காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில், ஆண் உள்நோயாளிகளுக்கான – 24 படுக்கைகள் கொண்ட பிரிவு, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும அனுசரணையில் புனரமைக்கப்பட்டு, 05.06.2017. திங்கட்கிழமையன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
24 படுக்கைகள் கொண்ட, காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் ஆண்கள் பிரிவு நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில், பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வந்தது. இதனால் - *உள்நோயாளிகளுக்கு இடம் இல்லாமல், ஒரு படுக்கையை, இருவர் பயன்படுத்தும் சூழல் சில நேரங்களில் நிலவி வந்தது*. இது சம்பந்தமான தகவல் மற்றும் கோரிக்கை மருத்துவமனை தரப்பில் இருந்து, நடப்பது என்ன? குழுமத்திடம் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து - கடந்த சில தினங்களாக, *அரசு மருத்துவமனையின் ஆண்கள் பிரிவில் மராமத்து வேலைகள், நடப்பது என்ன? குழுமத்தின் ஏற்பாட்டில் நடந்தன. அப்பணிகள் நிறைவுற்றபின், மருத்துவமனையின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்திற்கு வர்ணம், படுக்கைகளைக்கு வர்ணம் பூசப்பட்டு* - 05.06.2017. திங்கட்கிழமையன்று பயன்பாட்டிற்கு, எளிய நிகழ்ச்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.
அன்று காலை 11:30 மணியளவில் நடந்த நிகழ்ச்சிக்கு, முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் தலைமை தாங்கினார். மருத்துமனையின் நிலைய மருத்துவர் டாக்டர் ராணி டப்ஸ், நடப்பது என்ன? குழுமத்தின் மூத்த உறுப்பினர் ஹாஜி எஸ்.ஏ. மொஹிதீன், சமூக ஆர்வலர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர், சமூக ஆர்வலர் ஏ.கே.எம். முஹம்மது தம்பி ("ஏ.கே.எம்.ஜூவல்லர்ஸ்"), காயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் டாக்டர் ஹில்மி* ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நடப்பது என்ன? குழுமத்தின் நிர்வாகிகளில் ஒருவர் எஸ்.கே. ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். துவக்கமாக ஹாபிழ் எம்.என்.புஹாரி - இறைமறையில் இருந்து வசனங்களை ஓதினார். அஹமது சுலைமான் அனைவரையும் வரவேற்றார்.
ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகிர், புனரமைக்கப்பட்ட வளாகத்தைத் திறந்து வைத்தார்.
தொடர்ந்து - நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா சேக், தலைமையுரை நிகழ்த்தினார். டாக்டர் ராணி டப்ஸ், டாக்டர் ஹில்மி, ஹாஜி எஸ்.ஏ.தஸ்தஹிர், ஹாஜி எஸ்.ஏ.முஹைதீன் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினர்.
மருத்துவ துறையில், குறிப்பாக அரசு மருத்துவமனைக்கு என நடப்பது என்ன? குழுமம் இதுவரை செய்துள்ள பணிகள் குறித்தும், இறைவன் நாடினால் - வரும்காலங்களில் செய்திட திட்டமிட்டுள்ள பணிகள் குறித்து ஹாபிழ் எம்.எம்.முஜாஹித் அலி விளக்கினார்.
மருத்துவமனை தரப்பில் நிகழ்ச்சியின் போது எடுத்துவைக்கப்பட்ட கோரிக்கைகள், முடிந்த அளவில் அரசு மூலமாகவும், முடியாத பட்சத்தில் நடப்பது என்ன? குழுமம் வாயிலாகவும் நிறைவேற்ற முயற்சிசெய்யப்படும் என்ற உறுதி வழங்கப்பட்டது.
MEGA அமைப்பின் தலைவர் மற்றும் நடப்பது என்ன? குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் பி.எம்.ஏ.சதக்கத்துல்லாஹ்* அனுசரணையாளர்களுக்கு நன்றி தெரிவிக்க, நிகழ்ச்சி நிறைவுற்றது. பின்னர், அனைவரும் – புனரமைக்கப்பட்ட ஆண் உள்நோயாளிகள் பிரிவைப் பார்வையிட்டனர்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஜூன் 5, 2017; 6:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|