ள ஆயிஷா நலைன் அவர்களது இல்லத்தின் ஆங்கிலப் பயிற்சி வகுப்பறையிலும் நடை பெற்றதும், அதில் 100 -க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் கலந்து பயனடைந்ததும், சென்ற வருடமும் (2016) இதே போன்ற SUMMER SPOKEN ENGLISH COACHING PROGRAM நடைபெற்று ஏராளமான மாணவ-மாணவியர் பயனடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|